*நாக வழிபாட்டுத் தத்துவம்*

*மு. ஸ்ரீனிவாஸன் (நன்றி அம்மன் தரிசனம் தீபாவளி இதழ் 2010)*

*பாரத நாட்டின் மிகப் பழைமையான தெய்வ வழிபாடுகளில் நாக வழிபாடும் ஒன்றாகும்.
பாரதம் மட்டுமன்றி, அநேகமாக உலகின் எல்லா நாடுகளிலும் எல்லாச் சமயங்களிலும்
நாக வழிபாடு இருந்தது. எகிப்திலும், கிரீஸிலும், ரோமிலும், பிற ஐரோப்பிய
நாடுகளிலும், வடதென் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், பசிபிக் தீவுகளிலும்
எங்கும் நாகதெய்வங்களும், நாகக் கதைகளும் உள்ளன. கம்போடிய நாட்டு வரலாற்றின்
படி, பாரதத்திலிருந்து சென்ற அந்தணரான கவுண்டின்யர் அந்நாட்டின் நாக இளவரசியை
மணந்ததாகவும் அவர்களது சந்ததியினரே கம்போடிய மக்கள் என்றும் தெரிய வருகிறது.
நமது வேதங்களில் நாகங்களைப் பற்றிய குறிப்புகளும், கதைகளும் காணப்படுகின்றன.
சிந்து வெளி நாகரிகத்தைச் சார்ந்த இலச்சினைகளில் அரசமரமும், நாக உருவங்களும்
காணப்படுகின்றன.*

*எல்லாத் தெய்வங்களும் பாம்பை மிக உயர்வாக மதிப்பதைக் காண்கிறோம்.
மகாவிஷ்ணுவின் ஆசனமே சயன நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ ஆதிசேஷன் தான்.
சிவபெருமானும் பாம்பைக் கழுத்தில் அணிந்திருக்கிறார். மகா கணபதியின் இடுப்புக்
கச்சை பாம்பு தான். தேவாசுரர்கள் அமுதத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது
வாசுகி என்ற நாகராஜனே மந்தர மலையைக் கட்டும் கயிறாக உதவுவினான். இராம இராவண
யுத்தம், மகா பாரதப் போர் ஆகியவற்றில் நாகாஸ்திரம் பயன்படுத்தப்பட்டது. வருணன்
நாகபாசத்தால் பிணைத்தான். சேஷன் தன் ஆயிரம் தலைகளால் பிரபஞ்சத்தைத்
தாங்குகிறான். பகவத் கீதையில் ‘சர்ப்பங்களில் நான் வாசுகி’ என்று கண்ண
பெருமான் பேசுகிறான்.*

*நமது புராணங்களில் சர்ப்ப வரலாறு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
பிரஜாபதிகளில் ஒருவரான காசியபருக்கு கத்ரு, வினதா என இரண்டு மனைவியர்.
நாகங்கள் கத்ருவுக்குப் பிறந்தவர்கள். சூரியனுடைய தேரோட்டியான அருணனும்,
கருடனும் வினதாவின் மக்கள். சக்களத்திச் சண்டையில் தோற்றுப் போன வினதா தன்
சுதந்திரத்தை இழந்து கத்ருவுக்கு அடிமை யானாள். தன் தாயின் சுதந்திரத்தை
மீட்பதற்காக கருடன் இந்திரனிடம் சென்று அமுதத்தைக் கொண்டு வந்தான்.
வினதாவுக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் நாகங்கள் அதைப் பருகுவதற்கு முன்பாக
இந்திரன் அதையெடுத்துக் கொண்டு போய்விட்டான். அமுத கலசம் வைத்திருந்த
தர்ப்பைப் புல்லின்மீது சிந்தியிருந்த அமுதத் துளிகளை நக்கப் போன பாம்புகளின்
நாக்குகள் இரண்டாகப் பிளந்தன. தாயார்களிடையே இருந்த பகைமையால் கருடன்
பாம்புகளின் கொடிய பகைவன் ஆனான்.*

