அரசனும் அவனே! ஆண்டியும் அவனே! - ஆன்மிகம் (குங்குமம்) டிசம்பர் 2014ல் வெளியான கட்டுரை
* பழநி மகிமை 11* *இளமையை விரும்புவோர்க்குப் பாலமுருகனாகவும் முதிர்ந்த அறிவை விழைவோர்க்கு விருத்தனாகவும், சுகபோகங் களை விரும்புவோர்க்கு அரசனாகவும், ஞானத்தை நாடுபவர்களுக்கு ஞான தண்டாயுத பாணியாகவும் ஒரே நாளில் தரிசனம் தந்து அருள்பாலிக்கும் பழநி ஆண்டவனின் பெருமையை எவ்வாறு விவரிப்பது? * *உன் தந்தையோ திரிபுரத்தை எரித்த சிவப்பரம்பொருள். தாய் உமையோ மலையரசனின் புதல்வி; மாமனோ கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து மக்களை ரட்சித்தவன். மிகுந்த செல்வம் உடையவள் உன்மாமி, உனக்குப் பெண் கொடுத்தவர்கள் தேவலோகத்தையும் வேடர்குலத்தையும் ஆள்பவர்கள், இருந்தும் நீ ஏன் இப்படி ஆண்டியானாய் முருகா? என்று பாடுகிறார் கவிஞர் ஒருவர்.* *அரசனாகவும் ஆண்டியாகவும் தோன்றி செல்வத்தின் நிலையாமை யையும், பாலனாகவும் விருத்தனாகவும் காட்சியளித்து இளமையின் நிலையாமையையும் உணர்த்தும் ஞான பண்டிதனல்லவா நம் பழநியாண்டவன்!மலைமேல் ஆண்டவனுக்கென விமரிசையாகப் பழநியில் நடத்தப்பெறும் திருவிழாக்களைப் பற்றி இனி பார்ப்போம். பெரும்பாலான நாட்களிலும் மலைமேல் சுவாமி தங்கரத ஊர்வலம் வருவதால் எப்போதுமே பழநி விழாக்கோலம் பூண்டு விளங்குகிறது.பல்வேறு இடங்களிலும் வாழ்கின்ற மக்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து இன்பத்தில் திளைக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டவை திருவிழாக்கள். குறிப்பாக ஆன்மிகத் தொடர்புடைய விழாக்கள், மக்களுக்கு இறை உணர்வைமங்காமல் இருக்கும்படித் தூண்டி விடுபவையாகும். உலகாயுத விஷயங்களைச் சற்று மறந்துஇறைவனைப் பற்றிய இடையறாத தியானத்திலிருக்க இவ்விழாக்கள் உதவுகின்றன. பல வாழ்க்கை நலன்களை நமக்களித்த இறைவனுக்கு நன்றி கூறவும் இத்தருணங்கள்ஏற்றவை. வானியல் கோட்பாடுகளின் அடிப்படையில் கிருஷ்ணபட்சம், சுக்கிலபட்சம் ஆகிய இருபிரிவுகளோடு பன்னிரு மாதங்கள், 27 நட்சத்திரங்கள் கொண்ட சந்திர நாட்காட்டி அறிவிக்கும் நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி விழா மட்டும் திதிக் கணக்கின்படித் துவங்கப்படுகிறது.1.சித்ரா பௌர்ணமிமுதல் தமிழ் மாதமான சித்திரையில் மல்லி, முல்லை, கடம்பமலர் ஆகியவை பூத்துக்குலுங்கி மணம் வீசுகின்றன. சித்திரை மாதம் சித்திரைநட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாளான சித்ரா பௌர்ணமியன்று பழநி ஊர்க்கோயிலான பெரியநாயகியின் கோயிலிலிருந்து வள்ளிதெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி வெள்ளி ரதத்தில் ஊர்வலம் வருவார். இந்த நிறைமதி நாளில் மலைமேல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.2.அக்னி நட்சத்திர விழாசித்திரை மாத பிற்பகுதியும் வைகாசிமுற்பகுதியும் கூடிய 14 நாட்கள் அக்னி நட்சத்திர காலமாகும். அக்னிப் பொறியில் தோன்றிய முருகப் பெருமானைப் போற்றி, அக்னி நட்சத்திர நாட்களில், பக்தர்கள் காலையில் எழுந்து நீராடித் தூய்மை பெற்று மலைவலம் வருகின்றனர். உடலும் உயிரும் ஒருங்கே புத்துணர்ச்சி பெறுகின்றன. இந்நாட்களில் வெளியூரிலிருந்தும் ஏராள பக்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொள்வது கண்கொள்ளாக் காட்சி. பல பக்தர்கள் ஷண்முக நதியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்விக்கின்றனர். கொடுமுடியிலிருந்தும் பலர் அபிஷேக நீரைக் காவடியாகக் கொண்டு பாதயாத்திரை செய்து வருகின்றனர். பதினான்காம் நாள் காலையில்பெரியநாயகி அம்மை கோயிலிலிருந்து முத்துக்குமாரர் அடிவாரத்திற்கு வந்தருளி பூக்கட்டி மண்டபத்திற்கருகே பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்குவார். பின் இரவில் கிரிவலம் வந்து தன் கோயிலுக்குத் திரும்பும் நாளில் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். முத்துக்குமாரனை வேண்டிப்பாடும் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்களிகண் என்றுனை நம்பலும், நீ எனுள்கனவிற்பல காரணங் கூறலும்தளை எனக் கலி சூழ்வதும் தேர்ந்துளார்சபையிலாயினும் சார்தரச் சேர்த்திடாய்” என்று இறைவனிடம் வேண்டுகிறார்.3.