ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~~~~ 198 / 17-02-2026
ராவணன், சீதை உரையாடல்... ★உன் விருப்பத்திற்கு மாறாக இங்கு எதுவும் நடக்காது. வீணாக துக்கத்துடன் இருந்து உன் உடலை ஏன் நீ வருத்திக் கொள்கிறாய். உனக்கு சமமான அழகி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை. நகைகள் வைர வைடூரியங்கள் அணிந்து பட்டு துணிகளை அணிந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நீ, ஏன் உன் அழகையும் வயதையும் வீணடித்துக் கொள்கிறாய்?. நான் இருக்கும் இடம் நீ வந்து சேர்ந்து விட்டாய். என்னுடன் சேர்ந்து நீ சகல சந்தோஷங்களையும் மற்றும் போகங்களையும் அனுபவித்து மகிழ்ச்சியுடன் இருக்கலாம். ★நீயே பட்டத்தரசியாக இருந்து என் அந்தப்புரம் முழுவதையும் அதிகாரம் செய்து, ஒரு சிறந்த தலைவியாக இருக்கலாம். தவத்திலும் செல்வத்தி லும் புகழிலும் ராமனை விட நானே மிகவும் மேம்பட்டவன் என்பதை தெரிந்து கொள். காட்டில் மரவுரி தரித்துக் கொண்டு இருக்கும் ஒருவனை இனியும் நம்பாதே. இனி நீ அவனை உன் கண்ணால் பார்க்க முடியாது. அவன் இங்கு வரமட்டான். என் சொல்லை கேட்டு அதன்படி நடந்தால் சகல ஜஸ்வர்யங்களையும் நீ இங்கு அனுபவிக்கலாம் என்று மாதா சீதையிடம் ராவணன் மிக்க நயத்துடன் கூறினான். ★சீதை தொடர்ந்து ராவணனிடம் பேசினாள். ராமர், ராட்சசன் ஒருவனை அழித்து விட்டார் என்ற பயத்தில் தானே, அவர்கள் இல்லாத நேரம் பார்த்து என்னை நீ தூக்கிக் கொண்டு வந்தாய்?. அவர்களுக்கு முன்பாக உன்னால் நான் இருக்கும் இடத்திற்கு அருகில் கூட வர முடியாது. இதுவே உன்னுடைய வீரம் என்பதை நான் நன்கு தெரிந்து கொண்டேன். நீ என்னிடம் கூறிய உனது செல்வங்கள், ஜஸ்வர்யங்கள், போகங்கள் என ஒன்றும் எனக்கு தேவை இல்லை. அவற்றை வைத்து நீ எனக்கு ஆசை காட்ட வேண்டாம். ★இதனால் உனக்கு ஒரு பயனும் இல்லை. நான் சக்கரவர்த்தியின் திருமகன் ராமருக்கு உரியவள். ராமரை விட்டு நான் விலக மாட்டேன். உனக்கு ஒரு நல்ல அறிவுரை சொல் கிறேன், கேட்டுக்கொள். முதலில் ராமரிடம் சென்று மன்னிப்பு கேட்டு என்னை அவரிடம் ஒப்படை த்து விட்டு, அவரின் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள். ராமர் உன்னை மன்னிப்பார். அவரை சரணடைந்து அவருடைய அன்பை பெற்றுக் கொள். சரணடைந்தவர்களை அவர் ஒன்றும் செய்ய மாட்டார். ★உன்னை சுற்றி இவ்விடத்தில் இருப்பவர்களில் உனக்கு நல்ல புத்தி சொல்கின்றவர்கள் ஒருவர் கூட இல்லையா? ஏன் இவ்வாறு கெட்ட காரியங்கள் செய்து உனக்கு தீராத கெடுதலை உண்டாக்கிக் கொண்டு, உன்னை நம்பி இருக்கும் மக்களுக்கும் அழிவை