Courtesy: சுடுகாட்டு சித்தன்

வயதான அம்மா, அப்பாவை வீட்டில் தனிமையில் விட்டு விட்டு, வேலை காரணமாகப் பயணம்
செய்வது, அடி வயிற்றில் கத்தியைச் செருகும் வலி தருவது. ஏதோ ஓர் இனம் புரியாத
உணர்வு. வார்த்தைகளால் வடிவம் கொடுக்கமுடியாத அழுத்தம். இப்படியாக
பதைபதைப்பின் உச்சமாக இருக்கும் அந்தப் பொழுது.


இப்போது எனக்கு அடிக்கடி நேருகிறது இந்த அனுபவம். அந்த மாதிரி சமயங்களில்
கொஞ்சம் அதிகம் பேசினால் உடைந்து கண்ணீர் முட்டிவிடும் என்பதால், சட்டென்று
கிளம்பி விடுவேன். எத்தனை முறை கிளம்பினாலும் அத்தனை முறையும் இப்படியே நேரும்.

சமீபத்தில் ‘‘பரிவு’’ என்ற முதியோர் இல்லத் துவக்கவிழாவிற்குச்
சென்றிருந்தேன். பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் திசைக் கொன்றாகப் பறந்து
விட, ஒருவருக்கொருவர் துணையாக இருக்கும் முதிர்ந்த பல தம்பதிகளைப் பார்த்தேன்.
உடம்பு புல்லரித்தது. இந்திய கலாசாரத்தின் ஆணிவேர்களான குடும்பம் என்கிற
அமைப்பின் வேரும் விழுதும் இவர்கள்தானே? அம்மா - அப்பாவின் தூக்கமில்லாத
இரவுகள், காய்ச்சல் பொழுதின் பதைபதைப்புகள், பண்டிகைகளின் பட்ஜெட்
சந்தோஷங்கள், குழந்தைகள் குறித்த கனவுகள், உழைத்து உழைத்துத் தேய்ந்த
அவர்களின் வியர்வை நாட்கள், பொருளாதாரத்தில் தடுக்கி விழுந்தாலும்,
நேர்மையும், கண்ணியமும் கைவிடாத கம்பீரங்கள், இப்படி எத்தனையோ விதைகளின்
முளைகள்தானே நாமெல்லாம்?

விழாவுக்கு வந்திருந்த பெரும்பாலான தம்பதிகளின் இப்போதைய தேவை - உறவு, தோழமை,
நட்பு, அனுசரணை, கரிசனம், அக்கறை இவை மட் டுமே. எத்தனை செல்வம் சம்பாதித்
தாலும், எத்தனை சாதனை செய்தாலும், எத்தனை வெற்றிகள் பெற்றாலும் வீட்டில்
உறவுகள் ஏதும் இல்லையெ ன்றால் வாழ்க்கை சூன்யம்தான். வாழ்க்கையை, விடியலை,
இருப்பை அர்த்தப் படுத்துவது உறவுகள்தான். ஆனால், இன்றைய தலைமுறைக்கு இந்தப்
பெரியவர்களோடு பேச ஏதுமில்லை. கதைக்க ஏதுமில்லை. சிரிக்க ஏதுமில்லை. கணினியில்
உட்கார்ந்து உலகத்தின் ஏதோ மூலையிலிருக்கும் முகம் தெரியாதவரோடு சிபிகிஜி
செய்யத் தெரியும்.

வீட்டுக்குள்ளிருக்கும் வயதான பெரியவர்களோடு பேசப் பொழுதிருக்காது.
சுவாரஸ்யமும் இருக்காது. ‘‘ஏய் பெருசு’’ என்போம். ‘‘கிழத்துக்கு என்ன
தெரியும்?’’ என்போம். ‘‘தொண தொணக்காதே, பொத்திட்டு மூலைல கிட...’’. என்போம்.
‘‘நீயெல்லாம் அந்தக்காலம், பழம் பஞ்சாங்கம், இப்பக் காலம் மாறிப்போச்சு..’’
என்போம். காலம் மாறியிருக்கிறது. ஆனால், அம்மாவின் கருவறை மாறவில்லைதானே?
காலம் மாறியிருக்கிறது ஆனால், அம்மாவின் தாய்ப்பால் மாறவில் லைதானே?
சமீபகாலமாக முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. அதுமாதிரியே அவற்றின்
வித்தியாசங்களும்.

