ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~~~~~~~
194 / 13-02-2026

தொடர்ந்த தேடுதல்...

★பிறகு அங்கிருந்து சீதையை தேடிச் சென்றான் அனுமன். ராவணனுடைய மாளிகையை அடைந்த
அனுமன் அந்த அழகிய  மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இலங்கை நகரமே
நடுங்கியது. அனுமன் அரக்கன் ராவணனுடைய அறைக்குள் புகுந்து அவனை நன்கு உற்று
நோக்கினான்.அவனுடைய ரூபத்தை கண்டு அனுமன் ஒரு சில கணம் பிரம்மித்து நின்று
பார்த்தான். யானையின் தும்பிக்கை போன்ற கைகளும் மார்பில் விஷ்ணுவின்
சக்ராயுதம் மற்றும் இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட வடுவும் இந்திரனின்
ஐராவதன் யானையின் தந்தம் குத்தப்பட்ட தழும்புடன் இருப்பதை பார்த்தான்.

★அவனுக்கு பத்து தலைகள், இருபது தோள்கள், இருபது கைகளும் இருப்பதை பார்த்து
இவன் தான் ராவணன் என்பதை உறுதி செய்து கொண்டான். பணிப்பெண்கள்  உறங்கிக்
கொண்டே அவன் அடிகளை வருடிக் கொண்டு இருந்தனர். உறக்கம் கலைந்த ஒரு நிலையில்
படுக்கையில் புரண்டு கொண்டு அவன் காணப்பட்டான். சுடும் நெருப்பை மடியில்
கட்டிக் கொண்டு, அவனால் எப்படி அமைதியாய் உறங்கமுடியும்? சீதையை நெஞ்சில்
வைத்தவன், நெருப்பு வைத்த பஞ்சாய் எரிந்து அழிந்து கொண்டிருந்தான்.

★கும்பகர்ணனை ராவணன் என்று நினைத்து, அவன் மீது கோபங்கொண்ட அனுமன், ராவணனை
பார்த்தவுடன், இவனால் இந்த நகரம் அழிய போகிறது என்பதை நினைத்து
வருந்தினான்.அரக்கனை கண்ட அனுமன் பதைபதைத்தான். அவன் பத்துத் தலைகளையும்
கிள்ளி எறிந்து, பந்தாட மிகவும் விரும்பினான்.   ‘அவனை வென்று சீதையை மீட்பதை
விடக் கொன்று முடிப்பதேமேல்’ என்று நினைத்தான்.அங்கு சிறிது நேரம்  நின்று
நிதானமாய் நினைத்துப் பார்த்தான்.  ‘கண்டு வர சொல்லி அனுப்பப்பட்டவனே தவிர,
கொண்டு வரச் சொல்லப் பட்டேன் இல்லை’   என்பதை நினைந்தான். ‘எல்லை மீறிய
தொல்லைகளை விளைவிப்பது நல்லது அன்று’ என்ற முடிவுக்கு வந்தான்.

★“ராமன் வீரத்துக்கு விளைநிலம் வேண்டும்” என்பதற்காகத்தான் அவனை விட்டு வைத்து
எட்டிச் சென்றான்.  பிறகு அனுமன் சுற்றிலும் பார்த்தான்.   பல பெண்கள் அந்த
அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் தலைவி போல் இருந்த பெண்ணின்
அழகும் முக லட்சணமும் அவை சீதையாக இருக்குமோ? என்று அனுமனுக்கு சந்தேகம்
வந்தது. அடுத்த கணம் இது என்ன மடமை, சீதையை தவறாக நினைத்து விட்டோமே ராமரை
பிரிந்த சீதை துக்கத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு ராவணனின் அந்தப்
புரத்திலா தங்கியிருப்பாள்?. இது சீதை கிடையாது என்று முடிவு செய்தான்.

