ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~~~~~
204 / 23-02-2026

தொடரும் அனுமனின்
உரையாடல்...

★ராமரும் லட்சுமணரும், என்னை ராவணன்  கவர்ந்து சென்ற செய்தி யினை எவ்வாறு
அறிந்தனர் எனக் கேட்டாள் சீதை. அதற்கு அனுமன், ராவணன் தூண்டுதலால் மாய மான்
போல் வந்த மாரீசனை ராமன் கொன்று விட்டார். ஆனால் அவனோ இறக்கும் தருவாயில்
சீதா! தம்பி லட்சுமணா! என கூறிக் கொண்டு இறந்தவிட்டான். தாங்களோ அது ராமர் என
நினைத்து இளவல் லட்சுமணரை கடிந்து பேசி ராமரை காண செல்லுமாறு அனுப்பிவிட்டீர்.

★பர்ணசாலை நோக்கி வரும்போது வழியில் லட்சுமணன்வருவதைக் கண்ட ஶ்ரீ ராமர்,
சீதையின் தூண்டு தலால் தான் லட்சுமணன் இங்கே வந்து உள்ளான் என்பதை புரிந்து
கொண்டார். பிறகு தங்களை தனியே விட்டு வந்ததால் அங்கு தங்களுக்கு ஏதேனும்
ஆபத்து நேர்ந்து விடுமோ என நினைத்து, இருவரும் மிக  விரை வாக பர்ண சாலை
வந்தடைந்தனர். அங்கு தங்களை காணாமல் ராமர் மிகவும் துன்பப்பட்டார். பிறகு
அவர்கள் இருவரும் தேரின் சுவடை வைத்து தெற்கு நோக்கி வந்தனர். அவர்கள் வரும்
வழியில் ஜடாயு உயிர் துறக்கும் நிலையில் இருப்பதைக் கண்டனர்.

★ஜடாயு அவர்களிடம் ராவணன் தங்களை கவர்ந்து சென்ற செய்தி யினைக் கூறினார்.
பிறகு ராமரும், லட்சுமணரும் தங்களை தேடி எங்களை வந்தடைந்தனர் என்றான்.  பிறகு
ராமரின் கட்டளைப்படி, சுக்ரீவன் தங்களை தேடச் சொல்லி ஒரு பெரும் வானரர்கள்
சேனையை எட்டுத் திசைகளுக்கும் செல்லுமாறு அனுப்பினார். தெற்கு திசையில் தங்களை
தேடி வந்த வானர சேனைக ளின் தலைவன் அங்கதன் ஆவான். அவன் தங்களை தேடும் பொருட்டு
என்னை இந்த இலங்கைக்கு அனுப்பினான். நான் தங்களை கண்டுபிடித்து விட்டு
வருவேன், என்று எனக்காக காத்துக் கொண்டி ருக்கிறார்கள் என்றான்.

★சீதை, அனுமன் சொன்னதை கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். மகிழ்ச்சியில்
ஆனந்த கண்ணீர் வடித்தாள். சீதை அனுமனிடம் ராமர் நலமாக உள்ளாரா? எனக கேட்டாள்.
ராமர் நலமாக உள்ளார். ஆனால் உங்களை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு
இருக்கிறார். லட்சுமணரும் மிக நலமாக உள்ளார். ஆனால் அவரும் உங்களை கஷ்டத் தில்
இருந்து காப்பாற்ற முடியாமல் போனதே என்ற வருத்தத்தில் உள்ளார் என்றான். இதைக்
கேட்ட சீதை, ராமனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைத்து மிகவும் வருந்தினாள்.

★அனுமனின் மென்மையான பேச்சானது காட்டுக் கூச்சல் கேட்டுப் பழகிய அவளுக்குத்
தெய்வ கீதம் கேட்பதுபோல் இருந்தது. அவள் உள்ளம் உருகியது. ராமன் பெயரைக்
கேட்டதும் அவளுக்கு வாழ்க்கையின் வாயில் தென்பட்டது. வேதங்கள் மறையவில்லை,
அவற்றின் நாதங் களை அவளால் கேட்க முடிந்தது.  நீதியும் அறமும் அழிய வில்லை,
நேர்மைகள் தழைக்கின்றன என்பதை உணர்ந்தாள்.  “ராமன் தன்னைக் கைவிடவில்லை,
உயிர்க் காவலனாய் இருக்கிறான்” என்பதை அறிந்தாள். மேலும் ராமனிடமிருந்து தான்
தூதனாக வந்ததையும், அவன்தான் அனுப்பி வைத்தான் என்பதையும் கூறி ராமன் திருமேனி
அழகைப் பற்றிக் கூறினான்;

