ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~ 203 / 22-02-2026 அனுமன், சீதை உரையாடல்...
★ராமர் வந்து மீட்கும் வரையில், சீதை தன் துயரத்தை போக்கி தைரியமாக இருக்க அவளுக்கு ஆறுதல் கொடுக்க வேண்டும் என்று அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தான். தாயே! மாபெரும் வீரரான தசரத சக்கரவர்த்தியின் திருமகன் ராமர், உங்களுக்கு தன்னுடைய நலத்தை சொல்லி அனுப்பினார். அவருடைய அன்பு உடன்பிறப்பான லட்சுமணன் உங்களை நினைத்து துயரப்பட்டு கொண்டிருக்கின்றார். அவர் தன்னுடைய வணக்கத்தை உங்களுக்கு சொல்லச் சொல்லி என்னை அனுப்பினார். ★ஶ்ரீ ராம லட்சுமணர்களின் பெயர்களை கேட்டதும் சீதையின் உள்ளம் மிகுந்த மகிழ்ச்சியால் பொங்கியது. அடுத்த கனம் சீதையின் மனதில் வந்திருப்பது ராவணனாக இருக்குமோ?என்று மீண்டும் ஒரு பயம் வந்தது. அனுமனின் பேச்சில் நம்பிக்கை இழந்த சீதை நம்மை ஏமாற்ற இப்படி ராவணன் உருவத்தை மாற்றிக் கொண்டு வந்து இருக்கின்றானா? என்று நினைத்து அவளது மனம் தடுமாறியது. வந்திருப்பது ராமரின் தூதுவனா? இல்லை ராவணனா? என்று கேள்விக்கு விடை தெரியாமல் குழப்பத்தில் அனுமனை பார்க்காமல் திரும்பி அமர்ந்து கொண்டாள். ★இதைக் கண்ட அனுமன் கைகூப்பியபடி சீதையின் அருகில் சென்றான். உடனே சீதை பேச ஆரம்பித்தாள். நான் முன்பு உன்னிடம் ஏமாந்தேன். அன்று தண்டகாரண்ய வனத்தில் ராமருடன் இருக்கும் போது சந்நியாசி வேடத்தில் வந்து என்னை ஏமாற்றி தூக்கிக் கொண்டு வந்தாய். இப்போது வானர வேடத்தில் வந்து, ஏதேதோ பேசி என்னை மிகவும் வருத்துகிறாய், ராவணா! இது உனக்கு நல்லதல்ல. துக்கத்தில் இருக்கும் என்னை மாயங்கள் செய்து தொந்தரவு செய்யாதே!. விலகிப்போ! என்று கூறி மௌனமானாள் சீதை. ★ராமனிடமிருந்து சீதையை ராவணன் ஏமாற்றி தூக்கி வந்ததால், சீதை பயத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்த அனுமன் அவளின் பயத்தையும் சந்தேகத்தையும் போக்க வேண்டும் என்று யோசித்து மீண்டும் சீதையை வணங்கி விட்டு, அவளிடம்பேசினார். பூமியில் ஆளும் அரசர்கள் அனைவரும் தலைவனாக மதிக்கும் ராமர் அனுப்பிய தூதுவன் நான். எனது பெயர் அனுமன். வானரங்களின் அரசனான சுக்ரீவனுடைய ராஜ்யத்தில் மந்திரியாக இருக்கிறேன். ★ராமர் தங்களை விட்டு பிரிந்த பிறகு அவருக்கு சூரிய குமாரான சுக்ரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்ரீவனுடைய அண்ணன் வாலி. அவன் சுக்ரீவனுக்கு தீங்கு இழைத்ததால் ராமர் அவனை தன் பாணத்தால் வீழ்த்தினார். ராவணன் தங்களை கவர்ந்து சென்ற போது, தங்களுடைய ஆபரணங்களை நாங்கள் இருந்த ரிஷியமுக பர்வதத்தில் தூக்கி எறிந்தீர்கள். அதை நாங்கள் ஓர் துணியில் கட்டி வைத்திருந்தோம். பிறகு நாங்கள் அந்த அணிகலன்களை ராமரிடம் காண்பித்தோம். ராமர் அணிகலன்களை பார்த்து அது தங்களுடைய அணிகலன்கள் தான் என்பதை உறுதி செய்தார். ★ஆனால் ராமர் தங்களுடைய அணிகலன்களை பார்த்து மிகவும் துன்பப்பட்டார். பின்னர் ராமருடைய யோசனையின் பேரில், வாலிக்குப்பின் அந்த கிஷ்கிந்தைக்கு அரசனான சுக்ரீவன் இட்ட ஆணைப்படி, பல மலைகள் குகைகளிலும் தங்களை தேடி இறுதியில் நூறு யோசனை தூரம் கடலைத் தாண்டி குதித்து இந்த இலங்கையில் இறங்கினேன். நான் ராம தூதுவன் தாயே !என்னை சந்தேகிக்க வேண்டாம். எனது வார்த்தையே நம்புங்கள் என்று அனுமன் கண்களில் நீர் ததும்ப சீதையிடம் கூறினார். அனுமன் பேசிய பேச்சு சீதைக்கு தைரியமும் நம்பிக்கையும் தந்தது. ★சீதை அனுமனிடம் பேச ஆரம்பித்தாள். வானர உருவம் கொண்டு இருக்கும் உங்களை நான் சந்தேகப்பட்டேன் என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள். வஞ்சக ராட்சதன் ராவணனால் ஏமாற்றப்பட்டு இங்கு தூக்கி வரப்பட்டேன். இதனால் எதையும் நம்ப முடியாமல் நான் மிகவும் பயப்படுகிறேன். நீங்கள் எப்படி, எங்கு ராமரை சந்தித்து நட்பு கொண்டீர்கள் என்று விவரமாக சொல்லுங்கள் என சீதை அனுமனிடம் கேட்டுக் கொண்டாள். வணக்கத்துடன் நாக சுபராஜராவ் 9944110869. நாளை...................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduXzJtAb6tKP-fL0fquPyOguUnQ4sCC%2BahMk5Zb3rBfzQ%40mail.gmail.com.
