ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~
201 / 20-02-2026

சீதையின் துயரம்...

★ராமரைப் பற்றி சீதை பலவகையில் நினைக்க ஆரம்பித்தாள். ராட்சதன் தம்மை தூக்கி
வந்ததும், தாம் அவரை பிரிந்த துக்கத்தில் தவத்தில் ஈடுபட்டு, ஆயுளைக் கழித்து
விடலாம் என்ற எண்ணத்தில் காட்டில் தவத்தில் அமர்ந்து விட்டாரோ என்று
நினைத்தாள். மனம் துக்கத்தில் இருக்கும் போது அமைதியாக தவம் செய்ய முடியாது.
ஆகவே தவத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாள். அதன் பிறகு நம் மீது
ராமருக்கு அன்பு குறைந்து விட்டதோ? அதனால்தான்  இங்கு நம்மை தேடி வரவில்லையோ?
என்று பயத்துடன் நினைத்தாள்.

★நம் மீது ராமர் காட்டும் அன்பு உண்மையானது, அவர் நம்மை மறக்க மாட்டார்,
இப்படி ஒரு எண்ணம் நமக்கு வரக்கூடாது, இந்த எண்ணம் பாவமாகும் என்றும்
நினைத்தாள். அதன் பிறகு ராவணன் நம்மை ஏமாற்றி தூக்கி வந்தது போல், ராமரையும்
லட்சுமணனையும் ஏமாற்றி யுத்தம் செய்து அவர்களைக் கொன்று இருப்பானோ? என்று
நினைத்தாள். ராமர் மிகவும் அறிவும் வலிமையும் உடைய வீரர். அவருடன் லட்சுமணனும்
இருக்கின்றான். அவரை எப்படி ஏமாற்ற நினைத்தா லும் அவரை ஏமாற்றி யுத்தம் செய்து
வெற்றி அடைய முடியாது என்றும் நினைத்தாள்.

★அதன் பிறகு நான் இல்லாத பெரும் துக்கத்தில் ராமர் இறந்து விட்டாரோ? அப்படி
இருந்தால் அவர் நிச்சயம் சொர்க்கத்திற்கு சென்றிருப்பார். நான் அவரை பிரிந்த
துக்கத்தில் இன்னும் உயிரோடு இருக்கிறேனே! நான் எவ்வளவு பெரிய பாவியாக
இருக்கிறேன். இப்போதே எனது உயிரை விட்டுவிட்டு ஶ்ரீ ராமர் இருக்கும்
சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என்று மனதில் நினைத்து வருந்தினாள்.

★சீதைக்கு வாழ்க்கையே கசந்து விட்டது.  துன்பத்துக்கும் ஒர் எல்லை உண்டு.
உயிர் அவளுக்கு சுமையாய் விளங்கியது. உயிருக்கும் உணர்வுக் கும் மதிப்புத்
தாராமல் தன் உடலை அரக்கன் ராவணன் விரும்புவதை அவள் மிகவும் வெறுத்தாள்.  அழகு
தனக்கு எதிராகப் போரிடுவதை அறிந்தாள்.  “மானம் இழந்த பின் வாழாமை இனியது” என்ற
முடிவுக்கு வந்தாள். உயிர் விடுதற்குத் துணிந்து விட்டாள். அருகில் இருந்த
குருக்கத் திச் செடி அவளுக்கு உதவியாய் நின்றது. அதனைச் சுருக்குக் கயிறாய்
மாற்ற நினைத்தாள். வாழ்க்கையின் கரை ஓரத்தைக் கண்டாள். நூலிழையில் அவள் உயிர்
ஊசலாடிக் கொண்டு இருந்தது.

