101 - திருச்சாளக்கிராமம் (முக்திநாத்) *உண்டா முறைமை யுணர்ந்தடிமைப் *பேர்புண்டேன்* *பண்டாங் குடிகுலத்தாற் பன்மதத்தால் - கொண்டாட்டால்* *ஆளக் கிராமத்தா லல்லற்பேர் பூணாமல்* *சாளக் கிராமத்தார் தாட்கு. *
*- **பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் 108திருப்பதி அந்தாதி .* *முக்திநாத் கோவில் என்று அழைக்கப்பெறும் சாளக்கிராமம் நேபாளத்தில் அன்னபூர்ணா தௌலகிரி மலைப்பகுதியில் தரைமட்டத்திலிருந்து 3710 மீட்டர் (12170 அடி) உயரத்தில் உள்ளது.* *முக்திநாத்- முக்தி நல்கும் வைணவத் திருத்தலம். நேபாளத்தில் உள்ளது. திருச் சாளக்ராமம் எனும் பெயரும் உண்டு. நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டு சென்று, அங்கிருந்து போக்ரா, ஸோம்சன் வழியாக முக்தி நாத்தை அடைய வேண்டும். விமானத்திலும் செல்லலாம்.* *தானே உருவான 8 ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் (ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, நைமிசாரண்யம், தோத்தாத்ரி (வானமாமலை), புஷ்கர், பத்ரிநாத் இவை மற்ற 7 க்ஷேத்திரங்கள்) சாளக்கிராமம் ஒன்று. * *இப்போது கோவில் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாமோதர குண்ட் என்ற கண்டகி நதி துவங்கும் இடத்தில் இந்தக் கோவில் இருந்ததென்றும், அங்கு செல்வது மிகவும் கடினம் என்பதால், விக்கிரகம் இங்கு மாற்றப் பெற்றதாகவும் கூறப்பெறுகிறது. * *சந்நிதியை அடைய 80, 90 படிகள் ஏற வேண்டியிருந்தது. சுற்றிலும் சிகரங்களைத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டம்; பச்சைப் பசேலென்று நெடிதுயர்ந்த மரங்கள்; அற்புதமானதொரு தேவருலகில் இருப்பது போன்ற உணர்வை அடையலாம். சிறு தொட்டிகள் போன்று இரண்டு திருக்குளங்கள் சந்நிதி முன்னால் உள்ளன. கோயிலை ஒரு பெண்மணி நிர்வகித்து வருகிறார். சிறிய சந்நிதிதான். கருவறையில் சாளக்ராம சுயம்பு திருமேனியாக முக்திதரும் ஸ்ரீ முக்திநாராயணன் எழுந்தருளி தரிசனம் தருகிறார். * *சங்கு- சக்ர கதா ஹஸ்தனாக, ராமானுஜர், கருடன் மற்றும் ஸ்ரீதேவி- பூதேவியருடன் தரிசனம் தருகிறார் அவர். சப்தரிஷிகளும் சனகாதி மகரிஷிகளும் ஆராதித்த எம்பெருமானும், பிறவிகள் கோடி எடுத்தாலும் கிடைத்தற்கரிய பெருமானும் ஆகிய ஸ்ரீமந் நாராயணன் தம்மைத் தரிசிப்பவர்களுக்குத் தவறாது முக்தி அளிப்பதால், 'முக்திநாராயணன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்பெறுகிறார் இங்கே.* *கோவிலுக்குச் சென்றதும் பாப் குண்ட் (பாவக் குளம்), புண்ய குண்ட் (புண்ய குளம்) என்ற இரண்டு குளங்களில் முறையே நீராட வேண்டும். இவை சிமென்ட் தொட்டிகள்தான். இவற்றில் நீர் தொடர்ந்து நிரப்பப்பெறுகிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறதென்று தெரியவில்லை. * *இந்த இரண்டு குளங்களில் நீராடியபின், சுவற்றில் உள்ள 108 துவாரங்கள் வழியே காளை மாட்டின் தலை வடிவில் உள்ள குழாய்கள் மூலம் வரும் நீரை ஒவ்வொரு தலை அடியிலும் நின்று வரிசையாகத் தலையில் ஏந்தி நீராடலை நிறைவு செய்த பின் வேறு உடை உடுத்திக்கொண்டு பெருமாளை தரிசிக்கலாம்.* *கோவிலுக்கு வெளியே சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் புஷ்கரணி தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் வரிசையாகக் குளித்துக்கொண்டே சந்நிதியைச் சுற்றி வரலாம். * *கண்டகி நதிக்கரையில் உள்ள இந்த திவ்ய தேசம் சாளக்கிராமக் கற்களுக்குப் பெயர் பெற்றது. கண்டகி நதியில் உருவாகும் சாளக்கிராமக் கற்கள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. இவற்றின் தோற்றத்தைக் கொண்டு இவை நரசிம்மர், வராஹர், விஷ்ணு, ஹயக்ரீவர், சந்தான கோபாலன், மத்ஸயர், கூர்மர், சுதர்சனர் போன்ற விஷ்ணுவின் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பவையாகக் கருதப் பெற்று பூஜையில் வைத்து அர்ச்சிக்கப் பெறுகின்றன.