*நாகங்களைப் பற்றிய வரலாறு மகாபாரதத்தில் வருகிறது. ஒரு சமயம் தன் சொற்படி
கேட்காத தன் மக்களை ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தில் அவர்களனைவரும் தீயில் கருகி
நாசமடைவார்கள் என்று கத்ரு சாபமிட்டுவிட்டாள். ஏலாபத்ரா என்ற நாகராஜனுக்குக்
கனவில் ஆறுதலான ஒரு நற்செய்தி கிடைத்தது. அதன்படி வாசுகி என்ற நாகராஜனின்
தங்கை ஜரத்காரு அதே பெயருள்ள ஓர் அந்தணரை மணப்பாளென்றும் அவர்களுக்குப்
பிறக்கப்போகும் புத்திரன் ஆஸ்திகனால் நாகவம்சம் அழியாமல் காப்பாற்றப்படும்
என்றும் தெரியவந்தது. வாசுகி அன்றிலிருந்து தன் சகோதரியை மிக அன்போடும்
கவனத்தோடும் பாதுகாத்தான்.*

*ஜரத்காரு ஓரிடத்தில் நிலைக்காமல் சுற்றியலையும் ஓர் அந்தணர். அவருக்கும்
தனக்குப் புத்திரன் இல்லாது தன் பித்ருக்களனைவரும் ‘புத்’ என்ற நரகத்தில்
துன்புறுவார்களே என்ற கவலை ஏற்பட்டது. எனவே அவரும் மணம் செய்து கொள்ளத்
தீர்மானித்தார். ஆனால் சில நிபந்தனைகளுடன் மணமகளுக்கும் தன் பெயரே இருக்க
வேண்டும்; மனைவியை வைத்துத் தன்னால் காப்பாற்ற முடியாது - கடைசியாக மனைவி
செய்யும் முதல் தவற்றைக் கண்டவுடன், தான் அவளைக் கைவிட்டுப் போகலாம் - எது
தவறு என்பதை அவரே தான் நிச்சயிப்பார். அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக்
கொண்டான் வாசுகி. அந்தணர் ஜரத்காரு நாக கன்னிகையான ஜரத்காருவை மணந்து இன்பமாக
வாழ்ந்து கொண்டிருந்தனர். ஜரத்காரு கர்ப்பம் தரித்தாள். அப்போது ஒருநாள் மாலை
நேரமாகி விட்டது. சந்தியாவந்தனத்திற்கான வேளை நெருங்கி விட்டதே என்ற கவலையுடன்
தன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த கணவனை எழுப்பினாள் ஜரத்காரு.
தன் துயிலை அவள் கெடுத்து விட்டதாகக் கோபித்துக் கொண்டு மனைவியை விட்டு விட்டு
ஜரத்காரு போய்விட்டார். உரிய காலத்தில் ஆஸ்திகர் என்ற குழந்தை பிறந்தான்.
சிறந்த தேஜசும், நற்குணங்களும், தூய குழந்தை உள்ளமும் கொண்ட ஆஸ்திகர் வளர்ந்து
வாலிபப் பருவமெய்தினார்.*

*கத்ருவின் சாபம் நிறைவேறும் காலமும் வந்தது. ஒரு ரிஷி குமாரனின் சாபத்தால்
தக்ஷகன் என்ற நாகத்தால் கடிக்கப்பட்டு மன்னன் பரீக்ஷித் இறக்க, அதற்குப்
பழிவாங்க ஜனமேஜயன் உலகில் பாம்புகளே இல்லாமல் செய்வது என்று சர்ப்ப யாகம்
செய்தான். வேள்வியின் மந்திரங்களில் வலிமையால் பாம்புகள் ஆயிரக் கணக்கில்
வேள்வித் தீயில் விழுந்து இறந்தன. தக்ஷகன் அடைக்கலம் வேண்டி இந்திரனிடம் ஓடி
ஒளிந்தான். இந்திரனாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. இந்திரனையும் சேர்த்து
இழுத்தன அந்த மந்திரங்கள். அப்போது வாசுகியும் ஜரத்காருவும் வேண்ட, ஆஸ்திகர்
ஜனமேஜயனுடைய யாக சாலைக்கு வந்து, வேள்வித் தீயில்  தலைகுப்புற வந்து விழ
இருந்த தக்ஷகனை ‘நில்’ என்று ஆணையிட்டு நிறுத்தினார். தவத்தால் பொலிந்த
ஆஸ்திகரைக் கண்டு, சபையினர் எழுந்து வணங்க, ஜனமேஜயனும் அவரது வேண்டுகோளை ஏற்று
யாகத்தை நிறுத்தினான். சர்ப்ப வம்சம் பிழைத்தது. அப்போது ஏற்பட்ட நிபந்தனை
ஆஸ்திகரது பெயரைச் சொல்லுபவர்களை பாம்புகள் கடிக்கக் கூடாது என்பதே. இந்த
உடன்பாடு தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அந்தணர்களின் சந்தியாவந்தனத்தில்
அந்த தியான சுலோகம் இடம் பெறுகிறது:*








