ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~~~~~~~ 192 / 11-02-2026
சீதையைத் தேடும் அனுமன்... ★அனுமன் நகரத்திற்குள் காலை வைத்ததும் எதிரியின் தலை மீது தன் காலை வைப்பது போல இருந்தது அனுமனுக்கு. அந்த நகரம் குபேரனின் நகரத்திற்கு இணையாக, மிக்க அழகுடனும் மிகுந்த செல்வச் செழிப்புடனும் இருந்தது. மாளிகைகள், வீடுகள் அனைத்தும் தங்கத்தாலும், நவரத்தினங்களாலும் மிகுந்த பிரகாசமாக ஜொலித்தது. நகரின் வீதிகள் அனைத்தும் மலர்களால் நன்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இலங்கை நகரத்திற்குள் கொடூரமான வடிவத்துடன் வில், அம்பு, கத்தி என்று பல விதமான விசித்திர ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு, கவசத்துடன் வீரர்கள் பலர் நகரத்தை காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ★மக்கள் அகோரமாகவும் பல நிறங்களையும், பல வடிவங்கள் உடையவர்களாகவும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வோரு மாளிகையாக அனுமன் தேடிக் கொண்டே வந்தான். எங்கும் சீதையை பார்க்க முடியவில்லை என்று அனுமன் மிக்க வருத்தம் அடைந்தான். அனுமன் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் தன் உருவத்தை அதற்கேற்றார் போல் மாற்றிக்கொண்டு சென்று தேடி பார்த்தான். ★பெண்ணை ஒதுக்கி வாழ்ந்தவன், பெண்ணைத் தேடும் பணியில் அமர்ந்தான். இது ஒரு புதுமையாய் இருந்தது. ராமன் உரைத்த அடையாளம் அவனுக்கு வரைபடமாய் விளங்கியது. சீதை என்னும் கோதை, எழில் மிகு ஒவியமாய் அவன் மனத்தில் பதிந்து இருந்தாள். வழியில் காணும் பெண்களை அவன் விழிகள் சந்தித்தன. அழகு என்பதற்கு அடையாளம் எதுவும் அவன் கண்ணில் படவில்லை. அரக்கியர் இடையே ஜனகனின் அணங்கனைய மகளாகிய சீதையைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ★நகருக்குள் சென்ற அனுமன் அந்நகரின் சிறப்புகளை கண்டு வியந்து போனான். அந்நகரின் ஓரமாக சீதையை தேடி கொண்டு சென்றான். அனுமன் போகும் வழியில் சோலைகள், இரத்தின மாளிகைகள், மாட்டுக் கொட்டில், குதிரை லாயங்கள், அரக்கர்கள், தேவ மாதர்கள் போன்றவர்களை கடந்து மாதா சீதையை தேடிக் கொண்டு சென்றான்.இவ்வாறு அனுமன் சீதையை தேடி போகும் போது கும்பகர்ணனின் அழகு மாளிகையை அடைந்தான். ★அங்கு கும்பகர்ணன் தூங்கிக் கொண்டு இருந்தான். மலை ஒன்று உருண்டு கிடப்பதைப் பார்த்தான். அதன் தோற்றத்தைக் கண்டு வியந்தான். பேருருவம் படைத்த அது நின்றால் எப்படி இருக்கும்? என்று நினைத்தான். மலையின் உருவை அவன் உருவில் வைத்துப் பார்த்தான். தின்பதற்கே பிறந்தவன் அவன், என்பதை அறிந்தான். ஊனும் கள்ளும் உண்டபின் அவன் உறக்கம் கொண்டவனாய்க் காணப்பட்டான். அவன் குறட்டை விட்டுக்கொண்டு உறங்குவதைப் பார்த்தான்.கும்பகர்ணனை பார்த்தவுடன், அவன் ராவணன் என நினைத்து மிகுந்த கோபம் கொண்டான், அனுமன். ★கும்பகர்ணனுக்கு மிகவும் அருகில் நெருங்கிச் சென்றான். இவனுக்கு பத்து தலைகளும், இருபது தோள்களும், இருபது கைகளும் இல்லையே. அதுமட்டுமல்ல, பேரரசனாகிய ஒருவன் இப்படிப் பெருந்துயில் பெற்றிருக்க முடியாது என்பதால் அவன் ராவணனாய் இருக்க முடியாது என்பதை உறுதி செய்து கொண்டான். அனுமனின் கோபம் சிறிதளவு தணிந்தது. இவன் ராவணன் இல்லை என்பதை அறிந்து, இவன் யாராக இருந்தால் நமக்கு என்ன? இவன் இப்படியே சில காலம் நன்றாக தூங்கட்டும் என்று நினைத்துக் கொண்டு சீதையை தேட தொடங்கினான். ★அனுமன் சீதையை பலப்பல இடங்களில் தேடினான். மாடங்கள், மாளிகைகள், அந்தபுரம், மண்டபங்கள், ஆலயங்கள் என அனைத்து இடங்களிலும் சீதையை தேடி அலைந்தான். எங்கு தேடியும் சீதையை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இவ்வாறு அனுமன் சீதையை தேடி போகும் போது விபீஷணனின் பெரிய மாளிகையை அடைந்தான். அங்கு மற்ற மாளிகைகளில் கண்டது போல் மதுகுடங்களை காணவில்லை. அதற்கு பதிலாக தேன், பால், பஞ்சாமிர்தம் போன்ற பூஜைக்குரிய பழங்கள், பொருட்களை கண்டான். பிறகு தூங்கி கொண்டிருக்கும் விபீஷணனின் அருகில் சென்று அவனது முகத்தைப் பார்த்தார். விபீஷணனின் முகத்தில் கருணை வழிந்தது. ★கறுப்பு நிறத்தில் வெள்ளை உள்ளம் குடி கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நீதியும் அறமும் அவனிடம் இடம் வேண்டிக் குடிகொண்டிருந்ததைக் காண முடிந்தது. ‘பகை நடுவே உறவு கொள்ள ஒருவன் உளன்’ என்பதை அறிந்தான். ‘இவன் தப்பிப் பிறந்தவன்’ என்ற முடிவுக்கு வந்தான். இவன் குற்றம் செய்யாத உயர்ந்த குணமுடையவன் என்பதை அறிந்துக் கொண்டான். இவன் கும்பகர்ணனின் தம்பியான விபீஷணனாகத் தான் இருக்க வேண்டும் என்று அறிந்தான். அவன் மீது இவன் மதிப்பு மிக்க கண்ணோட்டம் சென்றது; ‘இவன் பயன்படத் தக்கவன், என்று மதிப்பீடு செய்து கொண்டான். பிறகு அங்கிருந்து சென்று பல மாளிகையில் தேடினான். சீதையை தேடுதல் தொடரும். வணக்கத்துடன் நாக சுபராஜராவ் 9944110869 நாளை................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsVjgq1_g6GWXo%2BQ5T1wdaozvVaaR9doVUBT5j6qKf47g%40mail.gmail.com.
