திருவள்ளூர் வீரராகவ பெருமாள்

நின்றபடி அருள்பாலிப்பதை விட  சயனம் பண்ணிக்கொண்டே
அருள்பாலிப்பது   பகவானுக்கு ரொம்பவும் பிடித்தம் என்பதைப்  பெரும்பாலான
பெருமாள் கோவில்களில் காணுகிறோம்.  திருமாலின் திருவிளையாடல்கள் எத்தனை
எத்தனையோ.  அவற்றுள் படுக்க இடம் கேட்டு பக்தரிடம் வந்து நின்ற சம்பவம் ஒன்று
நடந்துள்ளது.  இந்த அதிசயம் நடந்த இடம் சென்னைக்கு மேற்கே சுமார் 44 கிலோ
மீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூரில் தான்.

  பத்து ஏக்கர் பரப்பளவில் 5 நிலை இராஜகோபுரம் இரண்டு பிரகாரங்கள் கொண்டுள்ளது
இந்தக் கோவில்.  மூலவர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள்.  புஜங்க சயனம்,  தாயார்
கனகவல்லி வசுமதி தாயார் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.  விமானம்  விஜயகோடி,
தீர்த்தம் ஹ்ருத்தாப  நாசினி தீர்த்தம்.  வடலூர் இராமலிங்க அடிகளார்
இத்தலத்தைப் பற்றி ஐந்து பாசுரம் பாடி இருப்பது விசேஷமான செய்தி.
 பெருமாளுக்கு வைத்திய வீரராகவன் என்ற பெயரும் உண்டு. *1,500 வருடங்கள் பழைமை
வாய்ந்த ஆலயம். புராதனப் பெருமைகள் பல கொண்ட திருக்கோவில். பல்லவர் காலத்தில்
கட்டப்பட்ட திருத்தலம் என்பதை கோவில் கட்டுமானமும் சிற்பங்களும்
உணர்த்துகின்றன.  *

 சாலியோத்திர  என்ற வயதான முனிவர் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த பொழுது
வயோதிகராக  வந்த திருமால்,  அவரிடம் உணவு உண்டு  'படுக்க  இடம் எவ்வுள்'
என்று கேட்டார் முனிவர் காட்டிய பரன் சாலையில் வயோதிகராக வந்த பெருமாள்
உண்மையாகவே சயனக் கோலத்தில் வீரராகவப்  பெருமாளாகப் பள்ளி கொண்டாராம்.  இதனால்
இத்தலத்திற்கு திருஎவ்வுள்  என்று பெயர் வந்தது.  பின்னர் திருவள்ளூர் என்று
மாறியது.

 பெருமாள் தனது வலது  திருக்கையை காலிஹோத்ர  முனிவர் தலை மீது வைத்து,
நான்முகனுக்கு உபதேசிக்கும் திருக்கோலத்தில் ஞான முத்திரையுடன்
காட்சியளிக்கிறார்.  மூலவருக்கு சிவப்பு வெள்ளைக்  கட்டம் போட்ட வஸ்திரம்,
வேண்டுகோளாக சாத்தப்பெறுகிறது.  உப்பும் மிளகும் காணிக்கை செய்வதும் உண்டு.
சிவபெருமான்,  தட்சனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இந்தத் தீர்த்தக்
கரையில் நீங்கியது.  இதனால் தீர்த்தக் கரையில் சிவன் கோயில் உண்டு.  மனதில்
கைடபர் என்னும் அரக்கர்களை பெருமாள் வதம் செய்த இடம் இது.  இந்தக் கோவில்
குளத்தில் அமாவாசை அன்று நீராடினால் எல்லா விதமான நோய்களும் அகலும்.
புண்ணியமும் அதிகமாகும்.  திருமங்கை ஆழ்வார்,  திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம்
செய்திருக்கிறார்கள். ஸ்ரீவேதாந்த தேசிகர் சம்ஸ்கிருதப் பாடல்களைப் பெருமாள்
குறித்து மெய்யுருகப் பாடியுள்ளார்.
* பரிகாரம்*

 திருமணமாகாதவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் திருமணமாகும்.  இங்குள்ள
புஷ்கரணியில் அமாவாசை தோறும் வந்து நீராடினால் எப்பேர்ப்பட்ட கொடிய நோய்களும்
விலகும்.  எதிரிகள் பயத்தால் நிம்மதியற்று காணப்படுகிறவர்கள் இந்தப் பெருமாளை
தரிசனம் கண்டு நேரடியாக வேண்டினால் அவர்கள் பயத்தை போக்குவதோடு எதிரிகளை
விரட்டி விடுவார் என்பது வெகு காலமாக இருந்து வரும் ஐதீகம்.  சிவபெருமானுடைய
பிரம்மகத்தி  தோஷமே இங்குள்ள குளத்தில் குளித்தால் விலகியது என்பதால் தெரிந்தோ
அல்லது தெரியாமலோ நாம் செய்த அத்தனை பாவங்களும் விலக இந்த குளத்தில்
நீராடினால் போதும் புண்ணியசாலி ஆக மாறிவிடலாம்.

