ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~
199 / 18-02-2026

சீதையின் ஆவேசம்...

★நான் நினைத்தால் அந்த ராம லட்சுமணன் இருவரையும் என் வாளினால் வெட்டி
வீழ்த்துவேன். ஆனால் அவர்கள் இத்தகைய அழகு படைத்த உன்னை எனக்கு கொடுத்த தால்,
அவர்களை கொல்லாமல் இருக்கின்றேன். நான் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக உன்னை
கொல்லாமல் விடுகிறேன் எனக் கூறினான் அசுர ராவணன். அவனின் பேச்சிற்கு சீதை தன்
முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பதில் கூறினாள்.

★நீ செய்வது, பேசுவது என்று அனை த்தும் தகாத காரியமாக இருக்கிறது. சீதை ஆகிய
நான் யார் என்பதையும் என் பிறந்த வீடு, புகுந்த வீட்டின் வரலாற்றை அறிந்து
கொண்டு பேசு. என்னை பற்றிய உன் எண்ணத்தை உடனே மறந்துவிடு. மற்றவனுடைய மனைவி
என்பவள் எப்போதும் உனது மனைவியாக முடியாது. தர்மத்துடன் உன் மனைவிகளுடன்
மகிழ்ச்சியாக இருந்து உனது இனிய  உயிரை காப்பாற்றிக்கொள். இல்லை என்றால்
அவமானத்தையும் தீராத  துக்கத்தையும் நீ விரைவில் அடைவாய் தெரிந்து கொள் என்ற
சீதை, மேலும் பேசினாள்.

★கார்த்தவீரியார்சுனனை, பரசுராமர் வென்று ஒடுக்கினார். அந்த பரசு ராமரை ஒரு
கணப் பொழுதில் வென்றவர் ராமர் என்பதையும் தெரிந்து கொள். தாடகை, விராதன்,
கரன், தூஷணன், திரிசிரன், கவந்தன் முதலிய அரக்கர்களை அழித்து மக்களை காத்தவர்
ராமர் என்பது உனக்கு தெரியாதா? நீ என்னை விரும்புவது உனக்கு அழிவை தேடித்
தரும். உன் சக்தியோ அல்லது செல்வமோ என்னை பணிய வைக்க முடியாது. நான் ஒரு
போதும் உன்னை மனதால் நினைக்க மாட்டேன் என்பதை தெரிந்து கொள். ஒப்பற்ற உனது
செல்வங்களை மட்டுமல்ல, உனது உயிரையும் நீ என் கணவரால் இழக்கப் போகிறாய்.

★ராம லட்சுமணர் இருவர் மட்டும் என்று அலட்சியமாய் மனதில் எண்ணாதே. அவர்கள்
இருவரும் இரு புலிகள். அந்த இரு பெரும் புலிகளையும் எதிர்க் கொள்ளும்
சக்தியும், வலிமையும் உன்னிடம் உள்ளதா? இராம லட்சுமணரின் சக்தியும், வலிமையும்
நீ போர் புரியும் போது புரிந்து கொள்வாய் என்று கோபமாக அவன் மீது சீறினாள்
சீதை.

★சீதை பேசியதில் கோபமடைந்த ராவணன் கர்ஜனையுடன் உரக்கப் பேசினான். உன் மீது
நான் வைத்திரு க்கும் அன்பே உன்னை இப்போது காப்பாற்றியது. இல்லை என்றால் நீ
பேசிய பேச்சிற்கு உன்னை கொன்று இருப்பேன். நான் உனக்கு வெறும் பன்னிரெண்டு
மாதங்கள் அவகாசம் கொடுத்திருந்தேன். ஆனால் நீ இது வரை எனக்கு எந்த பதிலும்
அளிக்க வில்லை.உனக்கு  நான் கொடுத்த காலம் முடிய இன்னும் 2 மாதம் மட்டுமே
இருக்கிறது.  நினைவில் வைத்துக்கொள். அதற்குள் நீ மனம் மாறி என்னுடையவளாகவிட
வேண்டும்.

