*முரண்களின் ஒற்றுமை* தத்துவம் என்றால் "உளது தன்மை' (உளதான தன்மை) என்பது பொருள். நாம் யார்? ஏன் பிறந்தோம்? பிறவி நோக்கத்துக்கு ஏற்ப எப்படி வாழ்வது சிறந்தது? இந்தக் கேள்விகள் எழும்போது அதன் விளக்கங்களாகச் சொல்லப்பெறுகிற சிந்தனைகள், உண்மைகளின் கூட்டு உருவமே "தத்துவம்' என்ற பெயரில் குறிப்பிடப்பெறுகின்றன.
தத்துவங்கள் ஏட்டுச் சுரைக்காயாகவோ, பாமரனுக்கு எட்டாக்கனியாகவோ இருந்தால் அவற்றால் பயனில்லை. "ஒரு இருண்ட அறையில் கண்களைக் கட்டிக்கொண்டு இல்லாத ஒரு கறுப்புப் பூனையைத் தேடுபவன்தான் தத்துவஞானி' என வேடிக்கையாகக் கூறுவதுண்டு. தத்துவங்கள் மனிதனின் தினசரி நடைமுறை வாழ்வைச் சார்ந்தது. "வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல்' மனிதனுக்குள் ஒழுக்கத்தை, தர்மத்தை, அன்பு, ஈகை போன்ற நற்பண்புகளை, அவன் அறியாமலே ஏற்படுத்தித் தரும் உபாயமே தத்துவ நிலைகள் ஆகும். மேலைநாட்டுத் தத்துவ ஞானிகள் பாச அறிவினால் அறியக்கூடிய, கண்களால் காணக்கூடிய, கைகளால் உணரக்கூடிய ஸ்தூலமான பௌதிக நிகழ்வுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு தத்துவங்களைத் தந்தனர். இந்த மேம்போக்கான தத்துவங்கள் காலப்போக்கில் புதிய விஞ்ஞான உண்மைகள், கண்டுபிடிப்புகள் வரும்போது, அவற்றின் சவால்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தகர்ந்துவிடுகின்றன. பழையன கழித்து புதிய தத்துவ விசாரணைகளை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு மனிதனின் உள்ளுணர்வு, சித்தம், ஆன்மிக நிலைகள், நுண்ணிய உணர்வுகள் ஆகியவற்றில் நம்பிக்கையில்லை. இத்தகைய ஆன்மிக அனுபவங்களை ஆவேசம் என்றும்; மனத்தின் உருவகங்கள் என்றும் ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். மேலை நாட்டுத் தத்துவங்கள் தர்க்கம் செய்து விடைகாணுவதையே தத்துவ வழியாகக் கொண்டுள்ளன. ஆனால் சைவ மதத் தத்துவங்கள் அன்பு, ஞானம், செயல்துடிப்பு (பாவ பூர்ணதா, ஞான பூர்ணதா, க்ருதி ஷீலதா) ஆகிய மூன்று உயர்ந்த நோக்கங்கள் கொண்டவை. இவை ரிஷிகள்- சிஷ்யர்களின் நல்லுரையாடல்கள் (ஸம்வாதங்கள்) மூலம் உருப்பெற்று தத்துவங்களாகி உள்ளன. இறைவன் முதல் குருவாகவும், இறைவி முதல் சிஷ்யையாகவும் இருந்து, பின் குரு பரம்பரையாகப் பேணப்பெற்று வந்துள்ளன. இவை "முடிந்த முடிவாக' இருக்கும் தகுதி பெற்றுள்ளதோடு, கால மாற்றங்களால் அடிப்படைகளில் மாற்றமடையாது நிலைத்து நிற்கின்றன. சைவ தத்துவங்கள் தினசரி வாழ்வில் அனுசரிக்கக் கூடியதாகவும், கல்லார் முதல் தத்துவஞானி வரையிலும் ஒருமனதோடு ஏற்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது சிறப்பு. அவை சாஸ்திரம், சம்பிரதாயம், ஒழுக்கநெறி. சடங்குகள், விழாக்கள் என்று வகைப்படுத்தப்பெற்று எளிமையாக்கப்பெற்றுள்ளன. இன்றைய உலகத்திற்கு, சைவ தத்துவங்கள் மிகவும் இன்றியமையாதன. இன்று அனைத்து நாட்டு மக்களும் ஏதாவது ஒரு