★பிறகு அனுமன், நான் இங்கு சீதையை தேடி வந்துள்ளேன். சீதையை கண்டுபிடிக்காமல்
இவனை கொல்வதோ  அல்லது வெறுமையாகத் திரும்பிச் செல்வதோ  நியாயமல்ல என தன் மனதை
சமாதானப்படுத்திக் கொண்டான். கோபம் தணிந்த அனுமன், இவனுடன் இருக்கும்
பெண்களின் கூட்டத்தில்  சீதை  இல்லை.  அப்படியென்றால் இவன் மாதா சீதையை எங்கே
வைத்து இருப்பான்?. இவன் தனிமையில் இருக்கிறான் என்றால் சீதை நல்ல நிலையில்
இருக்கிறாள் என்பது தெரிகிறது என நினைத்துக் கொண்டான்.

★பிறகு அனுமன்,சீதை அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு ராவணனின் மாளிகையை
விட்டு வெளியே வந்தான். நான் அனைத்து இடத்திலும் அன்னை சீதையை தேடிவிட்டேன்.
இன்னும் என்னால் சீதையை கண்டு பிடிக்க முடியவில்லையே என வருந்தினான். சீதையை
நான் இனி எங்கு சென்று தேடுவேன். ஒருவேளை ராவணன் சீதையை, கொன்றுவிட்டானோ,
இல்லை வேறு எங்கயாவது சிறை வைத்து இருப்பானோ என எண்ணினான். நான் நிச்சயம்
சீதையை கண்டுபிடித்துவிட்டு வருவேன் என ஶ்ரீ ராமரும், சுக்ரீவனும், அங்கதனும்,
ஜாம்பவானும், நளனும், நீலனும்  மற்றைய வானர வீரர்களும் எதிர்பார்த்துக் கொண்டு
இருப்பார்கள்.

★சுக்ரீவன் கொடுத்த ஒரு மாத காலமும் முடிந்துவிட்டது. நான் இன்னும் மாதா
சீதையைக் கண்டு பிடிக்கவில்லை. நான் எவ்வாறு ராமரின் முகத்தில் விழிப்பேன்.
சீதையை தேடி கண்டுபிடிக்க முடியாமல் மகேந்திர மலையில் உயிரை மாய்த்துக் கொள்ள
இருந்த வானர வீரர்களை, அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு சீதையை தேடி வந்தேனே.
நான் தேடி வந்த காரியத்தை முடிக்க  முடியவில்லையே என மிகவும் வருந்தினான்.
இனிமேல் நான் உயிருடன் இருந்து என்ன பயன்? நான் ராவணனையும் மற்ற
அரக்கர்களையும் கொன்றுவிட்டு நானும் இங்கேயே என் உயிரை மாய்த்து கொள்கிறேன் என
வருந்தினான்.

★கட்டிய கட்டிடங்களில் சீதை கால் அடி வைக்க வில்லை என்பதை அறிந்தான். அவன்
சுற்றாத இடமே இல்லை. எட்டிப்பாராத மாளிகை இல்லை. அவனுக்கே அலுப்பு ஏற்பட்டு
விட்டது.  ‘சலிப்பதால் பயன் ஏதுமில்லை’ என்று பயணத்தை மேலும்
தொடர்ந்தான்.அனுமன், இனி நான் தேவியை எவ்வாறு காண்பேன்?. கழுகரசன் சம்பாதி,
மாதா சீதை இலங்கையில்தான் இருக்கிறாள் என கூறினாரே. அவருடைய அந்த சொல்லும்
பொய்யாகி விட்டதே. இனி என் உடலில் உயிர் இருந்து என்ன பயன்? நான் இந்த
இலங்கையை கடலில் போட்டு அழுத்தி, நானும் உயிரை மாய்த்துக் கொள்வது தான் சரி
என்று உறுதி எடுத்து கொண்டான்.

★இவ்வாறு அனுமன் நினைத்து கொண்டு இருக்கையில், மிக அருகில் அழகான வனம் ஒன்று
இருப்பதை கண்டான். அந்த வனத்தின் பெயர் அசோக வனம்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை.....................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddu46Gz%3DMEuNM1AjayUFZMK0DKY1LrVt%3DgzGP0zmNGuZOQ%40mail.gmail.com.

Reply via email to