★அதற்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் ஏற்கனவே நான் சொன்னது போல், என் சமையல்
அறையில் உள்ள சமையல் கலைஞர்கள் உன்னைக் கொன்று  சமைத்து விடு வார்கள். பிறகு
இங்குள்ள அரக்கர் களுக்கு இரையாக்கி விடுவேன் ஜாக்கிரதை என்று கோபத்துடன்
கத்தினான். ராவணனுடைய கோபம் அதிகரித்ததை கண்ட அவனது மனைவிகளில் ஒருத்தியான
தான்யமாலி என்பவள், மன்னன் ராவணனிடம்  உங்களை அடைய இந்த மானிட பெண்ணிற்கு எந்த
தகுதியும்  பாக்கியமும் இல்லை. இவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை. இவளது
பேச்சிற்கு நீங்கள் ஏன் கோவப்படுகின்றீர்கள்? .

★வாருங்கள்! நாம் செல்லலாம் என்று வற்புறுத்தி அரக்கன் ராவணனை அழைத்தாள்.
பிறகு ராவணன் அங்கிருந்த அரக்கியர்களை பார்த்து, இவள் என் வசம் ஆகும்படி
செய்யுங் கள். அவளிடம் நல்ல வார்த்தை கூறி பேசி பாருங்கள். அப்படி அவள் இணங்க
வில்லை என்றால் மிகவும்  கடுமையாக பேசி எப்படியேனும் இணங்கச் செய்யுங்கள்
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி தனது மாளிகைக்கு திரும்பினான்.

★இதையெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அனுமன், ராவணனை கொன்று
இப்பொழுதே சீதையை மீட்டு செல்வேன் என மனதில் எண்ணினான். சீதையை சுற்றி வளைத்து
ராட்சசிகள் நின்று கொண்டார்கள். ராவணன் முன்பு தைரியமாக பேசிய சீதை சுற்றி
நெருங்கி நிற்கும் ராட்சசிகளின் அகோர உருவங்களை கண்டு பயந்து நடுங்கினாள்.

★ராட்சசிகள் சீதையிடம் பேச ஆரம்பித்தார்கள்.  ராவணன் உன்னை விரும்பும் பொழுது
நீ வேண்டாம் என்றா சொல்வாய் மூட பெண்ணே!. ராவணனை யார் என்று தெரிந்துக்கொள்.
பிரம்மாவின் புத்திரரான புலஸ்த்திய பிரஜாபதி யினுடைய பேரன் ராவணன். விச்ரவஸ்
ரிஷியின் மகன். அவர் சொல்படி கேட்டு நடந்து கொள். இல்லை என்றால் உன்னை கொன்று
விடுவார்கள் என்றாள் ஒரு ராட்சசி.

★இன்னோரு ராட்சசி, வானத்து  தேவர்களை எல்லாம் யுத்தம் செய்து துரத்தியடித்த
வெற்றி வீரன் எங்கள் ராவணன் உன்னை தேடி வருகிறார். சூரியனும், அந்த வாயுவும்,
அக்னியும்  கூட எங்கள் ராவணனை கண்டு மிகுந்த பயம் கொள்வார்கள். ராவணனுக்கு
சமமான வீரன் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை. இது உனக்கு தெரியவில்லையா?
தானாகவே ஒரு பாக்கியம் உன்னை வந்து சேருகிறது, அதை வேண்டாம் என்று நீ சொல்வது
மடத்தனமாக இருக்கிறது. கர்வப்பட்டு அழிந்து போகாதே. அவர் சொல்படி நீ கேட்கா
விட்டால், பிழைக்க மாட்டாய். இது நிச்சறம் என்றாள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை........................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtnsRGrq03F_VJ5jc6gP_Yuy0-4M3qOgvtz%3DfSORcKHNw%40mail.gmail.com.

Reply via email to