ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~~~~~~
191 / 10-02-2026

லங்காதேவி...

★அனுமன் சுற்றிலும் பார்த்தார். இலங்கையின் வளம் குபேரனின் அழகாபுரியை
காட்டிலும் ஜஸ்வர்யத்தின் உச்சத்தில் இருந்தது. திருகூட மலையில் ராவணனின்
கோட்டை தாமரை, நீலோத்பலம் என்னும் அழகிய மலர்களால் அகழி போல சுற்றி அழகுடன்
இருந்ததை கண்டார். இலங்கை நகரத்தை விருப்பப்படி உருவத்தை மாற்றிக் கொள்ளும்
வலிமையான ராட்சதர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்.
பின்பு அங்கிருந்து இலங்கை நகரை சுற்றி பார்த்தான். இலங்கை நகரின் அழகை கண்டு
அனுமன் வியந்தான்.

★இலங்கை மாநகரின் மாட மாளிகைகள், கோபுரங்கள், குளங்கள், நந்தவனங்கள்
நவரத்தினங்கள் போல் மிகவும் ஜொலித்தது. பிறகு அனுமன், இவ்வளவு அழகு வாய்ந்த
இலங்கையை காக்க எத்தனை அரக்கர்கள் இருக்க வேண்டும்? இப்பொழுது நான் இங்கு
வந்தது போல் வானர வீரர்களான அங்கதனும், தளபதியான நளனும், அரசனான சுக்ரீவனும்
மட்டுமே வர முடியும். மற்ற வானர வீரர்கள் எவ்வாறு இங்கு வர முடியும்? சீதையை
எப்படி மீட்பது? சீதை எங்கே இருப்பார்? நான் சீதையை எவ்வாறு காண்பேன்? நான்
சீதையை அரக்கர்களுக்கு தெரியாமல் தான் பார்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது
பகலாக இருக்கிறது. அனுமன் நிதானமாக யோசித்தார்.

★நாம் யார்?   எங்கிருந்து இங்கு வந்திருக்கின்றோம்?  எதற்காக
வந்திருக்கின்றோம்? என்று யாருக்கும் தெரியாத வகையில் சீதையை தேட வேண்டும்
என்று முடிவு செய்தார். தான் செய்யும் வேலையை தடங்கல் இல்லாமல் ஆராய்ந்து தான்
செய்ய வேண்டும். இரவில் சீதையை தேடிச் செல்லலாம் என மனதில் நினைத்துக்
கொண்டான்.
பகலில் சென்றால் யார் கண்ணிலாவது பட்டு விடுவோம் என்று இரவு வரை காத்திருந்த
அனுமன் மிகவும் சிறியதோர் உருவத்திற்கு மாறினான்.
இருளும் மெல்ல மெல்ல அங்கு சூழ்ந்தது. அரக்கர்களான ராவணனின் ஏவலர்கள் இந்திர
லோகத்திற்கு சென்றனர். பின்பு
தேவர்களும், நாகர்களும் தமது  பணியை முடித்துக் கொண்டு வானவழியில் சென்றனர்.

★இரவும் முழுவதும் சூழ்ந்தது. சந்திரன் தோன்றினான். ராம தூதனான அனுமன் வந்ததை
பார்த்து சந்திரன் மிக்க மகிழ்ச்சியுடன் பிரகாசமான ஒளியை தந்தது.இலங்கையின்
நகரத்திற்குள் நுழைவதற்கு  முற்பட்டார். இவ்வளவு காவல் இருக்கும்
நகரத்திற்குள் புகுந்து எப்படி சீதையை தேடுவது என்ற வருத்தமும் விரைவில்
சீதையை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் சென்றார் அனுமன். விரோதியின்
கோட்டையின் நுழைவு வாயில் வழியாக செல்லக்கூடாது என்ற யுத்த நியதியின்படி வேறு
வழியாக ராம காரியம் நிறைவு பெற வேண்டும் என்று எண்ணி தனது இடது காலை வைத்து
இலங்கை நகரத்திற்குள் நுழைந்தான் அனுமன்.

★இலங்கா தேவி, இலங்கையை விழிப்புடன் பாதுகாத்து வரும் நகர தேவதை ஆவாள். நான்கு
முகங்களும், எட்டு கரங்களும், கொடிய உருவமும் கொண்டவள். அவள் தோற்றமே அச்சம்
தருவது போல் இருந்தது. அவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கு, வில்,
அம்பு ஆகிய பயங்கரமான ஆயுதங்களைத் தன் எட்டு கரங்களிலும் ஏந்திக் கொண்டு
இருந்தாள். அனுமன் மதில் சுவரில் ஏறுவதைக் கண்டு இலங்காதேவி, நில்! நில்! என
சொல்லிக் கொண்டு ஓடி வந்தாள். அனுமனிடம், யார் நீ? ஒரு குரங்கு, உனக்கு
எவ்வளவு தைரியம்? என் அனுமதியின்றி யாரும் உள் செல்லக் கூடாது. எவரும் உள்ளே
செல்ல அஞ்சும் இக்காரியத்தை செய்ய உனக்கு எவ்வளவு தைரியம்? இத்தனை அரக்கர்கள்
காவல் புரிவதை பார்த்து உனக்கு பயம் சிறிதும் இல்லையா? இங்கிருந்து ஓடிப்போ,
என்றாள்.

