கம்பன் காட்டும் கன்னி கண்ணுள் நுழைந்த கள்வனைக் கண்ணால்; சிறைசெய்து நெஞ்சச் சிறையில் அடைத்து விட்டதோடு நிற்கவில்லை. அந்தப் பஞ்சவண்ணக் கிளி! தன்னையும் அவனையும் பள்ளி அறையில் கொண்டு போய்ச் சேர்க்கும்படித் தோழியை வேண்டுகிறாள்.
கண்ணதாசனின் கன்னியோ கண்மூடிக் காத்திருப்பேன் எனக் காத்திருக்கிறாள். அவனுக்காகவே அவள் பூத்திருக்கிறாள். கம்பனின் உலாவியற் படலத்தில் இது போலப் பல பாடல்கள் இலக்கிய உலகின் இன்ப உச்சிக்குக் இட்டுச்செல்லும் இனிய ஆடல்கள்! பருவப் பெண்கள் இராமனின் அழகு நலன்களை எல்லாம் பகுதி பகுதியாகப் பார்த்துப் பார்த்துப் பருகுகிறார்கள்! திருமேனி அழகைத் தீண்ட முடியாமல் உருகுகிறார்கள்!உதித்த சூரியனாய் உலா வரும் அவன் மேனியில் பதித்த இடத்திலிருந்து பார்வையை மீட்க முடியவில்லையாம்! வாள்கண் நங்கையர்தம்; கண்கள் ஆடவர்கள் மேல் முதலில் பாயும் இடம் தோள்களாம்! பல இடங்களில் கம்பன் சொல்கிறான். பாதையோடு செல்லும் முனிவனின் பின்னால் இராமன் செல்கிறான் அவன் மேல் சீதை தன் பார்வையைப் பதிக்கிறாள் தன் நெஞ்சைப் பறிகொடுக்கிறாள். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்! கண்ணொடு கண் இணைகிறது. நெஞ்சொடு நெஞ்சு அணைகிறது. உயிரோடு உயிர் பிணைகிறது! அச்சமயம், சீதையின் நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன. இது போன்ற இன்னொரு காட்சியைக் கம்பன் உலாவியற் படலத்தில் காட்டுகிறான் : உலவி வரும் நிலவு என வீதியில் உலவி வரும் இராமனின் அழகு நலன்களைக் காணும் சிலபெண்களின் கண்கள் அவன் தோளில் ஆழ்கின்றன. சில பெண்களின் கண்கள் அவன் தாளில் வீழ்கின்றன. "தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே!" கம்பனைத் தவிர வேறெந்தக் கொம்பனும் வரைய முடியாத காவிய வரிகள்! மலைத்தோள் கண்டு மகளிரின் மனங்கள் மலைத்துப் போகும்! நிலைகுலைந்த நெஞ்சங்களோ விரகத்தில் வேகும்! இராமனின் தோள் சேரும் பேறு சீதைக்கு மட்டுமே என்றாலும் வாராதோ தங்களுக்கும் அப்பேறு என்ற ஏக்கம்! விளைவு? பதிந்த இடத்தை விட்டு நகர மறுக்கும் விழிகள் - உள்ள(த்)தைப் பகர முடியாத மொழிகள்! புவனமே புரண்டெழுந்து வந்தாலும் அவர்கள் கவனம் என்னவோ அவனின் தோள் மீதுதான்! வேறு சில பெண்களுக்கோ வேறு வகை எண்ணம் : கல்லையும் பெண்ணாய்க் கனிய வைத்தனவாமே காகுத்தனின் கமலப் பாதங்கள் - இப்போது தங்களையும் அப்படிச் செய்யுமா, தங்கள் வாழ்வும் விமோசனம் பெற்று உய்யுமா? பாவப்பட்ட பெண்கள் அங்கே ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு தாள் கண்டார் தாளே கண்டார்! தோளையும் தாளையும் தனித்தனியாய் நோக்குறும் கன்னியர் பற்றிய வரிகள் கண்ணதாசனின் கருத்தைக் கவர்ந்துவிடுகின்றன! என்ன அற்புத வரி இது : “தோள் கண்டார் தோளே கண்டார்”! ஆகா, ஆகா என அவர் மனம் தழைகிறது! இப்படியான அற்புத வரியை எப்படியாவது பயன்படுத்த விழைகிறது! படித்துச் சுவைத்து லயித்து ரசித்த சொற்களை அப்படியே இழைத்து வைக்க நல்லதொரு வாய்ப்பும் வருகிறது! திரைப் படம் : இதய கமலம் “தோள் கண்டேன் தோளே கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன் வாள் கண்டேன் வாளே கண்டேன் வட்டமிடும் விழிகள் கண்டேன்” தாளை வாளாக்கிக் கம்பனின் வார்த்தைகளைத் தன் பாடலில் வார்த்தெடுக்கும் வித்தை கண்ணதாசனுக்குக் கைவந்த கலை இல்லை, இல்லை… கவிதை தந்த கலை! எண்ணத்தில் எப்போதும் இனிக்கின்ற வண்ணம் பலப்பல வண்ணக் கவிதைகளை வாரி வழங்கிய வள்ளல் கம்பன். கை வண்ணம் கால் வண்ணம் என்று அவன் சொன்ன வண்ணம் கண்டு கேட்டு ரசித்த கண்ணதாசனும் அவ் வண்ணமே பல வண்ணங்களைப் போட்டுப் பாடலாக்கி நாம் மகிழும் வண்ணம் தந்த திறமையை என்னவென்பது! அந்தப் பாடலைப் பாhக்கும் முன் கம்பன் முந்தித் தந்த பாடலைப் பார்ப்போமா? விசுவாமித்திரன் வேள்வியைக் குலைக்க விசுவரூபம் எடுத்து வருகிறாள் தாடகை என்னும் சழக்கி இறைக்கடை துடித்த புருவமும் எயிறு என்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயுமாக வருகிறாள் அவ்வரக்கி! இராமனுக்கும் அவளுக்கும் கடும் போர்! இறுதியில், இராமன் தன் சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம் விடுகிறான்.