ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~
196 / 15-02-2026

திரிசடையின் ஆறுதல்...

★பிறகு சீதை, அன்புமிக்க திரிசடையே! என் இடக்கண் துடித்துக் கொண்டு
இருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவு தான் என்ன? என் துன்பங்கள் நீங்கி நன்மை
உண்டாக போகிறதா? இல்லை, நான படும் இந்த துன்பத்திற்கும் மேல் அதிக துன்பம் வர
போகிறதா? எனக் கேட்டாள்.

★அதுமட்டுமில்ல, ராமர் பிரம்மரிஷி விசுவாமித்திர முனிவரிடம் மிதிலை க்கு
வரும்போது எனது இடக்கண் துடித்தது. இன்றும் அதேபோல் என் இடக்கண் துடிக்கிறது.
ராமர் நாட்டை விட்டு வனம் செல்லும்போது என் வலக்கண் துடித்தது. பிறகு ராவணன்
என்னை கவர்ந்து வரும்போதும் என் வலக்கண் துடித்தது. ஆனால் இன்று என் இடக்கண்
துடிக்கிறது. இதனால் ஏற்படும் விளைவு என்ன என்பதை என்னிடம் சொல் எனக்
கேட்டாள். சீதை சொன்னதை கேட்டுக் கொண்டி ருந்த திரிசடை, சுபம் உண்டாகும்,
உன்னுடைய இடக்கண் துடிப்பதால், நீ நிச்சயம் உன் கணவரை மீண்டும் அடைவாய்
என்றாள்.

★மரத்தின் மேல் அமர்ந்தபடி மாதா
சீதையும் திரிசடையும் பேசிக் கொண்டதை அனுமன் கேட்டான்.  நம்பிக்கை
நட்சத்திரமாய் சீதை  ஒளிவிடுவதைக் கண்டான். செல்வச் சிறப்பும், இன்பக்
களிப்பும், அதிகார ஆதிக்கமும் மிக்க ராவணன் ஆதிக்கத்தில் அவள் ஒளிதரும் சுடர்
விளக்கு போல இருப்பதை நன்கு அறிந்தான். அறம் அழியவில்லை’ என்று அகம்
மகிழ்ந்தான்.  கற்பின் மாட்சியால் அவள் பாராட்டும் சிறப்பினை உடையவள் என்பதை
அறிந்தான். பிறந்த மனைக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித்
தந்திருக்கிறாள் என்று மகிழ்வோடு பாராட்டினான்.

★மாசுபடியாத மாணிக்கத்தைக் கண்டெடுத்த மனநிறைவு அவனை அடைந்தது.   இழந்த
வாழ்வுதனை  மீண்டும் ராமன் பெறுகின்றான் என்பது அவனை மகிழ்ச்சியில்
ஆட்டிப்படைத்தது. முன்பு கல்லைப் பெண்ணாக்கிய அழகு ஶ்ரீராமன் மனைவியின் மன
உறுதி, “கல்லைப் போன்றது” என்று கண்டு ஆனந்தம் கொண்டான்.  பெண்மைக்குப் பெருமை
சேர்க்கும் திண்மை சீதை யிடம் இருப்பதைக் கண்டான்.  அந்த சமயத்தில்  திரிசடை
மீண்டும் பேசத் தொடங்கினாள்.

★திரிசடை, சீதையே! நான் என் கனவில் ஒளி மிகுந்த ஒரு பொன் வண்டு ஒன்று உன்
காதருகே பாடிச் சென்றதை கண்டேன். இவ்வாறு ஒரு பொன் வண்டு காதருகே வந்து
பாடினால், நிச்சயம் உன் கணவனால் அனுப்பப்பட்ட தூதன் உன்னை வந்து சந்திப்பான்.
குலமகளே! உனக்கு தூக்கம் என்பதே இல்லாததால் உனக்கு கனவு வரவில்லை. மேலும் நான்
கண்ட கனவுகளை கூறுகிறேன், கேள்! என்றாள். ராவணன் தன் வீட்டில் அக்னி ஹோத்ரம்
செய்வதற்காக அக்னியை பாதுகாத்து கொண்டு வருகிறான். அந்த அக்னி அணையாமல்
பாதுகாக்க வேண்டும். ஆனால் என் கனவில் அந்த அக்னி அணைந்துவிட்டது. மேலும் அந்த
அக்னி இருந்த இடத்தில் செந்நிறத்தில் கரையான்கள் தோன்றின.




★அதே போன்று, மாளிகையில் நெடுங்காலமாக பெரிய மணி விளக்குகள் ஒளி வீசி கொண்டு
இருந்தன. அப்போது திடீரென்று வானத்தில் வீசிய பேரிடியால் அவ்விளக்குகள்
அனைத்தும் அணைந்து போயின. அங்கிருந்த தோரணங்கள், கம்பங்கள் என அனைத்தும்
முறிந்து விழுந்தன. பொழுது விடியும் முன்பே கதிரவன் தோன்றியது. அரக்க
பெண்களின் கழுத்திலிருந்த மங்கல நாண்கள் தானாக அறுந்து விழுந்தன. அதுமட்டும்
அல்ல, ராவணனின் மனைவி மண்டோதரி தலைவிரி கோலமாக தோன்றினாள். இவை அனைத்தும்
அரக்கர் குலம் அழிவதற்கான தீய சகுனங்கள்.

★நான் கடைசியாக கண்ட கனவு, இரண்டு ஆண் சிங்கங்கள், தங்களுடன் புலிக் கூட்டத்தை
அழைத்துக் கொண்டு காட்டு யானைகள் மிகுந்த வனத்திற்கு சென்று யானைகளை எதிர்த்து
போரிட்டன. அங்கு கணக்கற்ற யானைகளை கொன்று வீழ்த்தி விட்டு, இறுதியில்
அவர்களுடன் ஓர் அழகு மயிலை அழைத்துக் கொண்டு சென்றன. அதுமட்டும் அல்ல,
ராவணனின் மாளிகை உள்ளே இருந்து ஓர் அழகிய பெண், ஆயிரம் திரிகளை கொண்ட ஓர்
விளக்கை தன் கையில் ஏந்திக் கொண்டு, விபீஷணனின் மாளிகைக்கு சென்றாள்.
விபீஷணனின் பொன் மாளிகையில் அப்பெண் நுழைந்த நேரத்தில் விபீஷணன் உறக்கத்தில்
இருந்து எழுந்தான். அதற்குள் தாங்கள் என்னை எழுப்பி விட்டீர்கள் என்றாள்
திரிசடை.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை.................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvO_wvJEPs5C15ar7nU25k441oR1tH6VWKrsSTKFCCOLA%40mail.gmail.com.

Reply via email to