ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~~~~~~~~ 193 / 12-02-2026
அனுமனின் தேடல்... ★பிறகு அங்கிருந்து சென்று பல மாளிகையில் தேடினான். அங்கு பல பெண்கள் ஆடுவது மற்றும் பாடுவதுமாக இருந்தனர். பலர் உறங்கி கொண்டு இருந்தார்கள். இவர்களை எல்லாம் கடந்து, யாரும் எளிதில் நுழைய முடியாத இடங்களிலும் சென்று சீதையை தேடினான். அனுமன் சீதையை தேடிக் கொண்டு போகும்போது இந்திரஜித்தின் மாளிகைக்கு சென்றான். இந்திரஜித், ஆறுமுக கடவுள் முருக பெருமான் உறங்குவது போல் உறங்கி கொண்டு இருந்தான். இவன் அரக்கனா? முருக பெருமானா? இல்லை, இவர் வேறு யாராக இருக்கக்கூடும்? என மனதில் நினைத்துக் கொண்டான். ★இவன் இந்திரனைச் சிறையில் இட்டவன்’ என்பதை முன்பே கேட்டு அறிந்திருக்கிறான். அரக்கர் குலத்தில் அழகு உடைய இளைஞன் இருந்தது அவனுக்கு வியப்பை ஊட்டியது.இவன் மிகுந்த பலம் மற்றும் வலிமை உடையவன் என்பதை அனுமன் உணர்ந்தான். ‘இவனோடு நீண்ட போர் நிகழ்ந்த வேண்டிவரும்’ என்று மதித்தான். “இவன் ஒரு மாவீரனாய் இருக்க வேண்டும்” என்று கண்டான். இவனைப் போன்ற வீரர் இருப்பதால்தான் ராவணன் வலிமை மிக்கவனாய் இருக்கிறான், என முடிவு செய்தான்.இவனுடன் ராமரும், லட்சுமணரும் பல நாட்கள் போரிட நேரிடும் என கருதினான். ★பிறகு அனுமன் இங்கேயே நின்றிருந்தால் தாமதமாகிவிடும் என நினைத்து அங்கிருந்து அக்ஷய குமாரன், அதிகாயன் போன்ற பல வீரர்களின் மாளிகையில் சென்று சீதையை தேடினான். இலங்கை நகரின் இடையில் ஓர் அகழியும், ராவணனின் மாளிகையைச் சுற்றி ஓர் அகழியும் இருந்தது. அனுமன் இவ்விடத்தை அடைந்தான். இலங்கை நகரமே உறங்கி கொண்டிருந்த நேரத்தில் அனுமன் மட்டும் சீதையை தேடி அலைந்து கொண்டு இருந்தான். அனுமன் எல்லா இடங்களிலும் தேடிய பிறகு ராவணனின் மாளிகையை அடைந்தான். அங்கு அனுமன் மண்டோதரியின் மாளிகையை கண்டான். ★அனுமன், இம்மாளிகையை கூர்ந்து கவனித்தான். அந்த மாளிகை மற்ற மாளிகைகளை காட்டிலும் சந்திரனை போல் ஒளி வீசிக் கொண்டிருந்தது. இந்த மாளிகை தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. ஆதலால் இந்த மாளிகையில் தான் ராவணன் நிச்சயம் சீதையை வைத்திருக்க வேண்டும் என நினைத்தான்.அதனுள் நுழைந்து ராவணன் மனைவியான மண்டோதரியைக் கண்டான் வித்தியாதர மகளிர் உறையும் தெருக்களைக் கடந்தான், மண்டோதரி தங்கி இருந்த மண்டபத்தை அடைந்தான். ★‘சீதையிடம் இருக்கத் தக்க வனப்பும் எழிலும் அவளிடம் இருப்பதைக் கண்டு, அங்கு அவளைக் காண முடியும்’ என்று நம்பிக்கை கொண்டான். அங்கே மண்டோதரி கண் அயர்ந்து உறங்கிக் கிடந்தாள். மயன் மகளாகிய மண்டோதரியை ‘ஜனகன் மகள்’ என்று தவறாய் நினைத்தான். ‘சுகபோக சுந்தரியாக மாறி விட்டாளோ?’ என்று மயங்கினான். சோர்ந்த குழலும், கலைந்த துயிலும், அயர்ந்த முகமும், ஜீவனற்ற முகப் பொலிவும் அவள் மண்டோதரி என்பதை உணர்த்தின. ‘நலம் மிக்க நங்கை ஒருத்தி தனக்கு மனைவியாய் இருக்க, மற்றொருத்தியை ராவணன் நாடுகிறானே’ என்று வியந்தான். ★ ராவணன் சீதையை நிச்சயம் இங்கேதான் வைத்து இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு மண்டோதரியின் மாளிகையை எட்டி பார்த்தான். அங்கு பணிப் பெண்கள் மலரடி வருட, சில பெண்கள் மெல்லிய விசிறியால் காற்று வரும்படி வீச, சிலர் இன்னிசை இசைக்க, ஒரு அழகிய பெண் அங்கு தூங்கி கொண்டிருந்தாள். இப்படி சகல வசதிகளுடன் உறங்குவது யார்? என நினைத்தான், அனுமன். இவள் தான் சீதையோ? என நினைத்து அப்பெண்ணை உற்று நோக்கினான். இவளை நன்கு பார்த்தால் மானுட பெண்ணாக தெரியவில்லை. இவளின் முகத்தில் ராமரை பிரிந்த சோகம் சிறிதும் தெரியவில்லை. அப்படியென்றால் நிச்சயம் இவள் சீதையாக இருக்க முடியாது என உறுதி செய்து கொண்டான். ★அனுமன் விண்ணையே முட்டும் அளவிற்கு பெரிய மாளிகை ஒன்றை கண்டான். அங்கு ராவணனின் பறக்கும் புஷ்பக விமானம் இருந்தது. இந்த விமானம் பிரம்மாவிடம் இருந்து குபேரன் தனக்காகப் பெற்றிருந்தான். அதை ராவணன் கொண்டு வந்து வைத்திருந்தான். புஷ்பக விமானத்தை பார்த்த அனுமன் இது ராவணனின் மாளிகையாக இருக்கும் என்று எண்ணி இங்கு சீதை இருக்கலாம் என்று ராவணனின் மாளிகைக்குள் நுழைந்தான். சமைக்கும் இடம், உணவருந்தும் இடம் என்று ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தான். எங்கும் சீதையை காணவில்லை. பெண்கள் மட்டும் இருக்கும் அறைக்கு அவர்களின் அனுமதி இல்லாமல் செல்லக் கூடாது என்ற தர்மத்தையும் மீறி பெண்களின் அறைக்குள்ளும் சென்று பார்த்தான். அங்கும் சீதை இல்லை. ஓர் அறையில் தங்கத்தினாலும். மற்றும் வைரத்தினாலும் செய்யப்பட்ட ஒரு கட்டிலில் ஓர் மலை போல் ஒர் ராட்சதன் படுத்திருந்தான். வணக்கத்துடன் நாக சுபராஜராவ் 9944110869 நாளை................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvbvdkN-OdLRtc%3DEbtyozPY6n9qnj8MFz7H%2Bc7s0TrCrw%40mail.gmail.com.