அறந் திறம்பிய அரக்கியின் மார்பைத் துளைத்துப் புறம் போகிறது அந்த இராம பாணம் - கல்லாப் புல்லர்க்கு நல்லார் சொன்ன பொருள் போல! கரிய செம்மலாம் காகுத்தன் கன்னிப் போரில் காட்டிய வீரம் கண்டு மகிழ்ச்சி கொண்டு பெரிய முனிவனும் அரிய படைக்கலன்களை வழங்கினான். பின்னர், முனிவன் முன் செல்ல அண்ணலும் அவன் தம்பியும் பின் சென்றனர் - மிதிலை நோக்கி! வழியில் -மேடெனக் கருங்கல்; ஒன்று கிடந்தது இராமனின் பாதம் அதனைக் கடந்தது கண்ட கல் மிசை காகுத்தன் கழல் துகள் கதுவ அற்புதம் ஒன்று நிகழ்ந்தது. பெண்ணமுதாய் அது மாறி நின்றது! அன்னையே அனையாட்கு நிகழ்ந்தது என்னை என இராமன் கேட்கிறான். கவுதம முனிவனின் கைப்பிடித்தவளை அகலிகை எனும் பெயர் படைத்தவளை விழியால் காதல் கதை பேசி நவ்வி போல் விழியாளை வீழ்த்திய இந்திரன் கதையை முனிவன் கூறக்கேட்டான். "நெஞ்சினால் பிழைப்பு இலாள்' என நீதித் தீர்ப்பு வழங்கிப்போட்டான்; தாடகை வதத்தில் இராமன் தடக்கையின் உரங்கண்டு மேடைக் கல் மாதவளாய் மாறியதில் அவன் காலின் திறங்கண்டு;விசுவாமித்திரன் பாடுகின்றான் வியப்பின் எல்லையில் நின்று "மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ணலே கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்" என்று! இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதிய அவ்வண்ணம் கண்டு ருசித்து ரசித்த கண்ணதாசன் பாடல் ஒன்றில் முழுக்க முழுக்க வண்ணங்களாக வாரி இறைத்து விடுகிறார் தென்னங் கள்ளாக இன்பத்தை நிறைத்துவிடுகிறார்! பி.பி ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா குரல்களில் கொடிகட்டிப் பறந்த பாடல் அது. படம் : பாசம் இதோ, கவியரசரின் கன்னித் தமிழ் வரிகள் : ஆண் : பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் பெண் : கண் வண்ணம் அங்கே கண்டேன் கைவண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னம் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? கார் வண்ணக் கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு பூவண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா? எப்படி, கண்ணதாசனின் கைவண்ணம் ? இல்லை, இல்லை கவிதை வண்ணம்? இதைப் போல, வேறு வண்ணங்களிலும் பாடல்கள் அமைத்துள்ளார் கவிஞர். ஆனால் அவை கம்பன் அடியொற்றிப் பிறந்தவை அல்ல. அதனால் அவை இங்கே இடம் பெறவில்லை. காட்டாக,கல்லைத்தான் மண்ணைத்தான் காய்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தனா என்று பாடிய இராமச்சந்திரக் கவிராயர் பாடலைப் போல அமைந்ததுதான், பாவமன்னிப்புப் படத்தில் இடம் பெற்று நம் நெஞ்சில் நிலைத்து நின்று விட்ட பாடல் : "அத்தான், என்னத்தான் அவன் என்னைத்தான் எப்படி சொல்வேனடி..". 'பலே பாண்டியா" என்ற படத்தில் வரும், 'அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணலவே..' பாடல் எழுதக் கவிஞருக் 'கை' கொடுத்தது தனிப்பாடல் திரட்டில் வரும் "உள்ளமிளகாயோ ஒரு பேச்சுரைக்காயோ வெள்ளரிக்காயோ..." என்ற வெண்பா. இவை போன்றவற்றை இக்கட்டுரையில் வேண்டுமென்றே கொண்டுவரவில்லை. வாய்ப்பு கிடைத்தால் பின்னொருகால் எழுதக்கூடும். இதுவரை பார்த்தவற்றில், அடியேன் குறிப்பிட்ட கம்பனின் பாடல்களைப் பலரும் அறிந்திருக்கக் கூடும். அல்லது கேள்வியாவது பட்டிருக்கலாம். இனி, கவிஞர் எழுதிய திரைப் பாட.ல் ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். அந்தப் பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்ததே கம்பன்தான்! வியட்நாம் வீடு என்ற படத்தில் வருகிறது. 'பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா...' என்ற பாடலதான் அது. அதில் இடம் பெறும் பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்தப் பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான் பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் - ராஜா பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான். என்ற இந்த வரிகளின் மூலம் கம்பனில்தான் உள்ளது! எங்கே? எந்த இடத்தில்? யார் கூற்றாகக் கம்பன் இதனைக் கூறுகிறான்?... தேடுங்கள், கண்டடைவீர்கள். கண்டவர்கள் விண்டிடலாம்; விண்டவர்கள் கண்டிருக்கவேண்டும். கண்டு பி(ப)டிக்க இரண்டு நாள்கள் போதுமா? *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* [image: dennis a] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