மாதாமாதம் தொகை செலுத்துவது, மொத்தமாகப் பணத்தை முதலீடு செய்து தங்கிக்
கொள்வது, தனியறை, இரண்டு பேர் சேர்ந்து தங்கும் அறை, குளிர் வசதி
செய்யப்பட்டது, செய்யப்படாதது இன்னும் பலவிதங்களாக முதியோர் இல்லங்களின்
வகைகள். இது இல்லையென்றால் அடுக்ககங்களில் தனியாக இருக்கும் முதியவர்கள்.
எப்போதும், தொலைபேசியும், தொலைக்காட்சியும்தான் இவர்களுக்குத் துணை.
பிள்ளைகளின் குரலையாவது கேட்கலாம் என்று பதைக்கப் பதைக்கத் தொலைபேசியில்
அழைக்கும் பெரியவர்கள். ‘‘என்னப்பா சௌக்கியமா? சாப்பிட்டியா?’’ ‘‘என்னம்மா,
மூட்டு வலி மாத்திரை சாப்பிட்டியா?’’

இந்தக் கேள்வியிலேயே முடிந்து போகும் தொலைபேசி உரையாடல்கள். குழந்தை, குட்டி,
பேரன், பேத்திகளோடு ஜே ஜெ என்று கூட்டாக உட் கார்ந்து கதை பேசிச் சாப்பிட்ட
பொழுதுகள் பழங்கதையாகிவிட, தனிமையில் அவுக் அவுக் என்று சாப்பிடும் சோறு,
தொண்டைக் குழியை விட்டுக் கீழே இறங்குவதற்கும் பரிதவிக்கும் அம்மா மனசு.
‘‘இந்தக் கூட்டு எம்பொண்ணுக்குப் பிடிக்கும். நாமட்டும் இதை எப்படிச்
சாப்பிட?’’ ‘‘முறுகல் தோசை என் பேரனுக்குப் பிடிக்கும். ஹாஸ்டல்ல அவன்
என்னத்தை சாப்பிடறானோ?’’ ‘‘பண்டிகைக்கு எம்மவளுக்குக் குங்குமம் கூட
தரமுடியல்ல. வெளியூர்ல இருக்கா...’’

‘‘வெளில போக வர முடியல்ல. நடந்தா தள்ளாடுது. பாத்ரூம் போகக் கூடத் துணை
வேண்டியிருக்கு’’ ‘‘கடைசிவரைக்கும் மத்தவங்க கையை எதிர்பார்க்கக் கூடாது.
யாருக்கும் பாரமா இருக்கக்கூடாது..’’ இப்படியே நகர்கிறது இவர்கள்
இருப்பு. *காய்ந்த
செடியைப் பிடுங்கிய போதுதான் தெரிந்தது வேரின் ஆழமும் காயாத ஈரமும்* இந்தக்
கவிதை சொல்லும் செடிதான் அம்மா-அப்பா என்றும் கொள்ளலாம். எத்தனை வயதானால்
என்ன? சருமம் சுருங்கித் தள்ளாடும் வயதானால் என்ன?

