ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~~~~~l
195 / 14-02-2026

அனுமன் கண்ட சீதை...

★பாய்ந்து ஒடும் அனுமனின் கால்கள் மரங்களையும் மாட மாளிகைகளையும் தாவின.
பறவைகள்  பறந்து திரிவதும் பூக்கள் நிறைந்ததுமாகிய சோலை ஒன்று காணப்பட்டது.
அவன் சோகம் தீர்க்கும்படியாக  அசோகவனத்தைக் கண்டான்.
பிறகு அனுமன் அவ்வனத்துக்கு அருகில் சென்று பார்த்தான். என்ன இடம் இது? நான்
இந்த இடத்தில் சீதையை இதுவரைத் தேடவில்லையே! அனுமன், இவ்வனத்தில் சென்று
சீதையை தேடலாம் என அவ்வனத்திற்குள் சென்றான்.  அனைத்து தெய்வங்களையும் வணங்கி
விட்டு அசோக வனத்திற்குள் குதித்தான் அனுமன்.

★அசோகவனத்தின் உள்ளே குதித்ததும் அனுமனுக்கு மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி
ஏற்பட்டது. இங்கு நிச்சயம் சீதையை காண்பேன் என்று புத்துணர்ச்சி அடைந்தான்.
உயரமான ஒரு  மரத்தின் மீது நின்று கொண்டு சீதையை தேட ஆரம்பித்தான். அனுமன்
யார் கண்ணிலும் படாமல் இருக்க தன் உருவத்தை மிகச் சிறிய உருவமாக மாற்றிக்
கொண்டான்.
அனுமன் மரத்திற்கு மரம் தாவிக் கொண்டு சீதையை தேடிக் கொண்டு இருந்தான். அங்கு
ஓர் குளத்தைக் கண்டான். அங்கு சென்று குளக்கரையில் ஓர் மரத்தின் மேல் ஏறி
சுற்றும் முற்றும் பார்த்தான்.

★அங்கு தூரத்தில் தங்கத்தில் ஆன மண்டபத்தைக் கண்டான்.
அதற்கு அருகில் ஓர் மரத்தடியில் கண்ணைக் கூசும் வகையில் பேரழகுடன் பெண்
ஒருத்தி அமர்ந்திருப்பதை கண்டான். அவரை சுற்றி அகோரமான வடிவத்துடன் ராட்சசிகள்
காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ராட்சசிகளின் நடுவே அழகிய தெய்வீகமான
முகத்தில் நடுக்கத்துடன் கசங்கி அழுக்கு படிந்த உடையில் பயமும் துயரத்தையும்
வைத்துக் கொண்டு, அழுததினால் முகம் வாடியிருப்பதையும் கண்டதும் இவரே சீதை
என்று முடிவு செய்தார்.

★அனுமன் சீதையை பார்த்து விட்டேன் என்று ஆனந்தமாக துள்ளி குதித்தார். அடுத்து
என்ன செய்யலாம் என்று சுற்றிலும் பார்த்தார். சீதையை பார்த்த மகிழ்ச்சியில்
இருந்த அனுமன் அவரின் நிலையை கண்டதும் மிகவும் துக்கமடைந்தார்.அசோக வனத்தில்
சீதை, அரக்கியர் சூழ ஓர் மரத்தினடியில் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்தாள்.
சீதையின் கண்கள் அழுதழுது மிகவும் வாடிப் போயிருந்தது. அவள் மிகவும் உடல்
இளைத்து, தூக்கமின்றி புலிகளிடம் மாட்டிக் கொண்ட மான் போல அந்த அரக்கியர்
கூட்டத்தில் அகப்பட்டு மிகவும் வருத்தப்பட்டு கொண்டு  இருந்தாள்.

★ராமரின் நினைவால் மிகவும் வருந்தி, சோர்வுற்று, ராமரின் வரவை எதிர்பார்த்து
மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாள். ராமரின் நினைவு சீதையை வாட்டிக்
கொண்டு இருந்தது. ராமர் தன்னை காக்காவிட்டாலும், தன் குலப்பெருமையைக் காக்கும்
பொருட்டு நிச்சயம் வருவான் என நாலாபுறமும் ராமரின் வரவை எதிர்நோக்கிப்
பார்த்துக் கொண்டிருந்தாள். ராவணன் தன்னை கவர்ந்து வந்த செய்தியை ராமரும்,
லட்சுமணரும் அறியவில்லை போலும் என பலவாறு நினைத்து மிகுந்த துன்பப்பட்டுக்
கொண்டு இருந்தாள்.

★ராவணன் என்னை கவர்ந்து வந்த போது, வழியில் அவனை தடுத்து போரிட்ட ஜடாயுவும்
இறந்து விட்டார். ஆதலால் ராமரிடம் என் நிலைமையை எடுத்துரைக்க ஆள் இல்லாமல்
போய் விட்டது போலும். ஆதலால் இப்பிறவியில் ராமனையும், லட்சுமணனையும் மீண்டும்
காண்பது என்பது நடக்காத காரியம் என நினைத்து மிகவும் வருந்தினாள். தான்
அமர்ந்த இடத்தை விட்டு சற்றும் நகராத சீதை, இனி ராமருக்கு யார்
உணவளிப்பார்கள்?. முனிவர்கள் எவரேனும் வந்தால் ஶ்ரீராமர் அவர்களுக்கு எவ்வாறு
உணவு அளிப்பார் என நினைத்து வருந்தினாள்.

★ஒரு வேளை என்னை கவர்ந்து வந்த அரக்கர்கள், இவ்வளவு நாட்கள் ஆகியும் என்னை
உயிருடன் விட்டுவிட மாட்டார்கள். இவர்கள் என்னை தின்று இருப்பார்கள் என
நினைத்து இருப்பாரோ என்று நினைத்து நினேத்து மிகவும் துன்பம் கொண்டாள்.
ஒருவேளை பெற்ற தாய்மார்களும், தம்பி பரதனும் காட்டிற்கு வந்து ராமரையும்
லட்சுமணரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்களோ? என்னவோ? ராமர், தாயின்
கட்டளைப்படி பதினான்கு ஆண்டு வனவாசம் முடியாமல் நிச்சயம் நாடு திரும்ப
மாட்டார். அவ்விருவருக்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டதோ? என நினைத்து
மிகவும் வருந்தினாள்.

★அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை சுற்றி பல அரக்கர்கள் நின்று
கொண்டிருந்தனர். அங்கு திரிசடை என்னும் அரக்கி மட்டும் சீதையிடம் அன்பாக
பேசுவாள். அங்கு திரிசடையை தவிர்த்து மற்ற அரக்கர்கள் மயக்க நிலையில்
வீற்றிருந்தனர். அங்கு மற்ற அரக்கர்கள் நன்கு தூங்கி விட்டதால் சீதை
திரிசடையிடம் பேச ஆரம்பித்தாள். திரிசடை! நீ என்னிடம் அன்பாக இருப்பதால் நான்
உன்னிடம் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் என்றாள்.

★பிறகு சீதை, அன்புமிக்க திரிசடையே! என் இடக்கண் துடித்துக் கொண்டு
இருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவு தான் என்ன? என் துன்பங்கள் நீங்கி நன்மை
உண்டாக போகிறதா? இல்லை, நான படும் இந்த துன்பத்திற்கும் மேல் அதிக துன்பம் வர
போகிறதா? எனக் கேட்டாள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை....................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddtac3iXM_boactxU2VYwV3sccdDvc1yF18cP51oV-Df%3DA%40mail.gmail.com.

Reply via email to