★“ராமன் திருவடிகள் தாமரை மலரைப் போன்றும், பவழத்தைப் போன்றும் உள்ளன. கால்
விரல்கள் இளஞ்சூரியனைப் போன்றன. நகங்கள் வைரத்தினும் அழகியவை. கணுக்கால்
அம்பறாத் தூணியை போன்றன. தொடைகள் கருடனின் கழுத்தைப் போன்றன. உந்தி மகிழ
மலருக்கு ஒப்பாகும். மார்பு திருமகள் உறையும் இடமாகும். கைகள் ஐராவதம் என்னும்
யானையின் துதிக்கை போன்றவை. கை நகங்கள் அரும்பு போல கூர்மையானவை. தோள்கள் மலை
போன்றன. கழுத்து திருமாலின் கரத்தில் உள்ள சங்கு போன்றது. முகமும் கண்களும்
தாமரை மலர்கள் போன்றவை. பல்லுக்கு முத்தும், நிலவின் துண்டும் உவமைகள்.
குனித்த புருவம் வளைந்த வில் போன்றது. நெற்றி எட்டாம்நாள் சந்திரன் போன்றது.
நடைக்கு எருதும், யானையும் உவமை” என்றான்.

★அவனுடைய ஒவ்வொரு சொல்லும் அமுதத் துளிகளாய் அவளுடைய செவிகளில் நிறைந்தன. தேன்
துளி களாய் இனித்தன. “உன் அமுத மொழிகள் என் மனத்தை உருக்கி விட்டது. என்
உயிரைத் தளிர்க்கச் செய்து விட்டாய்,அனுமா!  வாழ்க நீ” என்று வாழ்த்தினாள்.
பின்னர் அனுமனை நோக்கி வேறு ஏதாவது கூற முடியுமா  என்று கேட்டாள். ராமனுக்கும்
சீதைக்கும் மட்டுமே தெரிந்த சுவையான அனுபவங்கள் சில ராமரால்  அனுமனிடம்
தெரிவிக் கப்பட்டு இருந்தன. அவற்றுள் இரண்டை அவன் எடுத்துரைத்தான்.

★நாட்டைவிட்டுக் காட்டுக்குச் சென்ற போது, அயோத்தியின் மதிலைக் கடக்கும்
முன்பு, “காட்டை அடைந்து விட்டோமா?” என்று கேட்ட குழந்தைத் தனமான சீதையின்
வினாவினை  நினைவுப்படுத்தினான். அடுத்து
சுமந்திரனிடம் பூச்செடிகளையும் கிளியையும். கவனித்துக் கொள்ளும் படி
தங்கையர்க்குச் சொல்லி அனுப்பிய அன்புச் செய்தியை அறிவித்தான். தன்
கூற்றுகளால் அவளை நம்ப வைத்த அனுமன், உறுதி தரும் அடையாளம் ஒன்றை யும் அவள்
முன் நீட்டினான்.

★ராமன் கை விரலை அழகு படுத்திய மோதிரமாய் அது இருத்தலைக் கண்டாள். அதை
அன்புடன் வாங்கிக் கொண்டாள். வஞ்சகர் நாட்டுக்கு வந்ததால் அது மாசு
பட்டுவிட்டதே என்று கூறி கண்ணீரால் அதனைக் குளிப்பாட்டினாள்.  அவள் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  இறந்தவர் உயிர் பெற்றது போலவும், இழந்த
மாணிக்கத்தைப் பெற்ற நாகத்தைப் போலவும், விழி பெற்ற குருடனைப் போலவும்,
பிள்ளையைப் பெற்ற மலடியைப் போலவும் அவள் விளங்கினாள்.

★“என் உயிரைத் தந்த உத்தமன் நீ” என்று அனுமனை அவள் பாராட்டினாள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை..................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddsu%2BN0aZcEvQu-3auUmyi67-83aeBFN-1XMR2tr%2BROm_Q%40mail.gmail.com.

Reply via email to