தேடிக் கொடுக்கிறாய். அரசன் ஒருவன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் போனால் அவனுடைய நாடும் நகரமும் செல்வமும் சீக்கிரம் அழிந்து போகும். உன்னுடைய பொறுப்பை புரிந்து கொண்டு உன்னுடைய எண்ணத்தை விட்டுவிட்டு உன்னையும் உன் அரசையும் காப்பாற்றிக்கொள். இல்லையென்றால் ராம லட்சுமணர்களின் அம்பு சீக்கிரமே இந்த இலங்கையை அழிக்கும் என்று சொல்லி முடித்தாள். ★மேலும் சீதை, அற்பனே! நீ உண்மையான வீரனாக இருந்தால் போர் புரிந்து என்னை கவர்ந்திருக்க வேண்டும். என் கணவரும், அவரின் தம்பி லட்சுமணரும் இல்லாத நேரத்தில் ஓர் சந்நியாசியாக வந்து என்னை கவர்ந்து சென்ற நீ ஒரு வீரனா? உனக்கு அழிவு காலம் வந்துக் கொண்டிருக்கிறது. அதை மறந்து விடாதே. என் கணவரின் அம்பு வானத்தையும் கிழிக்கச் செய்யும் வல்லமை உடையது. ஜடாயுவிடம் போரிட்டு தரையில் வீழ்ந்து தோற்றவன் தானே. அதனால் ஜடாயுவை சிவன் கொடுத்த வாளால் வெட்டி வீழ்த்தி விட்டாய். அந்த வாள் உன்னிடம் இல்லையென்றால் அன்றே நீ மாண்டு இருப்பாய். என்று அவன் செய்த தவறுகளை எடுத்துக் கூறி, அவன் கொடுமைகளைச் சாடினாள்; ★‘வஞ்சனையால் மான் ஒன்றினை ஏவித் தன்னை வலையில் சிக்க வைத்தது அவனது கோழைத்தனம் என்று சுட்டிக்காட்டினாள், ‘ஜடாயுவைக் கொன்றது அநீதி, என்று எடுத்து உரைத் தாள். ராமனை அற்ப மனிதன் என்று சொன்னதற்கு எதிராக அவன் வீரத்தையும், வெற்றிகளையும் விவரமாகக் கூறினாள்.அரச மகன் என்பதால் ராமனைத் தான் மணக்க வில்லை, ஆற்றல் மிக்க வீரமகன் என்பதால் தான் மணந்து கொண்டதாய்க் கூறினாள். “வில்லை வளைக்க முடியாமல் பேரரசர்கள் பின்வாங்கிய நிலையில், அதனை வளைத்து அவ்வெற்றியையே தனக்கு மண மாலையாகச் சூட்டினான்” என்பதைச் சுட்டிக்காட்டினாள். ★சீதை பேசியதை கேட்ட ராவணன், பெருங்கோபம் கொண்டான். நான் உன்னிடம் அமைதியாக பேசுகிறேன் என்று நீ என்னை அவமதிக்கின்றாய். என்னால் முடியாது என்பது எதுவும் இல்லை. நான் ராமனை கொன்று உன்னை கவர்ந்து வந்திருந்தால், நீயும் உயிரை மாய்த்துக் கொள்வாய். ஆகவே தான் உன்னை வஞ்சனை செய்து கவர்ந்து வந்தேனே தவிர போருக்கு பயந்து அல்ல. நான் நினைத்தால் ராம லட்சுமணன் இருவரையும் என் வாளினால் வெட்டி வீழ்த்துவேன். ஆனால் அவர்கள் இத்தகைய அழகு படைத்த உன்னை எனக்கு கொடுத்ததால், அவர்களை கொல்லாமல் இருக்கின்றேன். நான் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக உன்னை கொல்லாமல் விடுகிறேன். வணக்கத்துடன் நாக சுபராஜராவ் 9944110869 நாளை................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduKrCXf5R0mZuow2g7Wfa-4v_i5QsT-S-_Qfkfr_yv%2BTQ%40mail.gmail.com.
