ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~
187 /06-02-2026

ஸாகரத்தை தாண்டும்
ஸாகச வீரன் யார்?...

★சீதை இருக்கும் இடமும் அந்த ராட்சசன் ராவணன் இருக்கும் இடமும் சம்பாதி
கழுகின் மூலம் வானரங்களுக்கு தெரிந்து விட்டது. சுக்ரீவனிடம் போய் சொல்வதற்கு
இதுவே  போதும் என்று வானரங்கள் தம் மனதில் எண்ணினார்கள். அங்கிருந்த சில வானர
வீரர்கள், கழுகரசன் பொய் சொல்ல மாட்டான், ஆகவே நாம் மாதா சீதையை தேடி கண்டு
பிடித்தால் தான் நம்மால் உயிர் வாழ முடியும் என்றனர். சம்பாதி கழுகு சொன்னதை
மட்டும் வைத்துக் கொண்டு சீதையை நேரில் பார்க்காமல் வானரராஜா சுக்ரீவனிடத்தில்
இந்த செய்தி பற்றிச்  சொல்ல முடியாது.

★சீதையை தேடும் காரியத்தை நிறுத்தி விட்டு கிஷ்கிந்தைக்கு செல்வது சரியல்ல
என்று அங்கதன் கூறினான். நூறு யோசனை தூரம் கடல் தாண்டி இலங்கை சென்று
பார்த்தால் மட்டுமே ராம காரியம் செய்து முடித்தது போல் இருக்கும். அந்த நூறு
யோசனை தூரம் தாண்டிச் சென்று சீதையை நேரில் எப்படி பார்ப்பது என்று தெரியாமல்
வானரங்கள் திகைத்தார்கள். வானரங்கள் மறுபடியும் மிகுந்த கவலையில்
மூழ்கினார்கள். அங்கதன் பேச ஆரம்பித்தான். எந்த காரியம் என்றாலும் எப்படி
சாதிக்கலாம் என்று எண்ண வேண்டும். தைரியத்தை இழக்க வேண்டாம்.

★உங்கள் தாவும் சக்திகளைப் பற்றி சுக்ரீவன் சொல்ல நான்
கேள்விப்பட்டிருக்கிறேன். வானர வீரர்களே!  யார் யாருக்கு மிக அதிகமான தூரம்
தாவும் சக்திகள் உள்ளது? உங்களுடைய தாவும் சக்திகளைப் பற்றி ஒவ்வொருவராக
சொல்லுங்கள். அதன் பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்றான் அங்கதன்.
பிறகு அனைவரும் யார் கடலை கடந்து இலங்கை செல்வது என்று ஆலோசித்துக் கொண்டு
இருந்தனர். அப்போது அங்கிருந்த பல வானர வீரர்கள் தங்களால் கடலை கடந்து செல்ல
இயலாது எனக் கூறினர்.

★கஜன் என்ற வானரம் நான் பத்து யோசனை தூரம் மட்டும் தாண்டுவேன் என்றான்.
அடுத்து கவாஷன் என்ற வானரம் நான் இருபது யோசனை தூரம்தான் தாண்டுவேன் என்றான்.
பிறகு ஒவ்வோரு வானரமாக தங்களால் தாண்ட முடிந்த மிக அதிகமான யோசனை தூரத்தை
பற்றி சொல்லிக் கொண்டே வந்தார்கள். இறுதியில் அனைவரையும் விட மூத்தவரான
ஜாம்பவன் பேச ஆரம்பத்தான். இளமையில் நான் 100 யோசனை தூரத்திற்கும் அதிகமான
தூரத்தை தாண்டி இருக்கிறேன். இப்போது முதுமைத் தன்மை காரணமாக என்னால் 90 யோசனை
தூரம் மட்டுமே தாண்ட முடியும். ஆனால் இலங்கை நூறு யோசனை தூரம் இருக்கிறது.
என்னால் அங்கு செல்ல முடியவில்லேயே வயதாகி விட்டதே என்று வருத்தமாக
இருக்கிறது. இளமையோடு இருந்தால் நிச்சயமாக இந்நேரம் தாண்டியிருப்பேன் என்று
அங்கதனிடம் கூறினான்.

