ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~ 189 / 08-02-2026 மைனாகமலை...
★ராம காரியமாக இலங்கைக்கு செல்லவிருக்கும் அனுமன், அங்கதன் உட்பட்ட அங்கிருந்த வானரங்களிடம் பேசினார். இலங்கை செல்லப் போகிறேன். அங்கு சீதையை காணவில்லை என்றால் பிறகு அங்கிருந்து தேவலோகத்திற்கு தாவிச் சென்று தேடுவேன். அங்கும் இல்லை என்றால் சீதையை தூக்கிச் சென்ற ராவணனைத் தேடி கட்டி இழுத்துக் கொண்டு வருவேன். தேவைப்பட்டால் இலங்கை மொத்த நகரத்தையும் பெயர்த்தெடுத்து வந்து விடுவேன் என்றார். தன்னை கருடனாகவே பாவித்துக் கொண்டு ராம பாணத்தில் இருந்து வேகமாக வெளியேரும் அம்பு போல் அனுமன் வேகமாக மகேந்திர மலை உச்சிக்கு சென்றான். ★கடலைக் கடப்பதற்கு அனுமன் தன் உடம்பை பிரம்மாண்டமாகப் பெருக்க வேண்டுவதாயிற்று. மண்ணும் விண்ணும் நிறைந்த பேருருவாக தனது விஸ்வரூபம் எடுத்தான். அவனுடைய தலை விண்ணை முட்டியது. பிறகு அனுமன் இலங்கை எங்கு உள்ளது என்று அங்கிருந்து தேடினான்.அவன் ஏறி நின்றது மகேந்திர மலை. விண்ணை முட்டும் அம் மலையில் இருந்த அவனுக்குப் பொன்னை நிகர்த்த இலங்கை கண்ணில் பட்டது. செல்லும் இடம் அதுதான் என்ற தெளிவு ஏற்பட்டது. அதனால், எல்லை யில்லா மகிழ்ச்சி அவனைத் தழுவியது. ★கால்களை அழுத்தமாக அந்த மலையின் மீது ஊன்றினான் அனுமன். தன்னுடைய இரண்டு கால்களை மலையில் ஊன்றி "ஶ்ரீ ராம்" என்று உச்சரித்தப்படி வானில் பறந்தான். அனுமன் மலையில் ஊன்றி பறந்த போது அம்மலை பூமிக்கு அடியில் போகும் படியான அதிர்வு ஏற்பட்டது. வானரனாக இருந்த அனுமன் வானவர்போல் அந்தரத்தில் பறந்தான், பறவை போலத் தன்னை மாற்றிக் கொண்டான். வாலை மிகவும் உயர்த்தினான். கால்களை மடக்கினான். கழுத்தை உள் அடக்கினான். காற்றிலும் வேகமாகத் தன் ஆற்றல் தோன்ற விண்ணில் பறந்தான். ★அவன் செல்லும் வேகத்தால் கல்லும் முள்ளும் மரமும் மற்றும் செடியும், கொடியும் அவனுடன் தோழமை கொண்டன. உடன் பயணம் செய்தன. அவன் செல்லும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கடலில் விழுந்து மிதந்தன. அனுமன் ஆகாயத்தில் செல்லும் பயங்கர வேகத்தில் அங்கிருக்கும் மேகக்காற்று எழுப்பிய சத்தங்கள் பெருங்கடலை நடுங்கச்செய்தது. அனுமனுக்கு, தேவர்களும், முனிவர்களும் பூக்களை தூவி, வீரத்தில் வலிமை உடையவனே! சென்று, வென்று வா! என வாழ்த்தி அனுப்பினர். அனுமன் வானத்தில் மிக வேகமாக பறந்தான். கடல் நீரைப் பார்த்தான். அதன் அடியைக் கண்டான் ★நாகர் உலகம் ஒளிவிட்டது. கடல் மீன்கள் அவனால் எழுந்த காற்றால் துடித்து இறந்தன. திக்கு யானைகள் எட்டும், திசை தடுமாறி நிலை குலைந்தன. அண்டங்கள் நடுங்கின. ராம காரியமாக செல்லும் அனுமனை பார்த்த கடலரசன் அனுமனுக்கு உதவி செய்ய எண்ணினார். கடலின் நடுவில் அனுமன் இளைப்பாறிச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வோம், இதனால் அனுமன் மேலும் புத்துணர்ச்சியுடன் செல்வார் என்று எண்ணினார். தனது கடலுக்குள் இருக்கும் மைனாகம் என்னும் மலையிடம் தண்ணிருக்குள் இருந்து மேலே வந்து அனுமனுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ★கடலரசனான வருணன் கேட்டுக் கொண்டதால் கடலின் அடியில் இருந்து மைனாகம் என்னும் மலை தண்ணீரில் இருந்து மிகவும் விரைவாக மேலே எழுந்து வந்தது. கடலுக்கு நடுவே தானாக மேலெழுந்து வரும் மலையைப் பார்த்து, இந்த மலை நமக்கு நடுவே ஒர் இடையூறாக இருக்கிறது என்று எண்ணிய அனுமன், மிகவும் வேகத்தோடு அந்த மலையை மேகத்தை தள்ளுவது போல தள்ளினார். அனுமனால் தள்ளப்பட்ட மலையானது அனுமனின் வேகத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து பெரிதும் ஆச்சரியமும், மிக்க ஆனந்தமும் அடைந்தது. மலை வடிவில் இருந்து மனித உருவம் பெற்று அனுமனிடம் பேசத் தொடங்கியது. ★ராம காரியமாக செல்லும் தங்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் கடலரசன் என்னை வெளியே வருமாறு கேட்டுக் கொண்டார். இங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டுப் பிறகு செல்லுங்கள் என்றது மைனாகம் மலை. அதற்கு அனுமன் உங்கள் வரவேற்பினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் என்னால் சிறிது நேரம் கூட இங்கு தங்க இயலாது. நான் இங்கு தங்கிச் சென்றால் ராம காரியம் மேலும் தாமதமாகும். நான் விரைவாக செல்ல வேண்டும். உங்களை எனது வேகத்தால் தள்ளியதாலும் இங்கு தங்க மறுப்பதாலும் என் மீது கோபம் கொள்ளாதீர்கள் என்று மலையை கடந்து சென்றார் அனுமன். ★அனுமனின் பராக்கிரமத்தை பார்த்த தேவர்கள் இதற்கு மேலும் அனுமனின் வலிமையையும் சாமர்த்தியத்தையும் பார்க்க விரும்பினார்கள். வணக்கத்துடன் நாக சுபராஜராவ் 9944110869. நாளை...................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtbKzPUvFOsQm_MmYtP9B%3DBACP7Qhyb%3DS7ZhoAs6EhxcQ%40mail.gmail.com.
