ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~~~~ 182 /01-02-2026
சம்பாதி... ★கருடனும் அருணனும் அண்ணன் தம்பிகள். அண்ணன் கருடனுக்கு சம்பாதியும், ஜடாயுவும் இரண்டு குமாரர்கள். இருவரும் சிறு வயதிலிருந்தே தாங்கள் பெற்ற அபார சக்தியை அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி ஒரு நாள் இருவரும் ஆகாயத்தில் போட்டி போட்டுக் கொண்டு உயரப் பறந்து சென்று கொண்டு இருந்தனர். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்து கொண்டு இருந்தது. ஜடாயுவை வெப்பம் கொளுத்தி விடும் போல் இருந்தது. அப்போது சம்பாதி தன் சிறகுகளை விரித்து ஜடாயுவைக் காப்பற்றினான். ஆனால் சம்பாதியின் சிறகு எரிந்து போனது. ★சம்பாதி பறக்க முடியாமல் கீழே மலை மேல் விழுந்தான். ஆகவே அன்றிலிருந்து சம்பாதி பறக்க முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான் என்று சம்பாதியைப் பற்றி அனைத்தும் தெரிந்த ஜாம்பவன் அங்கிருந்த அனைவரிடமும் கூறும்போது சம்பாதி பேசத் தொடங்கினார். ஆகாயத்தில் போட்டி போட்டுக் கொண்டு மேலே கிளம்பினோம். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்தது. சிறுவனான ஜடாயு மிகவும் சோர்வடைந்தான். வெப்பம் ஜடாயுவை எரித்து விடும் போலிருந்தது. உடனே எனது சிறகுகளை விரித்து ஜடாயுவை காப்பாற்றினேன். அவன் உயிர் பிழைத்தான். ★ஆனால் எனது சிறகுகள் எரிந்து பறக்க முடியாமல் இந்த மலை மேல் விழுந்தேன். இந்த மலையின் மீது இருந்த நிசாகர் என்ற முனிவரிடம் எனக்கு விமோசனம் கேட்டேன். முக்காலமும் உணர்ந்த அவர் ராம அவதாரத்தை இறைவன் விரைவில் எடுப்பார். அப்போது ஶ்ரீராம தூதர்களுக்கு வேண்டிய ஒரு காரியத்தை நீ செய்வாய். அப்போது உனது சிறகுகள் பழையபடி வந்து உனது இளமை திரும்பும். ராமரை காணும் பாக்கியம் உனக்கு உண்டாகும் என்றார். அதன்படி ராமரை பார்க்கவும் ராம காரியம் செய்வதற்காகவும் இங்கே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஜடாயு இறந்து விட்டான் என்று தாங்கள் பேசிக் கொண்டிருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய தம்பி எப்படி இறந்தான் சொல்லுங்கள் என்றான் கழுகரசன் சம்பாதி. ★அனுமன் சம்பாதியிடம், ராவணன் சீதையை கவர்ந்து சென்ற போது ஜடாயு அரக்கன் ராவணனிடம் போரிட்டார். போரின் போது ராவணன், சிவன் கொடுத்த வாளால் ஜடாயுவின் சிறகுகளையும், கால்களையும் வெட்டி வீழ்த்தியதால் ஜடாயு இறந்து விட்டார் எனக் கூறினார். இதைக்கேட்ட சம்பாதி மயங்கி கீழே விழுந்தார். மயக்கம் தெளிந்த சம்பாதி, எம்பெருமான்! ராமரின் மனைவியை காக்கும் பொருட்டு ஜடாயு உயிர் துறந்து புகழை அடைந்துள்ளான். பிறகு சம்பாதி, அனுமனையும், மற்ற வானர வீரர்களையும் மகிழ்வுடன் பாராட்டினான். ★சம்பாதி, வானர வீரர்கள் அனைவரிடமும் ராம நாமத்தை சொல்லச் சொன்னான். அனைவரும் ராம நாமத்தை சொல்லும்போது சம்பாதியின் சிறகுகள் வேகமாக