காரணத்தைப் பற்றிக் கொண்டு தங்களுக்குள் பிளவுகள், முரண்கள், மனபேதங்கள், கொண்டு தீவிரவாதம் வரை சென்றுவிட்டனர். அரசியல் தலைவர்கள், ஒற்றுமை விரும்பிகள், அறிவு ஜீவிகள் இந்த முரண்களுக்குத் தீர்வாகிய "பேதத்தில் ஒற்றுமை' என்பதை எப்படிச் செயல்படுத்துவது எனத் தெரியாமல் திகைத்துப் போய்க் குழம்பியுள்ளனர். *சிவ தத்துவத்தின் சிறப்பு* ஆனால் சைவ தத்துவங்கள் இந்தத் தீர்வை அழகாகக் கையாண்டு அதை சமயநெறியாக- வாழ்க்கை நெறியாக வாழக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. தத்துவம், தரிசனம் என்ற இரண்டு நிலைகளிலும் இறைவழிபாட்டில் இதைக் கையாண்டு செம்மையடைந்துள்ளனர். சைவர்கள் சிவபெருமானைக் காணும் தத்துவ நிலைகளில் ஒன்று "முரணில் ஒற்றுமை' என்பது. சிவனின் "விகிர்த நிலை' நமது சமய மேலோர்களால் சிறப்பாக எடுத்துக் காட்டப்பெற்றுள்ளன. "வேறும் உடனுமாய் விகிர்தர் அவர்' என்பது சம்பந்தப் பெருமானின் நல்லூர் தேவாரக் குறிப்பு. இரண்டு எதிர் எதிரான நிலைகளில் ஒன்றாகப் பொருந்திச் சிறப்பாக அமைவதுதான் விகிர்த நிலை. *"வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு* * மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு* * சோதியுமாய் இருளுமாய் ஆயினார்க்கு* * துன்பமும் இன்பமும் ஆயினார்க்கு* * பாதியுமாய் முற்றுமாய் ஆயினார்க்கு* * ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு* * ஆடற் பொற்சுண்ணம் இடித்து நாமே*' *(மாணிக்கவாசகர்)* என்பதில் முரண்களின் பொருத்தத்தைக் காணலாம். *"ஏகன்- அனேகன்' என்று சிவபெருமானை தேவாரம் குறிக்கிறது. இது தோற்ற முரண்.* * "யாவையுமாய்- அல்லையுமாய்' என்பது நிலை முரண்.* * "வெய்யாய் தணியாய்' என்பது இயல்பு முரண்.* * "அருவமும்- உருவமும் ஆனார்' என்பது வடிவ முரண்.* * "ஆக்குவாய்- அழிப்பாய்' என்பது செயல் முரண்.* * "பெண்மையனே- ஆண்மையனே' என்பது தன்மை முரண்.* * "வெளியாய்- கரியாய்' என்பது வண்ண முரண்.* இவ்வாறாக இறைவனின் முரண் அழகை தேவாரத் தொடர்கள் அற்புதமாகக் காட்டுகின்றன. *விநாயகர் தந்த தத்துவம்* இம்முரண் நிலைகளில் மிகவும் உயர்ந்தது இறைவனின் அர்த்தநாரீஸ்வர தத்துவம். தானே இரண்டாகப் பிரிந்து நின்று உலகம் தோன்றவும், உலகம் போகத்தை அனுபவிக்கவும், போகத்தின் இறுதி நிலையாக உய்வு பெறவும் ஆண்டவன் தன்னை ஆட்படுத்திக் கொண்ட அற்புத நிலை. இதை நமக்கு போதிக்கும் முதல் குரு விநாயகப் பெருமான்தான். எளியோர்க்கும் இந்த "இறைநிலை'யை விளக்க, விநாயகர் அம்மையப்பரைச் சுற்றி வந்து மாங்கனியைப் பெற்றுக்கொண்டதாகப் புராணக்கதை உருவகப்படுத்தி வைத்துள்ளது. நமது அருள்மிகு நெல்லையப்பர் கோவிலின் வசந்த மண்டபம் சிவ தத்துவங்களை விளக்கும் காட்சி பிரமாணமாக உள்ளது. அதில் தலைவாசலில் அம்மையப்பர் தரிசனம் கொடுப்பதும், அதை ஒளியாகப் பெற்றுக்கொண்டு நிற்கும் அம்மையப்ப விநாயகர் சந்நிதியும், இந்தக் கோவிலின் சிறப்புகளில் ஒன்று. விநாயகரே