★அப்போது வெளியே சென்று இருந்த திரிசடை அங்கு வந்து, ராட்சசிகள்,சீதையை
மிகவும் பயப்படுத்தி   பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தாள். அவளை பயமுறுத்தி
இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று கண்டித்தாள். இந்த சீதை என்பவள் மிகவும்
புண்ணியவதி. இவளிடம் இப்படி நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் விரைவில் நாம்
அனைவரும் அழிந்து போவோம். அவளிடம் நல்ல விதமாக பேசி அவளுடைய அருளை கேட்டு
பெற்றுக் கொள்ளுங்கள் எனக்  கூறினாள். பயந்த ராட்சசிகள் அனைவரும் சீதையை
விட்டு விலகி நின்றார்கள். திரிசடை பேசியதை கேட்ட சீதை உடனடியாக மனம் மாறி
தனது உயிரை விடும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு மிக்க தைரியம் அடைந்தாள்.

★அனுமன், நடந்த இந்த எல்லா நிகழ்ச்சிகளையும் ஒரு நாடகம் போல் கவனித்து
வந்தான். மரத்தின் மீது அமர்ந்திருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டு பல
வகையில் சிந்தனை செய்தான். இது தான் சரியான தருணம், நான் அன்னை சீதையிடம்
பேசுவதற்கு என நினைத்தான். சீதை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம். இது
ராட்சசர்களுடைய நகரம். இங்கு காவல் மிகவும் பலமாக இருக்கிறது. இப்போது நாம்
இங்கிருந்து ராமர் இருக்குமிடம் சென்று சீதை இருக்குமிடத்தை அவரிடம் சொல்லி,
அதன் பிறகு ராமர் லட்சுமணர்கள் இங்கு புறப்பட்டு வருவதற்குள், சீதை துக்கம்
தாளாமல் தன் உயிரையே விட்டு விட்டால் என்ன செய்வது? எனவே சீதையிடம் ராமன்
விரைவில் வருவார், அவரது உத்தரவின் படியே உங்களை தேடி அனுமனாகிய நான்
வந்திருக்கிறேன் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு, நாம் இங்கிருந்து செல்லலாம்
என்று முடிவு செய்தான் அனுமன்.

★யாருக்கும் தெரியாமல் மாதா சீதையிடம் சென்று எப்படி பேசுவது என்று சிந்தனை
செய்தான். இதுவே நல்ல சமயம் என்று சீதையின் அருகில் செல்லலாம் என்று
நினைத்தான். ஆனால் சீதையின் முன்பாக திடீரென்று ஒரு வானரம் சென்று பேச
ஆரம்பித்தால் ராவணன் ஏதோ ஏமாற்று வேலை செய்கின்றான் என்று நம்மை கண்டு
பயத்தில் பலமாக கத்தி கூச்சலிட் டால், ராமர் கொடுத்த மோதிரத்தை காண்பிக்க
முடியாமலே போய்விடும். மாதா சீதையை சுற்றி தூங்கிக் கொண்டிருக்கும் ராட்சசிகள்
அனைவ ரும் வந்து விடுவார்கள். அவர்களை யுத்தம் செய்து சமாளிக்கலாம். ஆனால்
மேலும் பல ராட்சதர்கள் வருவார்கள் அனைவரையும் நமது வலிமையால் சமாளித்து
விடலாம்.

★ஆனால், அங்கு  இவ்வளவு ராட்சசர்களை எதிர்த்து யுத்தம் செய்து சோர்வு
ஏற்பட்டாலோ, உடலுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலோ மீண்டும் இங்கிருந்து நூறு
யோசனை தூரம் தாண்ட முடியாமல் போய்விடும். இதனால் ராமருக்கு சீதை
இருக்குமிடத்தை சொல்ல முடியாமல் போகும். எனவே ராமரின் தூதன் நான் என்பதை
முதலில் சீதைக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்று எண்ணினான். அனைத்திற்கும்
முன்பாக அந்த அரக்கிகள் தூங்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என
தீர்மானித்தான். பின்னர்  ஒரு வழியை கண்டுபிடித்து அதனை செயல்படுத்த
ஆரம்பித்தான்.

நாளை.......................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsXeOrO1jR5wrtPDMteC%2BDnAGuO4tZyHxMXi5%2By%2Bqrf9A%40mail.gmail.com.

Reply via email to