ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~~~~ 179 / 29-01-2026
சுயம்பிரபை... ★அனுமனும் அங்கதனும் அங்கே ஒரு பெரிய குகையை கண்டு பிடித்தார்கள். அந்த குகைக்குள் இருந்து பல வகைப் பறவைகள் சந்தோசமாக வெளிவந்து கொண்டிருந்தன. குகைக்குள் இருந்து நல்ல வாசனையோடு காற்று வீசுவதை பார்த்து இந்த குகையில் தண்ணீர் இருக்க வேண்டும். அனைவரும் உள்ளே செல்வோம் வாருங்கள் என்று கூறினார்கள். அந்த குகைக்குள் இருட்டாக இருந்தது. ஒருவர் கையை ஒருவர் இருகப் பிடித்துக் கொண்டு தடுமாறி நடந்து சென்றனர்.தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தால் வருந்திய வானரங்கள் வெகுதூரம் இருட்டிலேயே சென்றார்கள். குகையின் இறுதியில் வெளிச்சத்துடன் மிக ரம்யமான நகரத்தை கண்டார்கள். ★மிக அதிசயமான தங்கத்தால் ஆன மாளிகைகளும் எல்லாவித செல்வமும் நிறைந்த நகரத்தை கண்டார்கள். மனிதர்களின் நடமாட்டமே இல்லாத அந்த நகரம் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சுவையான மிக அருமையான உணவுகளும்,உடைகளும் அங்கு இருந்தன. சிலர் இது தான் அந்த அரக்கன் ராவணன் சீதையை சிறை வைத்துள்ள இடம் என்று நினைத்தனர். அங்கு ஓர் அழகிய மண்டபத்தில் ஓர் பெண் தவம் செய்து கொண்டு இருந்தாள். மரவுரி தரித்த அந்த தவஸ்வியை கண்டும் அவரின் முகத்தில் இருந்த தேஜஸை பார்த்தும் வானரங்கள் நடுங்கினார்கள். ★அப்பெண் தபஸ்வினி இந்த நகருக்குள் யாரோ மனிதர்கள் வந்துள்ளார்கள் என்பதை அறிந்து கண் விழித்து யாரெனப் பார்த்தாள். வானரங்கள் நிற்பதைப் பார்த்து முன் நின்ற அனுமனை பார்த்து, தாங்கள் யார்? என வினவினாள். அனுமன், நாங்கள் அனைவரும் ஶ்ரீராமருடைய அடியார்கள். என் பெயர் அனுமன் என்றார். பிறகு அனுமன் அந்த தபஸ்வினியை பார்த்து, தாங்கள் யார்? தாங்கள் தனியாக இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என வினவினான்.மேலும் அனுமன் அவரிடம் சென்று வணங்கி தாயே! நாங்கள் சோர்வினாலும் தண்ணீர் தாகத்தினாலும் உள்ளே வந்தோம். தங்களைக் கண்டு எங்கள் கூட்டத்தினர் பயப்படுகின்றார்கள். தங்களைப் பற்றியும், இந்த விசித்திர குகையைப் பற்றியும் சொல்லி எங்கள் வானர கூட்டத்தின் பயத்தை போக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ★அதற்கு அந்த தவஸ்வினி, நீங்கள் அனைவரும் மிகவும் களைப்பாகவும் பசியுடனும் இருக்கின்றீர்கள். முதலில் உங்கள் பசி, தாகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் பேசலாம் என்று கூறிவிட்டு அவர்களுக்கு தேவையான உணவு முதலானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தாள். வானரர் அனைவரும் பசியாறி மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்பொது தவஸ்வினி பேச ஆரம்பித்தாள். இந்த அழகிய அரண்மனை வானவர்களுடைய விஸ்வகர்மா மயன் கட்டியது. பிரம்மாவினால் சுக்ராச்சாரியாருக்கு உபதேசம் செய்யப்பட்ட சிற்பக் கலையை, அவரிடம் இருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து நன்கு கற்றவன். ★இந்த அரண்மனையை அவன் கட்டி