வைகாசி விசாகம்அனைத்து முருகன் கோயில்களிலும் மாபெரும் விழாவாகக் கொண்டாடப்படும் வைகாசி விசாகம், பழநியில் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் தோன்றிய முருகப் பெருமானை ‘இன்சொல் விசாகா’ என்றும் ‘அநாதி, பரவஸ்துவும், விசாகனும், விகற்ப வெகுரூபக்காரனும்’ என்றும் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர். சூரபத்மன் மிகுந்த தவத்தின் வலிமையினால், தன்னை சிவபெருமானது சக்தி தவிர வேறு எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்ற வரத்தைப் பெற்றிருந்ததனால், தேவர்களை அவர்களதுஇருப்பிடத்தையே விட்டு வெளியேற்றுமளவுகொடுமைகள் செய்து வந்தான். எனவே தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான், ஈசானம், தத்புருஷம், சத்யோஜாதம், அகோரம், வாமதேவம் எனும் ஐந்து முகங்களோடுகீழ்நோக்கிய அதோ முகத்தையும் சேர்த்து, ஆறு நெற்றிக்கண்களிலிருந்து ஆறு தீச்சுடர்களைவரவழைத்தார். அக்னி, வாயு, கங்கை இவர்களின் உதவியால் அச்சுடர்கள் சரவணப் பொய்கையை சென்றடைய, ஆறு குழந்தைகள் உருவாயின.கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பெற்ற ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒருசேர எடுத்தணைத்தபோது முருகப்பெருமான் ஆறுமுகனாகத்தோன்றினான். இக்குழந்தையே பிற்காலத்தில்சூரசம்ஹாரம் செய்து தேவர்களைக் காத்தது. வேல் விருத்தத்தில் அருணகிரியார் இதைப் பாடுகிறார்.‘‘வெங்காளகண்டர் கைச்சூலமும் திருமாயன்வெற்றிபெறு சுடர் ஆழியும்விபுதர்பதி குலிசமும் சூரன் குலம் கல்லிவெல்லா எனக் கருதியே‘சங்கராம்! நீ ஜெயித்து அருள்’ எனக் தேவரும் சதுர்முகனும் நின்றிரப்ப,சயிலமொடு சூரனுடர் ஒரு நொடியில் உருவியேதனி ஆண்மை கொண்ட நெடுவேல்’’(வேல்விருத்தம் 2)கடும் கோடைக்காலத்தில் நடக்கும்இவ்விழாவில் வெப்பத்தைப் பொருட்படுத்தாமல், பக்தர்கள் அபிஷேகப் பிரியனைக் குளிரவைக்க குடம் குடமாகப் பால் கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றான். பழநி ஊர்க்கோயிலிலும் மிகப்பெரிய அளவில் வைகாசி விசாக விழா நடைபெறும். ஏழாம் நாளன்று தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. அருணகிரியார் பாடுகிறார்:‘‘லோக நாயகி தந்த வாழ்வோ!தோளாலும் வாளினாலு மாறிடுதோலாத வான நாடு சூறைகொள்சூராரியே! விசாகனே! சுரர் தம்பிரானே’’(‘ஆராத காதல்’ திருப்புகழ்)(தோள் வலிமையாலும், வாள் வலிமையாலும் மாறுபட்டவனும், யாவரிடத்திலும் தோல்வியடையாதவனும், தேவருலகைச் சூறையிட்டவனுமாகிய சூரபத்மனை அடக்கியவரே! விசாக மூர்த்தியே! தேவர்கள் வணங்கும் தனிப்பெரும் தலைவரே!)4.ஆனி அன்னாபிஷேகம்:ஒவ்வொரு ஆண்டும், ஆனி கேட்டைநட்சத்திரத்தில் மலைக் கோயிலிலும், மூலநட்சத்திரத்தில் அடிவாரம் திருஆவினன்குடிக் கோயிலிலும், ஊர்க்கோயிலில் பூராடம் நட்சத்திரத் திலும், பெரியாவுடையார் கோயிலில் உத்திராடம் நட்சத்திரத்திலும் மூலவர்களுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேகப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.5.ஆடி லட்சார்ச்சனைஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அருள்மிகு பெரிய நாயகி அம்மன் திருக்கோயிலில் லட்சார்ச்சனை நடைபெறும். அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். சுவாமி வெள்ளி ரதத்தில் உலாவருவார்.6.நவராத்திரி விழாநவராத்திரி பூஜைக்காலங்களில் 10 நாட்கள் மலைக்கோயிலில் தங்கரதப் புறப்பாடு இல்லை. ஆண்டவனுக்கு ரட்சாபந்தனம் மட்டும் நடைபெறும். ஆனால் பெரியநாயகி அம்மையின் கோயிலில் பத்து நாட்களும் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று அம்பிகை ‘அபராஜிதா’ (தோற்கடிக்க முடியாதவள்) எனும் பெயரில்வணங்கப்படுகிறாள். ஊருக்குச் சற்று வெளியே உள்ள கோதமங்கலம் கோடீஸ்வரர் கோயிலுக்குச் சென்று முத்துக்குமரர் சப்பரத்தில் தந்தப் பல்லக்கில் வந்து அம்புபோடும் விழாவில் கலந்து கொள்கிறார். வன்னிமரத்தை அக்னிதேவியாக வரித்து சுற்றிலும் அம்புகளை வீசுகின்றனர். மகிஷனை அம்பிகை வதம் செய்வதைக் குறிப்பால் உணர்த்தும் காட்சி. (இதை வன்னிகாசுர வதம் என்று பலரும் தவறாகக் குறிப்பிடுகின்றனர்.)* *(மகிமைகள் தொடரும்)* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *v **a n a k k a m** S u b b u* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