முளைக்க ஆரம்பித்தது. திரும்பவும் தன் சிறகுகளை பெற்ற சம்பாதி மிகவும் வலிமையுடையவனாக மாறினான். ராமருக்கு எப்படி உதவுவது சீதை இருக்குமிடம் கண்டுபிடிக்க தங்களுக்கு ஏதேனும் வழிவகைகள் தெரிந்தால் சொல்லுங்கள் என்று சம்பாதி கழுகிடம் கேட்டுக் கொண்டார்கள். ★அனைத்தையும் கேட்ட கழுகரசன் சம்பாதி எனது தம்பி ஜடாயுவை கொன்ற ராவணனை அழிக்க துடிக்கிறேன். சிறகில்லாத வயதான என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. ராவணனை அழிக்க உங்களுக்கு நான் உதவுகின்றேன். எனக்கு ராம காரியம் செய்யும் பாக்கியம் இப்போது கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்தது பிறகு அனுமன், ராவணன் சீதையை தென் திசை நோக்கி கவர்ந்து சென்றதால் நாங்கள் இவ்வழியாக சீதையைத் தேடி வந்துள்ளோம் என்றான். ★சம்பாதி, வீரர்களே! வருந்த வேண்டாம். நான் அரக்கன் ராவணன் சீதையை கவர்ந்து சென்றதை பார்த்தேன். அவன் அன்னை சீதையை கவர்ந்து கொண்டு இலங்கை நோக்கிச் சென்றான். மிகுந்த துன்பத்தில் இருந்த அன்னையை அங்கே ராவணன் சிறை வைத்து உள்ளான். நீங்கள் அங்கே சென்று சீதையை காண்பீராக! என்றான். பிறகு சம்பாதி, நீங்கள் அனைவரும் அங்கே செல்வது எளிதான விஷயம் அல்ல. உங்களில் மிக்க வலிமையும், தைரியமும் மிக்கவர் அங்கு சென்று, ராமர் கூறியதை சீதையிடம் கூறி அவரின் துயரங்களை நீக்கிவிட்டு வருவீராக என்றான். ★அப்படி உங்களால் இலங்கை செல்ல முடியாவிட்டால் ராமரிடம் சென்று சீதை இருக்கும் இடத்தை சொல்லுங்கள் என்று கூறி, அங்கதனிடம் பேச ஆரம்பித்தது. சூரியனால் எரிக்கப்பட்ட எனது சிறகுகள் ராம காரியத்தை செய்து முடித்ததும் முனிவர் சொன்னபடி மீண்டும் முளைத்து விட்டது. வாலிபப் பருவத்தில் எனக்கிருந்த பராக்கிரமமும் வலிமையும் மீண்டும் எனக்கு கிடைத்து விட்டது. முனிவரின் வாக்கு சத்திய வாக்கு என்று நிருபிக்கப்பட்டு விட்டது. ★இந்நிகழ்ச்சியே நீங்கள் மாதா சீதையை காண்பீர்கள், ஆகவே உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கான சான்று ஆகும். இனி உங்கள் காரியத்தை தொடருங்கள் என்று சொல்லி விட்டு கடற்கரையில் தம்பி ஜடாயு கழுகிற்கு கிரியைகள் செய்து திருப்தி அடைந்து அங்கிருந்த அனைவரிடமும் விடைப்பெற்று புறப்பட்டான் சம்பாதி கழுகு. வானரங்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். இனி சுக்ரீவன் நமக்கு தண்டனை கொடுப்பான் என்ற பயம் இல்லை. சீதை இருக்குமிடம் தெரிந்து கொண்டோம் என்று உற்சாகம் அடைந்தனர். நாளை முதல் சுந்தரகாண்டம் பதிவு வரப்போகிறது. முதலில் சுந்தர காண்டத்தைப பற்றிய முன்னுரையும் பின்னர் அனுமனின் சாகசங்கள் நிறைந்த பதிவுகளும் வரும். வணக்கத்துடன் நாக சுபராஜராவ் 9944110869. நாளை................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtFCy2ErEf79MVeGJn9kj3BHBYdGzwd7M1xT5E0xHUGuQ%40mail.gmail.com.