★சீதை இருக்கும் இலங்கைக்கு 100 யோசனை தூரம் தாண்டி இலங்கையை என்னால் சென்று
சேர முடியும் என்றான் அங்கதன். அனைத்து வானரங்களும் அங்கதனின் பேச்சில்
மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தார்கள். உடனே அங்கதன் சீதையை கண்டபின்
உடனடியாக மறுபடியும் அங்கிருந்து திரும்பவும் இவ்வளவு தூரம் தாவும் சக்தி
எனக்கு இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை என்றான். அதற்கு
ஜாம்பவான் அங்கதா அதைப் பற்றி நீ சந்தேகப்பட வேண்டியதில்லை. உனது தந்தையான
வாலிக்கு இருந்தது போலவே அளவற்ற சக்தி உனக்கும் உண்டு.

★உன்னால் 100 யோசனை தூரம் மட்டுமல்ல, அதனை தாண்டியும் உன்னால் சென்று விட்டு
மீண்டும் திரும்ப வரவும் முடியும். அதற்கேற்ற சக்தி உன்னிடம் உள்ளது. ஆனால்
இந்த காரியத்தை யுவராஜாவாகிய நீ செய்தால் சரியாக இருக்காது. நீ மற்றவர்களுக்கு
உத்தரவிட்டு அனைத்து காரியங்களையும் செய்து முடித்தல் வேண்டும். இதுவே ராஜநீதி
ஆகும். இச்செயலை செய்ய சரியான நபர் அனுமனே. அதோ ஒரு ஓரத்தில் மௌனமாக அமர்ந்து
இருக்கும் அனுமனே இந்தக் இக்காரியத்தை செய்து முடிக்கும் திறமை பெற்றவன்.
அனுமனுக்கு நீண்ட வாழ் நாள் வரம் உள்ளது. அதனால், அவனை யாரும் அழிக்க இயலாது.
சாஸ்திர நூல்க ளின் நுட்பங்களை அவன் நன்றாக அறிந்தவன். திறமையாய்ப் பேசும்
சொல்வன்மை உடையவன். எமனும் அஞ்சும் சினமும், உடல் வலிமையும், சிவனைப் போலக்
கடும்போர் செய்யும் திறமையும் படைத்தவன்.

★கடல் கடந்து திரும்பும் ஆற்றலும் நம்முடைய அனுமனுக்குத்தான் உண்டு, ராமனும்
அனுமனிடமே மிக்க நம்பிக்கை வைத்திருக்கிறான். எண் ணிச் செயல்படும்
நுண்ணறிவும், எதையும் உடனே சாதிக்கும் திண்மையும் நமது அனுமனிடமே உள்ளன. அவன்
வயதாலும் என்னை விட  மிகவும் (ஜாம்பவானை விட)  இளைஞன்.  பேருருவம் எடுத்து
மண்ணும் விண்ணும் வியாபிக்கும் அற்புத  பேராற்றல் அவனிடமே உள்ளது.
அமைச்சனுக்கு உரிய அறிவும், படைத் தலைவனுக்கு உரிய வீரமும், அறிஞர்க்கு உரிய
சிந்தனையும், சிங்கம் போன்ற சீற்றமும், அஞ்சாமையும் அவனிடம் உள்ளபடியால் அந்த
இலங்கைக்கு செல்லத் தக்கவன் அனுமனே” என்று ஜாம்பவான் சொல்லி அனுமனை அருகில்
அழைத்து வந்தான்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை..................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dds1cqh_ku%2BRWa%3D9gQU233KDmo7g3kj%2B9a1%3DD-5eBxbaZw%40mail.gmail.com.

Reply via email to