★இவளது பேச்சைக்கேட்டு அனுமனுக்கு கோபம் வந்தது. ஆனால் அனுமன் அதை
வெளிக்காட்டி கொள்ளவில்லை. அனுமன், எனக்கு இந்நகரை சுற்றிப் பார்க்க வேண்டும்
என்று ஆசை. அதனால் தான் நான் இந்த இடத்திற்கு வந்தேன் என்று புத்திசாலிதனமாக
கூறினான். நான் உன்னை இங்கிருந்து, ஓடிப்போ என்று சொன்ன பிறகும் நீ என்னிடம்
வாதம் செய்து கொண்டிருக்கிறாய். உனக்கு எவ்வளவு துணிவு இருந்தால் இங்கே வந்து
இருப்பாய்? உன்னைப் போன்றோர் இங்கே வரக் கூடாது. பதில் பேசாமல் இங்கிருந்து
ஓடிப் போ என ஏளனமாக கூறினாள். அரக்கி இப்படி பேசுவதை கேட்டு அனுமன் மனதில்
சிரித்துக் கொண்டான். மறுபடியும் அரக்கி அனுமனிடம், நீ யார்? யார் சொல்லி நீ
இங்கே வந்துள்ளாய்?

★நான் இவ்வளவு சொல்லியும் நீ இங்கிருந்து போவது போல் தெரியவில்லையே! உன்னை
கொன்றால் தான் இங்கிருந்து போவாய் என நினைக்கிறேன் என்றாள். அனுமன், நீ என்ன
தான் செய்தாலும், இந்த ஊருக்குள் போகாமல் திரும்பி போகமாட்டேன் என்றான்.
அனுமன் பேசியதைக் கேட்ட இலங்காதேவி, அனைவரும் என்னைப் பார்த்து அஞ்சி
நடுங்குவார்கள். ஆனால் இவன் என்னைப் பார்த்து பயப்படுவது போல் தெரியவில்லை.
இவன் சாதாரணமான குரங்கு இல்லை. இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது. இவனை
கொல்வது தான் சரி. இல்லையென்றால் இலங்காபுரிக்கு தீங்கு ஏற்படும் என்று மனதில்
நினைத்தாள். உடனே இவள் அனுமனை பார்த்து, முடிந்தால் உன் உயிரை காப்பாற்றிக்
கொள் என கூறிக் கொண்டு வேலை அனுமனை நோக்கி எறிந்தாள்.

★தன்னை நோக்கி வந்த வேலை அனுமன் தன் கைகளால் ஒடித்து தூக்கி எறிந்தான். தன்
வேலை ஒடித்த அனுமன் மீது மிகுந்த கோபம் கொண்டு பல விசித்திர ஆயுதங்களை
ஏவினாள். ஆனால் அனுமனோ தன்னை நோக்கி வந்த ஆயுதங்களை எல்லாம் ஒடித்து வானில்
வீசினான். தன் ஆயுதங்கள் அனைத்தும் வானில் தூக்கி எறியப்பட்டதை பார்த்து
மிகவும் கோபங்கொண்டு குன்றுகளை அனுமன் மேல் ஒவ்வொன்றாக தூக்கி எறிந்தாள்,
இலங்கா தேவி. பிறகு இலங்கா தேவி அனுமனை தன் கரங்களால் அடிக்க ஓடி வந்தாள்.
அனுமன் அவளது கரங்களை ஒன்றாக பிடித்து அவளை ஓங்கி அடித்தான். அவள் வலி தாங்க
முடியாமல் சுருண்டு கீழே விழுந்தாள்.

★பிறகு அந்த இலங்கா தேவி அனுமனிடம், வானரமே! வேறு எவராலும் வீழ்த்த முடியாத
என்னை நீ வீழ்த்திவிட்டாய். அப்படியென்றால் இந்த கொடிய அரக்கர்களுக்கு
அழிவுக்காலம் ஆரம்பித்துவிட்டது. ஐயனே! நான் பிரம்மதேவரின் கட்டளையினால்
இலங்கையை காவல் புரிகிறேன். பிரம்மன் என்னிடம், எப்போது உன்னை ஒரு வானரம்
வீழ்த்துகிறதோ, அப்பொழுது அரக்கர் குலம் அழிய போகிறது என்று அர்த்தம் என்றார்.
உன்னால் இன்று என் காவல் நிறைவுப்பெற்றது. பிரம்மன் சொன்னது போல்
நடந்துவிட்டது. இனி நீ செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்
எனக்கூறி அனுமனுக்கு வழிவிட்டு வானுலகம் சென்றாள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை..................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dduitt6ziUp4PCJdS7pFgcLFO4fM1QvUMmwh93sn4jB%3DJA%40mail.gmail.com.

Reply via email to