அவர்கள் மனசில் பிள்ளைப் பாசம், மிக மிக ஆழமாக, மிக மிக ஈரமாக.....
சம்பாதித்ததையெல்லாம் அவ்வப்போதே குழந்தைகளுக்குக்காகச் செலவழித்து விட்ட
பெற்றோர், பிள்ளைகள் பசியாற்றித் தான் மட்டும் பசியைச் சாப்பிட்ட பெற்றோர்,
பண்டிகைக்குக் குழந்தைக்குப் புதுத்துணி வாங்கித் தந்து தான் மட்டும் கந்தல்
அணிந்த பெற்றோர்.... பெற்ற கடனையும், தாய்ப்பால் கடனையும் திருப்பித் தந்தவர்
யாரெனும் உண்டா? அம்மா கை விரல்களை எரித்துச் சாப்பிட்டிருக்கிறேன்.


காய்ந்த சாண விராட்டியில் நிஜம்தானே? அம்மாவின் கைவிரல் இல்லாத இடமென்று
வீட்டில் எங்காவது உண்டா? *அப்பா அக்கறையின் பதைபதைப்பு, வெளிக்காட்டத்
தெரியாத அப்பா பாசம், அம்மாவின் கலவை வாசம், உப்பு, புளி, காரம், ஈரம் எல்லாம்
கலந்து வீசும் அம்மா வாசம், ஒரு மாயக் கிறுகிறுப்பைத் தரும் அம்மா சேலை
வாசம்... *இன்னும் இன்னும் சொல்லலாம்..


*அம்மா, அப்பாவைத் தனியே தவிக்க விட்டுக் கோயிலில் போய்ச் சாமி கும்பிடுதல்
தேவையா? அம்மா, அப்பாவோடு உட்கார்ந்து ஒரு வார்த்தை பேசாமல், கோயிலில் போய்
பஜனை செய்வது தேவையா? அம்மா, அப்பாவைப் பசியில் தவிக்கவிட்டுவிட்டு, கோயிலில்
போய் அன்னதானம் செய்வது தேவையா? *


 நமது இருப்பு இப்படி. ‘‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’’ தொகுப்பில் கவிஞர்
சேரன் சொல்லும் அம்மாவுக்கு வேறு கவலை.

என்னைக் கொல்லப் போகும்
இயந்திரத் துவக்கின் ஒலியே
ஒலியின் எதிரொலியே
அவளுக்குச் சொல்லு
நம்பிக்கை தரும் சொற்கள்
பஞ்சாங்கத்தில் இல்லையென்று
எப்போதாவது மகன்
திரும்பி வருவானென்று
கிணற்றடி வைரவருக்கு
இப்போதும் செவ்விரத்தம்பூக்கள்
வைக்கிற
என் அம்மாவுக்குச் சொல்லு....


மகனின் உயிர் இன்னமும் மிச்சமிருக்கிறது என்கிற நம்பிக்கையில்தானே அம்மாக்கள்
ஜீவிக்கிறார்கள்....! *அம்மா, அப்பாவின் அக்கறைக்கும், கவலைக்கும் ஆறுதல்
தருகிற கோயில் எங்காவது உண்டா? பிள்ளைகளின் கைகளை வருடுவதை விட உயர்வான தெய்வ
தரிசனம் அவர்களுக்கு உண்டா? *பிள்ளைகளுக்கு ஒரு வாய் சோறிடுவதைத் தவிர சிறந்த
பிரசாதம் அவர்களுக்கு உண்டா? ‘அம்மா’ ‘அப்பா’ என்ற அழைப்பை விட நெகிழ்ச்சி
தருகின்ற கடவுள் பெயர் ஏதேனும் உண்டா? ‘‘கோயிலுக்குப் போகலாமா?’’ ‘‘வேண்டாம்,
எங்கூட உட்காரு. கொஞ்சம் பேசிட்டிருப்போம்.’’ அம்மாவோடு உட்கார்ந்து பேசினேன்.
ஆயிரம் ஆயிரம் கோயில்களுக்குப் போன மகிழ்ச்சி, நெகிழ்ச்சி எனக்குள்... கோயில்
கருவறையைவிட உசத் திதானே அம்மாவின் கருவறை?



     <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Photo: www.Awesomequotes4u.com]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

   * Vanakkam    Subbu*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to