ஆஸ்துமா: இதையெல்லாம் செய்தால் போதும்… எளிதாகத் தப்பிக்கலாம்!I கன்சல்டிங்
ரூம் - 17

வெ.கௌசல்யா

வெளிப்புறக் காரணிகளுடன் கூடவே, அதீத மனஅழுத்தம், அதீத சிரிப்பு, அதிகப்படியான
கோவம் போன்ற அதிகப்படியான உணர்வு நிலைகளிலும் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

’’ஆஸ்துமா என்பது, சுவாசப் பாதை குறுகி, வீக்கம் ஏற்படும் நிலை. இதனால், சுவாசப்
பாதையில் வழக்கத்துக்கு அதிகமாக சளி (mucus) சுரக்கும். இது, சுவாசிப்பதை
சிரமமாக்கி, இருமலை ஏற்படுத்தும். மூச்சை வெளிவிடும்போது விசில் போல சத்தம்
வருவது, மூச்சுத்திணறல் என ஏற்படும். சிலருக்கு, ஆஸ்துமா உடல் நலத் தொந்தரவு
என்ற நிலையில் இருக்கும். சிலருக்கோ, தீவிரப் பிரச்னையாக வெளிப்பட்டு
அவர்களின் தினசரி இயக்கங்களை பாதித்து, உடல்நிலையை மோசமாக்கலாம்’’ என்று
கூறும் திருச்சியை சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஆர்.ராஜ் திலக், அது
குறித்த விழிப்புணர்வு தகவல்களை வழங்குகிறார் இங்கு...

ஆஸ்துமா... ஏன் ஏற்படுகிறது?

’’ஆஸ்துமா என்பது, நம் எதிர்ப்பு சக்தியின் அதீத வெளிப்பாடு என்று கூறலாம்.
அதாவது, சிலருக்கு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தேவைக்கு அதிகமாக வேலை
செய்வதால், நுரையீரலுக்கு உள்ளேயும், வெளியேயும் காற்றுப் பரிமாற்றம் செய்யும்
சுவாசப் பாதை விரிவடையும். விரிவடைந்த சுவாசப்பாதையில், சாம்பிராணி புகை, சாக்பீஸ்
போன்ற புறக்காரணிகளால் அழற்சி ஏற்படும்போது, சுவாசக் குழாய் வீங்கும். இதனால்
சுவாசப் பாதை சுருங்கி, நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் அளவு குறையும்.
வீக்கம் அதிகரிக்கும்போது, சுவாசப் பாதை மேலும் சுருங்கி, அதிக சளியை
உருவாக்கும். இவையெல்லாம் சேர்ந்து, மூச்சு விடுவதில் தீவிர சிரமங்களை
ஏற்படுத்தும். ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் ஏற்படக் கூடியது, தொற்றுநோய் அல்ல
என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்ச்சியான, மற்றும் மிகவும் வறட்சியான காற்றால் உந்தப்படும் ஆஸ்துமா, தூசு,
புகை, ரசாயனங்கள் என ஒருவரின் பணியிடம் காரணமாக உந்தப்படும் ஆஸ்துமா, காற்றில்
உள்ள துகள்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையால் உந்தப்படும் ஆஸ்துமா என, ஆஸ்துமாவை
அதிகரிக்கும் காரணிகள் பல.

அறிகுறிகள் என்னென்ன?

இருமல், நெஞ்சுப் பகுதியில் இறுக்கம், மூச்சுத் திண்றல் போன்றவை பொதுவான
அறிகுறிகள். நபருக்கு நபர், அறிகுறிகள் வேறுபடலாம். சமாளிக்க முடியாத அளவுக்கு
மூச்சுத் திணறல் இருப்பவர்களுக்கு உடனடியாக இன்ஹேலர் போன்ற முதலுதவி
கொடுக்கப்பட்டு, மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட வேண்டும்.

அலர்ஜி தூண்டுதல்... எவையெல்லாம் ஏற்படுத்தலாம்?