வெகுகாலம் இங்கே வசித்து வந்தான். அத்துடன் தெய்வப் பெண்ணான ஹேமையுடன், தான் அமைத்த அழகிய நகரில் கூடா ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு நான் துணை புரிந்தேன். மயன் ஹேமையுடன் இருப்பதாக நாரத முனிவர் இந்திரனிடம் கூறினார். இதனால் கோபமடைந்த அந்த இந்திரன் மயனைக் கொன்று விட்டு ஹேமையை அவரின் தேவலோகத்திற்கு அனுப்பி விட்டார். என்னை இங்கேயே தனியாக தவம் செய்து கொண்டு இருக்கும்படி கூறினார். எனது பெயர் சுயம்பிரபா. இந்த இடத்தை காவல் காத்துக் கொண்டும் தவம் செய்து கொண்டும் இருக்கிறேன். ★இவ்வளவு பெரிய கூட்டமாக வந்திருக்கும் நீங்கள் யார்? உங்கள் காரியம் என்ன? ஏன் இந்த மாதிரி காடுகளில் திரிந்து களைத்து இருக்கின்றீர்கள்? என்று கேட்டாள். அனுமன் பேச ஆரம்பித்தார். தசரத குமாரன் ஶ்ரீராமர் இந்த உலகத்திற்கு அதிபதியானவர். தன் தம்பி மற்றும் மனைவியுடன் தன் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக ராஜ்ய பதவியை விட்டு காட்டிற்குள் வனவாசம் செய்துக் கொண்டு இருந்தார். அப்போது ராட்சதன் ஒருவன் ராமருடைய மனைவி சீதையை தூக்கிக் கொண்டு சென்று விட்டான். சீதையை தேடிக் கொண்டு ராமரும் லட்சுமணனும் வந்தார்கள். ★வன ராஜன் சுக்ரீவன் அவர்களுக்கு நண்பனானான். ராமருக்காக சீதையை தேடும்படி சுக்ரீவன் ஆணையிட்டு ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து எங்களை அனுப்பி வைத்தான். அவர் இட்ட ஆணையை நிறைவேற்ற நாங்கள் அனைத்து காடுகளிலும் குகைகளிலும் தேடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது தாகத்தாலும் பசியாலும் சோர்வினாலும் நாங்கள் இந்த குகைக்குள் வந்து சேர்ந்தோம். குகைக்குள் நீண்ட நாட்களாக தண்ணீரை தேடிக்கொண்டு இருந்ததில் சுக்ரீவன் எங்களுக்கு விதித்த மாத காலம் முடிந்து விட்டது. ★இன்னும் நாங்கள் சீதையை கண்டு பிடிக்கவில்லை. சுக்ரீவன் மிகவும் கண்டிப்பானவர். அவர் இட்ட வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யாத காரணத்தினால் எங்களைக் கொன்று விடுவார். தயவு செய்து நாங்கள் விரைவாக வெளியில் செல்வதற்கான வழியை சொல்லுங்கள் என்று அனுமன் தவஸ்வியிடம் விபரமாகச் சொல்லி முடித்தார். நானும் உங்களுக்காகத்தான் இவ்வளவு வருடங்களாக காத்திருந்தேன். சீதையை மீட்க அனுமனிடம் வழிகளைக்கூறி, அதன் பின் தேவலோகம் வந்தடைவாய் என இந்திரன் எனக்கு ஆணையிட்டு இருந்தார். ★ஆகவே உங்களுக்கு இந்த இடத்தைவிட்டு வெளியே செல்லும் வழியைக் காண்பித்து பின்னர் நான் இந்திர லோகம் செல்வேன் எனக் கூறினாள் சுயம்பிரபை. பின்னர் அனுமன் முதலானோரை அழைத்துக் கொண்டு அந்த குகையை விட்டு வெளியேறினாள். தாங்கள் எனக்கு இதிலிருந்து மோட்ச பதவியை அளிக்க வேண்டும் என்றாள். பிறகு அனைவரும் ராமநாமத்தை ஜபித்து சுயம்பிரபைக்கு மோட்சத்தை அளித்தனர். சுயம்பிரபை தேவலோகத்தை சேர்ந்தாள். நாளை.................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtiEs2x-jKT_T7G6OotX_s00%3DyM-h8w1mq5-UEirDiv2g%40mail.gmail.com.
