ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~ 176 /26-01-2026 வானரப்படை...
★ராமனின் தம்பி லட்சுமணன் கோபத்துடன் வில் அம்புடன் இங்கு வந்திருக்கிறான் என்ற செய்தியை கேட்டதும் சுக்ரீவன் நான் தவறு ஏதும் செய்து விடவில்லை. எனது நெருங்கிய நண்பர்களாகிய ஶ்ரீராமரும் லட்சுமணரும் என் மேல் ஏன் கோபம் கொள்கிறார்கள்?.. யாரோ விரோதிகள் ஏதோ சொல்லி அவர்களுடைய மனதை கெடுத்து இருக்க வேண்டும் என்றான் சுக்ரீவன். அதற்கு அனுமன் அரசே! ராமனுக்கு நாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தாமதம் செய்து விட்டோம். ராமருடைய துயரத்தை நாம் மறந்து விட்டோம். இந்த செயல் இப்போது சிறிது அபாயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. ஆகவே லட்சுமணனிடம் மன்னிப்பு கேட்டு இனி தாமதப்படுத்தாமல் ராமருக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் பாருங்கள் என்றார் அனுமன். ★ராமருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது என்பதை அறிந்த சுக்ரீவன் ஶ்ரீ ராமரை நினைத்து மிகவும் பயந்தான். லட்சுமணனை சகல மரியாதையுடன் அரசவைக்கு உள்ளே அழைத்து வருமாறு தனது சேவகர்களுக்கு அவன் கட்டளை யிட்டான்.தாரையின் பேச்சால் கோபம் குறைந்திருந்த இளவல் லட்சுமணனை அழைத்துக் கொண்டு தாரை உள்ளே நுழைந்ததும் சுக்ரீவன் தனது ஆசனத்தில் இருந்து இறங்கி வந்தான். முதலில் நான் எந்த குற்றம் செய்திருந்தாலும் மன்னிக்க வேண் டும் என்று லட்சுமணனிடம் கேட்டுக் கொண்டு பேசத் துவங்கினான். ★ராமருடைய நட்பினாலும் வீரத்தா லும் நான் இந்த ராஜ பதவியை அடைந்தேன். ராமன் எனக்கு செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். ராமருடைய பராக்கிரமத்தை நன்கு அறிந்தவன் நான். என் துணை இல் லாமலே பகைவர்களை வோரோடு அழிக்கும் பலம் ராமருக்கு உண்டு என்று எனக்கு நன்றாகத் தெரியும். நான் என் சேனைகளுடன் அவரை தொடர்ந்து செல்வேன். சீதையை தேடுவதற்கு ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும். நான் செய்த சிறிய தாமதத்தை மன்னித்து விடுங்கள் என்று லட்சுமணனிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டான். ★இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த லட்சுமணன், ராமர் இருக்கும் இடத் திற்கு வந்து இந்த செய்தியைச் சொல்லி அவரின் துக்கத்தை போக்குங்கள் என்று சுக்ரீவனிடத்தில் கேட்டுக் கொண்டான். சுக்ரீவன் இளவல் லட்சுமணனுடன் ராமர் இருக்கும் இடம் சென்று அவரின் கால்களில் விழுந்து வணங்கி இந்த நல்ல செய்தியை சொல்லி அவரை திருத்திப் படுத்தினான். ஶ்ரீராமர் மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினார். உன்னை போன்ற உயர்ந்த நண்பன் உலகத்தில் வேறொருவன் இல்லை. மேகங்கள் மழை பெய்து பூமியை குளிரச் செய்தது போல் என்னுடைய உள்ளத்தை அன்பால் குளிரச் செய்துவிட்டாய். ★உன் நட்பை பெற்றது என்னுடைய பாக்கியம். இனி ராவணன் அழிவது நிச்சயம் என்று ராமர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுக்ரீவன் சொல்லி அனுப்பிய அனைத்து வானர கூட்டங்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். பல்வேறு நிறமும் வடிவங்களும் கொண்ட அந்த வானரங்கள் மொத்தமாக வந்ததில் எழுந்த தூசியானது வானத்தை மறைப்பது போல் இருந்தது.ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். இந்த கோடிக்கணக்கான அபூர்வ பலம் கொண்ட வானர சேனைகள் அனைவ ரும் உங்களுடைய சேனைகள். இன்னும் படைகள் வந்து கொண்டு இருக்கின்றன. ★நீங்கள் இடும் ஆணையை குறை ஏதும் இல்லாமல் செய்யும் பலம் மிக்கவர்கள் இந்த வானரர்கள். இவர்கள் அனைவரையும் உங்களு டைய சேனைகளாகக் கருதி தற்போது தங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய உத்தர விடுங்கள், அவர்கள் செய்து முடிப் பார்கள் என்று சொல்லி முடித்தான் சுக்ரீவன். அனுமன் எங்கே? என்று ராமர் கேட்டார். சுக்ரீவன், அனுமன், படைகளை திரட்டிக் கொண்டு வரச் சென்றுள்ளான், முழு படைகளையும் திரட்டி கொண்டு வருவான் என்றான். அதைக் கேட்ட ராமர் மிகுந்த மகிழ்ச்சி யடைந்து சுக்ரீவனை அணைத்துக் கொண்டார். ★ராமர் பேச ஆரம்பித்தார். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, சீதை எங்கே இருக்கின்றாள்? அவளை தூக்கிச் சென்ற ராவணன் எங்கே இருக்கின்றான்? என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். இப்போது இங்கு உள்ள வானர படைகளுக்கு உத்தரவிட வேண்டியது வானரங்க ளின் அரசனான நீ தான் சுக்ரீவா!. நானும் லட்சுமணனும் அல்ல. எல்லா வற்றையும் அறிந்து செய்ய வேண் டியதை நன்கு செய்யத் தெரிந்தவன் நீ. உன் திட்டப்படியே நடக்கட்டும் என்றார் ராமர்.அங்கு வானர படைகள் பல்வேறு திசைகளில் இருந்து வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வானரங்களாக தெரிந்தன. திரண்டு வந்த வானர படைகளை பற்றி காண்போம். வணக்கத்துடன் நாக சுபராஜராவ் 9944110869. நாளை..................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtDwLB1N56y1vbQiL%3DfAHoztMThc9Np8ajvZxrS134XEg%40mail.gmail.com.