* *முக்திநாத், காத்மாண்டு, போக்ரா, ஜோம்சோம் போன்ற ஊர்களை, இந்தியாவில் பல இடங்களிலும் கூட இந்த சாளக்கிராமங்கள் கிடைக்கின்றன. இவற்றின் விலை 20 ரூபாயிலிருந்து பல ஆயிரம் ரூபாய்கள் வரை இருக்கலாம். சாளக்கிராமங்கள் பற்றி நன்கு அறிந்தவர்களின் ஆலோசனைப்படி இவற்றை வாங்குவது உத்தமம்.சில சாளக்கிராமங்களின் வடிவமைப்புகள் ஒரு கை தேர்ந்த சிற்பியால் அற்புதமாக உருவாக்கப்பட்டவை போல் பிரமிப்பூட்டும் விதத்தில் உள்ளன. இவற்றை இயற்கையின் அதிசயம் அல்லது தெய்வீகத்தின் வெளிப்பாடு என்றுதான் கொள்ள வேண்டும்.* *கண்டகி நதி விஷ்ணுவிடம் அவர் தன் கர்ப்பத்தில் பிறக்க வேண்டும் என்று பிரார்த்தித்து அந்த விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் விஷ்ணு பூச்சியாக உருவெடுத்து கண்டகி நதியின் உள்ளே இருக்கும் கற்களைக் குடைந்து தன் பல்வேறு தோற்றங்களை உருவாக்குகிறார். இவையே சாளக்கிராமக் கற்கள். * *முக்திநாத் சந்நிதி சிறியதாக ஒரு மாடம் போல் உள்ளது. பெருமாளை மிக அருகில் (சுமார் 3 அடி தூரத்திலிருந்து சேவிக்கும் பேறு) இங்கு கிடைப்பது ஒரு அற்புத அனுபவம்.சில கோவில்களுக்குப் பெண்கள் வரவே கூடாது என்று சிலர் வாதிட்டு வரும் நிலையில், இங்கு ஒரு பெண்மணியே அர்ச்சகராக இருப்பது ஒரு மன நிறைவான ஆச்சரியம்.சன்னதியின் வாசலில் அமர்ந்தபடி முக்திநாத், லட்சுமி, சரஸ்வதி, கருடன், யமுனாச்சாரியா என்று சந்நிதியில் இருப்பவர்கள் பெயர்களை ஒவ்வொருவரிடமும் பொறுமையாகச் சொல்லி, நாம் கேட்டால் மீண்டும் ஒரு முறை சொல்லி, சடாரி வைத்து ஒரு சில நேபாளி நாணயங்களையும் கொடுக்கிறார். (இது புத்தர்களுக்கும் புனிதமான இடம். இந்தக் கோவில் புத்தர்களால் நிர்வகிக்கப்பட்டு புத்த முறையில் பூஜை செய்யப்பெறுகிறது. அர்ச்சகப் பெண்மணி புத்த மதத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும்.)* *இந்தக் கோவிலில் நீர், நிலம், நெருப்பு, வெளி, வாயு என்ற பஞ்சபூதங்களும் இருப்பதாகக் கருதப்பெறுகிறது. சந்நிதிக்கு எதிரே ஒரு ஹோம குண்டத்தில் ஹோமத்தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. இது நெருப்பு. மற்ற நான்கு பூதங்கள் இயற்கையாகவே இங்கு இருக்கின்றன.* *மூலவர் - முக்திநாத், ஸ்ரீமூர்த்தி. சாளக்கிராம விக்கிரகம். வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.* *பிரத்யட்சம் - பிரம்மா, ருத்ரன், கண்டகி * *தாயார் - ஸ்ரீதேவி நாச்சியார் * *விமானம் - கனக விமானம் * *புஷ்கரணி - கண்டகி நதி, சக்ர தீர்த்தம் * *பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம் இது.* *பெருமாள் சந்நிதிக்கு எதிரே உள்ள ஹோமகுண்டத்துக்கு அருகில் ராமானுஜர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், மணவாள மாமுனிகள் ஆகியோர் விக்கிரகங்கள் உள்ளன. * *கோவிலிருந்து கீழே இறங்கி வரும்போது, வலப்புறமாக சற்றுத் தள்ளி ஒரு நரசிம்மர் சந்நிதி உள்ளது. இங்கு பல சாளக்கிராமங்கள் உள்ளன. * 101 Thiruchalagramam (Salagramam) - 108 divyadesam Intruduction - YouTube <https://www.youtube.com/watch?v=6ti_eFryAEE> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* *Vanakkam Subbu* [image: zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BrB%3D3n8-i3Zp7qAq11%2BVe-suCFpXFxZwm18hHZfLV6N7w%40mail.gmail.com.
