ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~ 190 /09-02-2026 சுரசை, அங்காதாரை...
★பிறகு தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் பாம்புகளுக்கு தாயாகிய சுரசையை பார்த்து, ராம காரியமாக அனுமன் கடலை தாண்டிக் கொண்டிருக்கிறார் நாம் அனுமனின் பலத்தை அறிய வேண்டும். ஆதலால் நீ அனுமனுக்கு தடையாக சென்று இடையூறு செய். அவன் உன்னை எப்படி வெல்ல போகிறான் என்பதை பார்ப்போம் என்றனர். அதற்கு நாகமாதா சுரஸையும் சம்மதித்து அனுமன் தாண்டிக் கொண்டிருக்கும் இடத்திற்கு சென்றாள். ★சுரசை அனைத்து தேவர்களின் வேண்டுகோளின்படி அரக்கி உருவம் எடுத்து அனுமன் முன் தோன்றினாள். ராம காரியமாக செல்லும் அனுமனின் முன்பாக கோரமான பெரிய ராட்சத உருவத்தை எடுத்த நாகமாதா சுரஸை அனுமனை தடுத்து நிறுத்தினாள். வானர வீரனே! இன்று தெய்வங்களின் அருளால் எனக்கு நீ உணவாக கொடுக்கப் பட்டிருக்கிறாய். வானரமே!, இன்று என் பசிக்கு நீ உணவாகப் போகிறாய் என்றாள். ★ அவளை வணங்கிய அனுமன், அம்மா! ராம காரியமாக நான் இப்பொழுது இலங்கைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது தாங்கள் தடை செய்யலாமா? பெண்ணாகிய நீங்கள் பசியில் வேதனை படுவதை கண்டால் என் மனம் துன்பப்படுகிறது.வழி விடுங்கள். நான் இராமனின் காரியத்தை முடித்துவிட்டு வருகிறேன். நான் இங்கு உங்களுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க முன் வருகின்றேன். இலங்கையில் சீதையைக் கண்டதும், அந்தச் செய்தியை ராமரிடம் சொல்லி விட்டு மீண்டும் உங்களிடம் வந்து தங்கள் விருப்பப்படி வாய்க்குள் செல்கிறேன். இப்பொழுது ராம காரியத்துக்கு செய்யும் பெரும் உதவியாக எனக்கு வழி விடுவாயாக என்று கேட்டுக் கொண்டார். ★அனுமன் கூறியதை கேட்ட சுரஸை என்னை தாண்டி யாரும் செல்ல முடியாது. இது பிரம்மாவினால் எனக்கு கொடுக்கப்பட்ட வரம் எனது வாய்க்குள் சென்று வெளியே வர முடிந்தால் நீங்கள் செல்லலாம் என்று தனது வாயை திறந்து வைத்துக் கொண்டாள் சுரஸை. அனுமன் தன் உடலை மேலும் பத்து மடங்கு பெரியதாக்கி கொண்டு எனது உடல் செல்லும் அளவிற்கு உனது வாயை திறந்து கொள் என்றார் அனுமன். சுரஸை தன் உடலை அனுமன் உடலை விட இருபது மடங்கு பெரியதாக்கிக் கொண்டாள். சாமர்த்தியசாலியான அனுமன் சில கனத்தில் தனது உடலை கட்டை விரல் அளவிற்கு சிறியதாக்கிக் கொண்டு வேகமாக சுரஸையின் பெரிய வாய்க்குள் புகுந்து வேகமாக வெளியே வந்து சுரஸையின் முன்பாக நின்றார். ★ராட்சசியே! ராம காரியத்தை முடித்ததும் உனது வாய்க்குள் புகுவேன் என்று முன்பு நான் கொடுத்த உறுதி மொழியை இப்போதே நிறைவேற்றி விட்டேன். பிரம்மாவினால் உனக்கு கொடுத்த வரத்தையும் நான் மீறவில்லை. இப்பொது நான் உன்னை தாண்டி செல்கிறேன் உன்னால் முடிந்தால் என்னை தடுத்துப்பார் என்றார். உடனே சுரஸை தனது சுய உருவத்தை அடைந்து தேவர்கள் உங்களது வீரதீர பராக்கிரமத்தையும், மற்றும் சாமர்த்தியத்தையும் சோதித்துப் பார்ப்பதற்காக என்னை இங்கு அனுப்பியிருந்தார்கள். நீங்கள் விரைவில் ராம காரியத்தை முடிப்பீர்களாக! என்று வாழ்த்தி அனுமன் வானில் செல்ல வழி கொடுத்தாள். ★அனுமன் இன்னும் வேகமாக வானில் பறந்து சென்றான். அவனின் வேகத்தை கண்ட தேவர்கள், கருடன் தான் வேகமாக செல்கிறான் என நினைத்தனர். அனுமன் கருடனுக்கு நிகரான வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அனுமனுக்கு அடுத்த சோதனை வந்தது. பயங்கரமான ராட்சசி ஒருவள் அனுமனை பார்த்து இன்று உணவு கிடைத்து விட்டது என்று அனுமனின் நிழலைப் பிடித்து இழுத்தாள். தன்னை யாரோ பிடித்து இழுப்பது போலவும் தனது வேகம் குறைவதையும் உணர்ந்த அனுமன் தன்னைச் சுற்றிப் பார்த்தார். ★கடலில் இருக்கும் ஒரு ராட்சசி தன் நிழலை பிடித்து இழுப்பதை பார்த்தார். இந்த ராட்சசியைப் பற்றி சுக்ரீவன் ஏற்கனவே சொல்லியிருப்பது அனுமனுக்கு நினைவு வந்தது. நிழலைப் பிடித்து இழுத்து சாப்பிடும் அங்காதாரை என்ற ராட்சசி என்று தெரிந்து கொண்டு தன் உடலை மேலும் பெரிதாக்கினார். ராட்சசியும் தன் உடலை பெரிதாக்கிக் கொண்டு அனுமன் உள்ளே செல்லும் அளவிற்கு தனது வாயை திறந்து கொண்டு அனுமனை நோக்கி விரைந்து வந்தாள். அனுமன் தன் உடலை சிறியதாக்கிக் கொண்டு மனோ வேகத்தில் ராட்சசியின் வாய் வழியாக அவள் வயிற்றுக்குள் புகுந்து தனது நகங்களால் வயிற்றை கிழித்து ராட்சசியைக் கொன்று வெளியே வந்தார். ★அரக்கி இறந்து கடலில் மூழ்கினாள். தனது உடலை பழையபடி பெரியதாக்கி இலங்கை நோக்கி சென்றார். தூரத்தில் மரங்களும் மலைகளும் அனுமனுக்கு தெரிந்தன. இலங்கை வந்து விட்டோம் என்பதை அறிந்தார். இவ்வளவு பெரிய உருவத்துடன் இலங்கை சென்றால் தூரத்தில் வரும் போதே நம்மை கண்டு பிடித்து விடுவார்கள் யாருக்கும் தன்னைப்பற்றி தெரியக்கூடாது என்று எண்ணிய அனுமன் தனது இயற்கையான உருவத்திற்கு மாறி இலங்கையில் உள்ள லம்பம் என்னும் மலை சிகரத்தின் மீது இறங்கினார். வணக்கத்துடன் நாக சுபராஜராவ். 9944110869. நாளை.................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduzOhZAGxFsnjds0gaSd5YMbLRbjWF5nm5LurVsjwaGJQ%40mail.gmail.com.