தத்துவ நிலையில் பிரணவ மந்திர ரூபமாக உள்ளவர்தான். தத்துவனே தத்துவம் தந்தால் அது எத்தனை மேன்மையுடைத்தது! இன்று உலகத்தில் முதற்கடவுளாகப் பரவலாக வழிபடப்பெறுபவர் விநாயகப் பெருமானே. அவரே தத்துவ ஞானிகளுக்கு அரியனாக, ஏழைகளுக்கு எளியவனாக, மக்களிடையே வந்து அமர்ந்து வரம் அருளும் ஆபத்சகாயனாக உள்ளார். "உய்வு காட்டும் ஓமெனும் மந்திர உருவம்', "தெரு வழிப்போவார்க்கும் தெளிவுகாட்டத் தேடி வந்து காத்திருக்கும் கடவுள்', "போவார்க்கும் வருவார்க்கும் பொதுமையான தெய்வம்', "உலகத்தை மயிலேறிக் கந்தன் சுற்ற, சகலமும் அம்மையப்பரே எனக் கண்டு வலம்புரி விநாயகர்' என்று விநாயகரை வியந்து கூறுவர். *விநாயகர்- பல முரண்களின் ஒற்றுமை முடிச்சு* விநாயகரின் தோற்றமே பல முரண்களின் அழகான ஒற்றுமை முடிவு. இடைக்குக் கீழ் மனித உடலாக, கழுத்து முதல் இடை வரை தேவ உடலாக, தலைப்பகுதி விலங்கின் உடலாக, பெருவயிறு பூத உடலாக அமைந்த வடிவம். யானையின் தோற்றம் விநாயகரையே நினைவுப்படுத்தும் அளவுக்கு ஏன் நமது முன்னோர்கள் விநாயகரின் வடிவத்தில் யானையின் படிமத்தை இணைத்தார்கள்? இது பாமரர்க்கு அவரது வாழ்க்கையின் கோட்பாடுகளை குறியீடாகக் காட்டுவதற்காகவும் இருக்கலாம். கதை முக்கியமல்ல. கதை காட்டும் விதையை விளங்கி நமக்குள் விதைத்துக் கொள்வது முக்கியம். விநாயகர் "கணபதி'யும் ஆவார். அதாவது கணங்களின் தலைவர். தலைமைக்குத் தகுதிகள் என்னென்ன வேண்டும் என்று கணபதியின் தோற்றம் நமக்குக் காட்டி நிற்கிறது. *யானைத்தலை:* எல்லா விலங்குகளிலும் யானை மிக அதிகமான- நுணுக்கமான அறிவு பெற்றது. ஒரு தலைவனுக்கு சமுதாயத்தை நல்வழியில் நடத்த கூர்த்தமதி, ஞானம் தேவை. *யானையின் கண்கள்:* மிகச் சிறியவை ஆயினும் நுண்ணிய பார்வை உள்ளவை. மிகச் சிறிய ஊசியைக்கூட தரையிலிருந்து எடுத்து விடக்கூடிய பார்வை அது. அத்துடன் தொலைநோக்குப் பார்வையும் உண்டு. எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் தகுதியுள்ள பார்வை. அதனாலேயே நம் முன்னோர்கள், வாரிசு இன்றி இறந்துவிட்ட அரசரின் அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுக்க, யானையின் தும்பிக்கையில் மாலையைக் கொடுத்து நாட்டை வலம்வரச் செய்தனர். *யானையின் காதுகள்:* முறம்போல அசைந்து கொண்டே இருக்கும். முறத்தின் தன்மை சாரமான, பொருத்தமானவற்றைச் சலித்து எடுத்து வைத்துக்கொள்வது. நிறைய கேட்க - கற்றலின் கேட்டல் நன்று. கேட்டனவற்றைச் சலித்துச் சீர்தூக்கிச் சித்தத்தில் வைக்கவும் என்று உணர்த்துவது. *யானையின் தும்பிக்கை:* தொலைதூரம் வரை மோப்பம் பிடிக்கும் திறமை பெற்றது. ஒரு தலைவரும், ஞானியும் தொலைநோக்குப் பெற்றிருக்க வேண்டும். எதிர்காலத்தில் வரப்போகும் சூழ்நிலைகளை வருமுன் உணர்ந்து வகையான செயல்பாடுகளை வகுக்க வேண்டும். *யானையின் தந்தங்கள்: *இரு தந்தங்களில் ஒன்று முழுமையானது. மற்றது