*ஜாத்காரோர் ஜரத்கார்வாம்ஸமுத்பன்னோ மஹஸாயசா: |ஆஸ்திக ஸத்யஸந்தோ மாம்பந்ந
கேப்யோ அபிரக்ஷது ||அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரமி தேதூரம் கச்ச மஹாயசா: |ஜனமே ஜயஸ்ய
யக்ஞாந்தேஆஸ்திக வசனம் ஸ்மரன் ||*

*இதன் பொருள்: “ஜாத்காருவுக்கும் (அந்தணர்) ஜரத்காருவுக்கும் பிறந்த சொல்
தவறாத ஆஸ்திகரைப் பாம்புகளிடமிருந்து பாதுகாப்புக்காக நான் நினைக்கிறேன்.*

*புகழும் (விஷமும்) கொண்ட பாம்புகளே, ஜனமே ஜயனுடைய சர்ப்ப யாகத்தில் ஆஸ்திகர்
கொடுத்த வாக்கை நினைவில் கொண்டு தூரச் செல்லுங்கள்.”*

*நாடு முழுவதும் நாகவழிபாடு உள்ளது. மனிதனுக்கு நாகங்களிடம் அச்சத்தோடு,
பக்தியும் இருக்கிறது. நம் ஆலயங்களில் அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவில்
அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாக உருவங்களைக் காண்கிறோம். அவற்றைத்
தவறாது வலம் வருகிறோம். கோலமிட்டு மஞ்சள் குங்குமம் சாத்தி, பால் வார்த்து நாக
தெய்வங்களை வணங்குகிறோம். நாகங்கள் தோலுதிர்ந்து, புதிய தோல் பெறுகின்றன.
அதனால் இளமைப் பொலிவு, ஆயுள் விருத்தி, புத்திரப் பேறு, அதிக விளைச்சல்
ஆகியவற்றைத் தருவதாக ஒரு நம்பிக்கை.*

*காஷ்மீரத்தில் நாகர்கள் வாழ்ந்தனர். மேலும் காஷ்மீர் முழுவதும் நீரூற்றுகள்
தான். வாழ்வுக்காதாரமான இந்த ஊற்றுகள் உள்ள தலங்களுக்கு நாக் என்று பெயர்.
அங்கு அனந்த நாக், சேஷ் நாக், நீல நாக், விதஸ்தா என்ற ஜீலம் நதி
உற்பத்தியாகும் வீர் நாக் என்று பல பெயர்களைக் காண்கிறோம். வங்கம், அசாம்
போன்ற பகுதிகளில் நாக தேவதையாக மானஸா தேவி என்ற பெயரில் நாக வழிபாடு
நடக்கிறது. அதையொட்டிய சந்த் சௌதாகர் என்ற பிரபலமான ஒரு கதையும். உண்டு சந்த்
சௌதாகர் என்ற தனவணிகன் சிவனையன்றி வேறு தெய்வங்களை வணங்காதவன். அதனால் கோபம்
கொண்ட மானஸா தேவி அவனது ஆறு புதல்வர்களைப் பாம்பு கடித்து இறக்கச் செய்கிதாள்.
ஆயினும் சந்த் மனம் மாறவில்லை. அவன் ஒரு முறை பதினான்கு கப்பல்களில் சரக்குகள்
ஏற்றிக்கொண்டு போகையில் பெரும் புயலை ஏற்படுத்தி அக்கப்பல்களை மானஸா
மூழ்கடித்தாள். பன்னிரு ஆண்டுகள் வறுமையில் வாடி அவன் நாடு திரும்பினான்.
மீண்டும் சோதனை. அவனது ஏழாவது மகன் லக்ஷ்மிதரனை மண நாள் இரவிலேயே பாம்பு
கடித்து இறக்கச் செய்தாள் மானஸா தேவி, அவனது மனைவி பெஹூலாதேவி லக்ஷ்மிதரனின்
சடலத்தை ஒரு படகில் ஏற்றிக் கொண்டு மானஸா தேவியை வேண்டி ஆறுமாதங்கள் திரிந்து
விண்ணுலகை அடைந்தாள். அவளது பக்தியால் கணவன் லக்ஷ்மிதரன் மட்டுமன்றி, அவனது
மூத்த சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். பின்னர் சந்த் சௌதாகரும் மானஸா
தேவியை வழிபட்டான். இக் கதை ஹிந்தி, வங்காளி முதலிய மொழிகளில் திரைப்படமாக
வெளிவந்துள்ளது. வங்கத்தில் ஆண்டுக்கொருமுறை பாம்புத் திருவிழா ஒன்று
நடைபெறுகிறது. அதில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பாம்புப் பிடாரர்கள்
பாம்புகளோடு வந்து கலந்து கொள்கிறார்கள்.*