ஒரு தை அமாவாசை நன்னாளில், சாலிஹோத்ர முனிவர் இந்தத் தலத்துக்கு வந்தார்.
இங்கே உள்ள ‘ஹ்ருத்தாப நாசினி’ எனும் தீர்த்தத்தில் நீராடினால், நம் இதயத்தில்
உள்ள துர் சிந்தனைகள், கெட்ட விஷயங்கள் அனைத்தும் நீங்கும் என்று அவரின்
உள்ளுணர்வு சொல்லிற்று. குளக்கரையில் அமர்ந்த சாலிஹோத்ர முனிவர், கண்கள் மூடி
தியானத்தில் மூழ்கினார். அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும்
நீராடுவதை உணர்ந்து சிலிர்த்தார். குளத்தின் சிறப்பு குறித்து முனிவருக்கு
எடுத்துரைத்தார்கள் தேவர் பெருமக்கள்.

அப்போது, பிருத்யும்னன் எனும் மகாராஜா இங்கே வந்து தவமிருந்து, இந்தக்
குளத்தில் நீராடியதாகவும், அவனுக்குப் பெருமாளே நேரில் தரிசனம் தந்து வரம்
அருளினார் என்றும், கங்கைக்கு நிகரான இந்தத் குளத்தில் நீராடினால் சகல
பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்று தேவர்கள் விவரித்தார்கள்.

சரியான தலம், மிகச் சரியான மூர்த்தம் என வந்திருப்பதில் மகிழ்ந்தார் முனிவர்.
அங்கே குளத்தில் நீராடி, திருமாலை நினைத்து தவத்தில் ஈடுபட்டார். அதில்
மகிழ்ந்த பெருமாள், அவரின் வேண்டுகோளை ஏற்றார். முனிவரின் விருப்பப்படியே,
அங்கேயே தங்கி கோயில் கொண்டார். இன்றளவும் எல்லோருக்கும் அருள்பாலித்து
வருகிறார் என்கிறது ஸ்தல புராணம்!

வாழ்வில் ஒருமுறையேனும் இங்குள்ள தீர்த்தக்குளத்தில் நீராடி பெருமாளைத்
தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும். முக்கியமாக, தை அமாவாசை நாளில் நீராடி,
பெருமாளை சேவித்தால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!

தன் வலது கரத்தால் முனிவர் சிரசில் பெருமாள் சத்தியம் செய்யும் சிற்பமும்,
நாபிக்கமலத்தில் இருக்கிற ஸ்ரீ பிரம்மாவுக்கு வேதோபதேசம் செய்தபடி
சயனத்திருக்கோலத்தில் வெகு அழகுடன் காட்சி தருகிறார் வீரராகவ பெருமாள்.
அரக்கர்களை வதம் செய்ததால் ஸ்ரீவீரராகவ பெருமாள் என்றும் இராமலிங்க அடிகளாரின்
வயிற்று வலியைப் போக்கியதால், ஸ்ரீ வைத்திய வீரராகவர் என்றும் திருநாமங்கள்
அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீநவநீத கிருஷ்ணர் வரப்பிரசாதி. இங்கு
வரும் பக்தர்களுக்குத் தேன் கலந்த தினைமாவுப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்தப் பிரசாதம் ரொம்பவே விசேஷமானது என்கின்றர் ஆச்சார்யப் பெருமக்கள்.
பிரசாதத்தை உட்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் என்று தங்கள் அனுபவம்
சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்!

இங்கு, மூன்று அமாவாசை தினத்தில், வெல்லம் மற்றும் பால் கொண்டு தீர்த்தக்
குளத்தில் கரைத்துப் பிரார்த்திப்பது சிறப்பு. அதேபோல், உப்பு மற்றும் மிளகு
சமர்ப்பிக்கும் வழிபாடும் இங்கே உண்டு. அப்படிப் பிரார்த்தித்தால், நம்
துயரங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பது உறுதி. உறுப்புக் காணிக்கை
பிரார்த்தனையும் உண்டு.

தாயாரின் திருநாமம்- ஸ்ரீகனகவல்லித் தாயார். தை மாத பிரம்மோத்ஸவம் இங்கு
பிரசித்தம். அந்த நாளில், கனகவல்லித் தாயாரின் தந்தையிடம் சென்று, வேஷ்டி-
புடவை வாங்கி வரும் வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது. அதனால், பெருமாளுக்கு,
ஸ்ரீகல்யாண வீரராகவர் என்றும் பெயர் உண்டு!

வாழ்வில் ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்கு வந்து, வீரராகவ பெருமாளை மனதாரப்
பிரார்த்தித்தால், ஞானமும் யோகமும் பெறலாம். தீராத நோயும் தீரும். கல்யாண
யோகம் கைகூடி வரும் என்பது சத்தியம்!

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>




*https://www.youtube.com/watch?v=dmgeM0fVthg
<https://www.youtube.com/watch?v=dmgeM0fVthg>https://www.youtube.com/watch?v=9z7tSGcbHSo
<https://www.youtube.com/watch?v=9z7tSGcbHSo>*

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

 *Vanakkam Subbu*

 [image:
wygltUSizKEORrTQqC2Nk0Ug4hf6FDz7Lcu2SYFxlGnPRsLO_T3n36kqlspaL6no.gif]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BqzG%3DDPUwajwkrEy%3DEB4ZCCYDEJ9DTjfBgL5QzbKX4jbw%40mail.gmail.com.

Reply via email to