ஆஸ்துமா, ஒவ்வாமையால் தூண்டப்படுகிறது என்றதும், பலருக்கும் தூசுதான் முதலில்
நினைவுக்கு வரும். ஆம்... தூசு அதிகமாக இருக்கும் இடங்களான போக்குவரத்து
நெரிசல் உள்ள சாலைகள், திருவிழா போன்ற கூட்டம் அதிகமுள்ள இடங்களில் உடனடியாக
ஒவ்வாமை தூண்டுதல் ஏற்படும். தவிரவும், ஆஸ்துமாவை தூண்டும் காரணிகள் பல.
அடர்த்தியான நறுமணப் பொருள்கள், ஊதுபத்தி, சாம்பிராணி புகை, சிகரெட்
புகை, காற்றில்
கலந்திருக்கும் மகரந்த துகள்கள், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின்
ரோமம் போன்றவையும் ஒவ்வாமையைத் தூண்டிவிடுதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பணியிட ஆஸ்துமா தூண்டலைப் பொறுத்தவரை, ஒருவர் தன் பணிச்சூழலில் எதிர்கொள்ள
நேரிடும் ரசாயனங்கள், புகை, நூல், ஆடை, சாக்பீஸ், புத்தகங்கள் போன்றவை உள்ள
இடங்களில் நிலவும் காற்று மாசுபாடு எனப் பலவற்றாலும் ஆஸ்துமா தூண்டப்படும்.
இதனை, பணி விடுமுறை நாள்களில் அவர்களுக்கு அறிகுறிகள் குறைந்திருப்பதைக்
கொண்டு கண்டறிய முடியும்.

வீட்டிலிருப்பவர்களுக்கு ஏற்படும் ஒவ்வாமைக்கு ஒட்டடை, தூசு, மகரந்த
துகள்கள், வளர்ப்பு
பறவைகளின் எச்சம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் போன்றவற்றின் மூலம்
மட்டுமல்லாமல் போர்வை, பெட்ஷீட், மெத்தை, சோஃபா போன்றவற்றில் இருந்து காற்றில்
கலக்கும் நுண் பூச்சிகளான ஹவுஸ் டஸ்ட் மைட் (House dust mite) மூலமும்
ஏற்படலாம்.

இந்த வெளிப்புறக் காரணிகளுடன் கூடவே, அதீத மனஅழுத்தம், அதீத சிரிப்பு,
அதிகப்படியான
கோபம் போன்ற அதிகப்படியான உணர்வு நிலைகளிலும் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

என்ன பரிசோதனை?

ஆஸ்துமா அறிகுறிகள் தென்பட்டால், நுரையீரலின் செயல்திறனை அறியும் பி.எஃப்.டி (PFT
- Pulmonary function testing) பரிசோதனை செய்து, உறுதிப்படுத்தலாம்.
மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகளையும், சிகிச்சைக் காலத்தையும்
தொடர வேண்டும்.

எப்படி தவிர்ப்பது, சிகிச்சை என்ன?

ஆஸ்துமாவுக்கான தூண்டுதல் ஒவ்வொருவருக்கும் அவரின் சூழலைப் பொறுத்து மாறுபடும்
என்பதால், ஒவ்வாமைக்கான காரணிகளைக் கண்டறிந்து அதிலிருந்து விலகியிருக்க
வேண்டும். மாஸ்க் அணிந்துகொள்வது மிகவும் உதவும். வீட்டை சுத்தமாக
வைத்துக்கொள்வது அவசியம். ஒருவேளை, குளிர் போன்ற தவிர்க்க முடியாத காரணிகள்
ஒவ்வாமைக்கு காரணமாக அமைந்தால், மருத்துவர் ஆலோசனை மற்றும் சிகிச்சை அவசியம்.

ஆஸ்துமா என்பது, புறக்காரணிகளால் உடலில் ஏற்படும் விளைவு (Reaction) என்பதால்
அதனை தூண்டிவிடும் காரணிகளிடமிருந்து விலகியிருப்பது, ஆஸ்துமா சரியாவதற்குச்
சமமாகும். கூடவே, தேவைப்படுபவர்கள் சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில், நுரையீரலில் தீவிர பாதிப்புகள் ஏற்படும்.’’

சுவாசிப்போம்... சிக்கல் இல்லாமல்!  K R IRS 2624

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoroeWomY87f%2BhybYYP6x%2B9ctcT8YTehFTw%3DtKq70ymKeA%40mail.gmail.com.

Reply via email to