ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~~~~ 181 / 31-01-2026
அங்கதனைத் தேற்றிய வாயுபுத்திரன் அனுமன்... ★அனுமன் எவ்வளவு ஆறுதல் கூறியும் அங்கதனும் மற்றைய வானர வீரர்களும் சிறிதுகூட கேட்கவில்லை. நாம் இன்னும் சீதையை கண்டுபிடிக்கவில்லை என்ற செய்தி ராமருக்கு தெரிய வந்தால் அவர் மிகவும் வேதனை கொள்வாரே? நாம் சீதையை கண்டுபிடிக்காமல் எவ்வாறு நாடு திரும்ப முடியும் என பலவாறு புலம்பி கவலையுற்றனர். அந்த சமயத்தில் அங்கதன் தனது வீரர்களிடம், நாம் ராமரிடம் சீதையை நிச்சயமாக கண்டு பிடித்துவிட்டு வருவோம் என அவரிடம் ஆணையிட்டு வந்தோம். ஆனால் நம்மால் அக்காரியத்தை செய்து முடிக்க முடியவில்லை. ★நமக்கு சுக்ரீவன் கொடுத்த கால அவகாசமும் முடிந்து விட்டது. இதற்கு மேலேயும் நம்மால் சீதையை கண்டுபிடிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இல்லை. ராஜா சுக்ரீவன் நமக்கு கொடுத்த கட்டளையை செய்து முடிக்கவில்லை என்று நம்மை தண்டிப்பான். நாம் சீதையை தேடி கண்டுபிடிக்க முயற்சித்தும் முடியவில்லை என்ற செய்தி ராமர் அறிந்து மிகவும் வருத்தம் கொள்வார். இதையெல்லாம் நாம் கண்ணால் பார்ப்பதற்கு பதில், நம் உயிரை இங்கேயே மாய்த்துக் கொள்ளலாம். இதற்கு உங்களின் கருத்து என்ன? என்று கேட்டான். ★அங்கதன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ஜாம்பவான், வானர இளவரசனே! வீரனே! உன் கருத்துக்கள் சிறப்பானது. நீ உன் உயிரை மாய்த்துக் கொண்ட பின் நாங்கள் மட்டும் உயிரோடு இருப்போமா என்ன? இல்லை, கிஷ்கிந்தைக்கு சென்று நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி ராமனின் திருவடியிலும், சுக்ரீவனின் திருவடியிலும் வீழ்ந்து உயிர் வாழ்வோம் என நினைத்தாயா? நாங்கள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பயன்? ஆதலால் நாங்களும் எங்கள் உயிரை மாய்த்து கொள்வோம். ஆனால் நீ எங்களுக்கு ஓர் சத்தியம் செய்ய வேண்டும். நாங்கள் இறந்த பின் நீ உயிர் வாழ வேண்டும். இது எங்களின் விருப்பம் ஆகும் என்றான். ★அதற்கு அங்கதன், நீங்கள் எல்லோரும் மாண்டு போன பின் நான் உயிருடன் நாடு திரும்புவது நன்றல்ல. அதனால் நாம் அனைவரும் உயிரை துறப்போம் என்றான். இதைக்கேட்ட ஜாம்பவான், அங்கதனே! நீ அரச பதவிக்கு உரியவன். ஆதலால் தான் உன்னை உயிருடன் நாடு திரும்ப சொன்னேன் என்று கூறினான். இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த அனுமன், நாம் அனைத்து உலங்களிலும் இன்னும் சீதையை தேடி முடிக்கவில்லை. சீதையை தேடி கண்டுபிடித்து ராமரிடம் ஒப்படைப்பதுதான் நம் கடமையும், வீரமும் ஆகும். ★நாம் சுக்ரீவன் குறித்த காலத்திற்குள் சீதையை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. குறித்த காலத்திற்குள் திரும்பி வராததால் நாம் இன்னும் மாதா சீதையை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை நம் சுக்ரீவன் நன்கு புரிந்து கொண்டு இருப்பான். ஆதலால் நாம் சீதையை தேடிச் செல்வது தான் சிறந்தது என உரையாற்றினான். அனுமன் அங்கதனிடம் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்வோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று தைரியம் கூறினார். கடற்கரையில் கும்பலாக உணவில்லாமல் அமர்ந்திருந்த வானரங்களை அருகில் மலை மீதிருந்த கழுகரசன் சம்பாதி பார்த்துக் கொண்டிருந்தான். ★சிறகுகள் இழந்து பறக்க முடியாமல் பட்டினியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த கழுகரசன் சம்பாதி இத்தனை வானரங்கள் உணவில்லாமல் பட்டினியால் ஒரே இடத்தில் இறந்து போகப் போகின்றார்கள். நமக்கு இன்று உணவு சுலபமாக கிடைத்து விட்டது என்று எண்ணி அவன் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.அப்பொழுது வானரங்கள் ஒருவருக்கொருவர் தசரதன் இறந்தது முதல் ராமர் காட்டிற்கு வந்தது, சீதையை ராவணன் தூக்கிச் சென்றது, ஜடாயு கழுகு இறந்தது, என்று அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பேச்சில் ஜடாயு இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்டதும் திடுக்கிட்டது கழுகு. ★அங்கதனிடம் தொடர்ந்து பேசிய அனுமன், சீதையை அந்த ராவணன் கவர்ந்துசென்றபோது, ஜடாயு அவனிடம் போரிட்டு உயிர் துறந்தார். அதுபோல நாம் மாதா சீதையை தேடும்போது உயிர் துறக்க நேரிட்டால் அது தான் சிறப்பு. அதை விட்டுவிட்டு சீதையை கண்டுபிடிக்கவில்லை என்று தமது உயிரை மாய்த்து கொள்வது தான் ஓர் வீரனின் சிறப்பா? என்றான். இப்படி அனுமன் பேசிக் கொண்டிருக்கும் போது, சற்று தொலைவில் ஓர் மலையில் அமர்ந்திருந்த சம்பாதி என்ற கழுகின் அரசன், தம் தம்பி ஜடாயு இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான். ஜடாயுவை நினைத்து புலம்பி அழுதான். ★எனது தம்பி ஜடாயு இறந்து விட்டானா? என்று அது பற்றி மேலும் தெரிந்து கொள்ள கழுகரசன் சம்பாதி ஆர்வம் அடைந்தது. என் அன்புக்குரிய அருமை தம்பி ஜடாயு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் யார்? நடந்தது என்ன? என்று விவரமாக சொல்லுங்கள் என்று மலை மீதிருந்து கத்தியது. அனுமன் பறக்க முடியாமல் இருந்த கழுகை கீழே தூக்கிவர ஒரு வானரத்தை கேட்டுக் கொண்டார். கீழே வந்த அந்த கழுகரசன் சம்பாதி பேசத் தொடங்கியது. வணக்கத்துடன நாக சுபராஜராவ் 9944110869. நாளை................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtQPDGMz0tFNBdM-NM5LvkVuuU93XUp5hOY-vtya0NLgg%40mail.gmail.com.