*கேரளத்தில் சர்ப்ப வழிபாடு மிக அதிகம். ஏனெனில் அது மலைகளும், மழையும்,
அதனால் ஈரமண்ணும் மிகுதியாய்க் கொண்ட பூமி. அதனால் அங்கு பாம்புகள் அதிகம்.
நான் சிறுவனாக இருந்தபோது காயங்குளத்திற்கு அருகிலுள்ள பத்தியூருக்குச்
சென்றிருந்தேன். அப்போது ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அருகிலுள்ள
மன்னார சாலாவுக்குச் சென்றிருந்தேன். அது மிகப் பிரசித்தி பெற்ற பாம்புக்
கோவில். அதே போல் சாலக்குடிக்கு பத்து கி.மீ. தொலைவில் பாம்பு மேக்காட்டு மனா
என்ற நாகவழிபாட்டுக் கோவில் உள்ளது. சர்ப்பக் காவு என்பது நாக தேவதைக்கான பூஜா
ஸ்தானம். கேரளத்தின் பாம்புக் கோவில்கள் பலவற்றிலும் பிரமச்சரியம்
அனுஷ்டிக்கும் பெண் பூசாரிகள் உள்ளனர்.*

*ஆண்டுதோறும் ச்ராவண மாதம் சுக்ல பக்ஷத்தின் ஐந்தாவது திதி நாக பஞ்சமி என்ற
பெயரில் நாக வழிபாடாகப் பெருந் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.*

*நமது புராணங்களின் படி முக்கியமான நாக ராஜாக்கள் வாசுகி, அனந்தன், சங்கன்,
பத்மன், கார்க்கோடகன், காளியன், தக்ஷகன், பிங்களன் எனப்படுவர். அனந்தனே சேஷ
நாகம். பலராமனும், இலக்குவனும் ஆதிசேஷனுடைய அவதாரங்கள்.*

*சர்ப்பம் என்பது ஒரு தலையுள்ள பாம்பென்றும், நாகங்களுக்குப் பல தலைகள்
உண்டென்றும் சொல்லப்படுகிறது. நம் இலக்கியங்கள் பலவற்றிலும் நாகங்கள் இடம்
பெறுகின்றன. வேதங்களிலும் உபநிஷதங்களிலும் பாம்புகளைப் பற்றிய குறிப்புகள் பல
உள்ளன.*

*கண்ணனின் பால லீலைகளில் காளிய மர்த்தனம் முக்கிய இடம் பெறுகிறது. யமுனையின்
மடுவிலிருந்த காளியனின் தலைமீது குதித்து அவனை அடக்கிய பாலகிருஷ்ணன் காளியனின்
மனைவியரின் பிரார்த்தனைக்கு இரங்கி அவனைக் கொல்லாது கடலுக்கு விரட்டி
விட்டான்.*