பாதியானது. முழுமையான தந்தம் சிரத்தை (இறை நம்பிக்கை); அடுத்தது சுய அறிவு (மேதாசக்தி). மனிதனின் சொந்த அறிவு குறைபாடுடையதாயினும் முழுமையான இறை நம்பிக்கை இதைச் சரிசெய்து விடும்: ஈடுகட்டிவிடும் என்று சுட்டி விளக்குவது. *கணபதியின் கைகள்:* தும்பிக்கை தவிர நான்கு கைகள் உண்டு. எந்தக் கை யாருக்காக என்று குறிப்பிடும் ஒரு அழகிய பாடல்: *"பண்ணியம் ஏந்தும் கரம் தனக்காக்கிப்* * பால் நிலா மருப்பு அமர் திருக்கை* * விண்ணவர்க் காக்கி அரதனக் கலசம்* * வியன் கரம் தந்தை தாய்க்காக்கி* * கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்து அடக்கிக்* * கரிசினேற்கு இருகையும் ஆக்கும்* * அண்ணாமலைத் தணிகை வளர் ஆபத்* * சகாயனை அகம் தழீஇக் களிப்பாம்'* * (தணிகை புராணம்)* *லம்போதரரின் பெருவயிறு:* எத்திசையினின்று எதுவரினும் ஏற்றுக்கொள்க என்ற சீரிய கொள்கையைச் சுட்டிக் காட்டுவது. மனிதன் குடல் வயிறாக அன்றி கடல் வயிறு கொண்டவனாக- அறிவைத் திரட்டிப் பெருக்கும் பைத்தியம் கொண்டவனாக இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது. *கணபதியின் கால்கள்:* கணபதியின் கால்கள் குட்டையானவை. மடித்து வைத்து உட்கார்ந்த நிலையில் உள்ளவை. இந்தக் கால்கள் வேகத்துக்கு ஆகா. ஆனால் விவேகத்துக்கு ஆகும் கால்கள். அதனால்தானே வேகத்தை விட்டு விவேகத்துடன் அம்மையப்பரைச் சுற்றிவந்து ஆசி பெற்றுவிட்டார். ஒரு தலைவன் தான் இயங்குவதைக் காட்டிலும், தன்னுடன் இணைந்தவரை இயங்கச் செய்து செயலைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். தம் புத்தியால், மெய் அறிவால் பிறரை ஓடச் செய்ய வேண்டும். ஒரு ஆட்சியின் தலைவரோ, ஒரு ராணுவ அதிகாரியோ தான் இருந்த இடத்திலிருந்து பிறரை இயக்கினாலேயே வெற்றி பெற முடியும். *அர்த்தநாரீஸ்வர தத்துவம்:* ஆண்- பெண் பேதமும், இப்பேதம் ஒன்றுபட்டுச் செயல்படுவதும் உலகம் இயங்கத் தேவையான அடிப்படைத் தத்துவம். இதை நமது சாஸ்திரங்கள் பலவிதமாகச் சுட்டியுள்ளன. ருத்திரன் ஆண் தன்மையையும், உமா பெண் தன்மையையும் குறிக்கின்றனர். *உமா மகேசுவரன்- அண்ட பிண்டம்.* "ருத்ரோ நர உமா நாரீ தஸ்மை தஸ்யை நமோ நம!: ருத்ரோ ப்ரஹ்ம உமா வாணீ நமோ நம! ருத்ரோ விஷ்ணு உமா லக்ஷ்மீ நமோ நம! இந்த ஸ்லோகங்கள் இணைந்து செயல்படுவதில் பாக்யம், தேஜஸ் உண்டாவதைச் சொல்கின்றன. *ருத்ரன் சூரியன் எனில், உமா பேரொளி. * *ருத்ரன் மலர் ஆனால் உமா நறுமணம். * *ருத்ரன் யாகம் எனின் உமா மேடை.* எனவே சைவ சித்தாந்தம் காட்டும் முரண்களின் ஒற்றுமையால் விளையும் நன்மைகளை உணர்ந்து, அதன் வழி நடந்து, நாடு வளம் பெறச் செய்வோம்! <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* [image: Right ☯ no buy ever !!!] *V A N A K K A M S U B B U * [image: -0op9gs2ch4BrCwfLEifUF_m2bnghTvSIZrwtAG8KkFYfqlQQmu3bg==.gif] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