*பாம்புகளைப் பற்றிய மற்றொரு நூல் ஹர்ஷ சக்கரவர்த்தி எழுதிய நாகானந்தம் என்ற
பிரசித்தி பெற்ற நாடகம். ஜீமூத வாகனன் என்ற வித்யாதர இளவரசன், சங்கசூடன் என்ற
நாகத்தின் இடத்தில் தன்னையே கருடனுக்கு உணவாக அளித்தான். அந்த நிலையிலும்
அவனுக்குள்ள மன உறுதியையும், அமைதியையும், கண்டு கருடன் வியந்து தன்
கொடுஞ்செயலுக்காக வருந்தினான். இறக்கவிருக்கும் அவனைக் காக்க வேண்டி, கருடன்
அமுதத்தைத் தேடிப் போனான். அதற்குள் கௌரி தேவி பிரசன்னமாகி, ஜீமூத வாகனன்
பிழைத்தெழ, கருடனும் அமுதத்தைக் கொண்டு வந்து பெய்து தன்னால் முன்னால்
கொல்லப்பட்ட நாகங்களையும் உயிர்ப்பித்தான். எல்லா உயிர்களிடத்தும் அன்பு
காட்டுதல் என்ற பௌத்தக் கருத்தே நாடகம் தரும் செய்தி.*

*மகாபாரதத்தில் வரும் உலூபியின் கதையில் தன் கணவன் அர்ஜுனனும், அவனது மகன்
பப்ருவாகனும் விதி வசத்தால் தந்தையும் மகனும் என்று தெரிந்து கொண்டே சண்டையிட,
அர்ஜுனன் கொல்லப்பட்டான். அப்போது நாகக்கன்னிகையான உலூபி நாகலோகத்திலிருந்து
நாகரத்தினத்தைக் கொண்டுவந்து அர்ஜுனனை உயிர் பெறச் செய்தாள்.*

*அதர்வ வேதத்தில் 5.13, 6.12, 7.89 ஆகிய பாடல்களில் பாம்பு விஷத்தை
முறியடிக்கும் மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன, பல விஷப் பாம்புகளின் இனங்கள்
சொல்லப்பட்டுள்ளன. கைராத, ப்ருஸ்ன, உபத்ருண்ய (புற்களில் மறைந்திருப்பவை),
பப்ர, அஸித, தை மாத, அபோதக என்ற பல் வகை.*

*கலை உலகுக்குச் சென்றால், நாடெங்குமுள்ள கலைச் சிருஷ்டிகளில் தவறாது
நாகராஜாக்களையும், நாக தேவதைகளையும், ஆதிசேஷனையும், நாக வளைவுகளையும், தோரண
அலங்காரங்களையும் காணலாம்.*

*அஜந்தாவிலுள்ள நாகராஜனது சிற்பம் ஒப்பற்ற அழகுடையது. சாளுக்கியர்களின் பாதாமி
குகையில் படம் விரித்த ஆதிசேஷனுடைய பாம்பு இருக்கையில் அமர்ந்த கோலத்திலுள்ள
மகாவிஷ்ணுவும், சமணக்குகையில் பாம்புக் குடையின் கீழ் நிற்கும் தீர்த்தங்கரர்
பார்ச்வ நாதரும் அற்புதமான சிற்பங்கள். நான் பார்த்த மற்றொரு சிற்பம்
ஆந்திராவில் உள்ள புகழ் பெற்ற லேபாக்ஷி வீரபத்திரர் ஆலயத்தில் சிறந்த
வெளிப்பிராரத்தில் உள்ள ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ள பிரும்மாண்டமான
நாகலிங்கம். அந்த ஏழு தலை நாகமும், லிங்கம் வீற்றிருக்கும் அதன் மூன்று நான்கு
மடிப்புகளும் மிக அற்புதமாக அமைந்துள்ளன. குஜராத்திலுள்ள தபோய் முன்னாளில்
தர்பாவதி என்ற பெருநகரமாக விளங்கியது. அதன் நான்கு கோட்டை வாயில்களில்
அற்புதச் சிற்பங்கள் நிறைந்துள்ளன. அவற்றுள் ஜனமேஜயனது சர்ப்பயாகமும்,
ஆஸ்திகர் வரவும், வரலாறும் காட்டப்பட்டுள்ளன. நாடெங்கிலும் உள்ள கோவில்கள்,
ஆறுகள், கால்வாய்கள், ஏரிக் கரைகளில் பக்தர்கள் பிரதிஷ்டை செய்துள்ள நாக
வடிவங்கள் பலவற்றிலும் சிறந்த கலையம்சங்கள் காணப்படுகின்றன*


<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Inline image 1]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



    *v **a n a k k a m**  S u b b u*

 [image: Angelo R]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to