ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~~~~~~
205 / 24-02-2026

அனுமனிடம்
உரையாடிய சீதை...

★சீதை அனுமனிடம், மாருதியே! இவ்வளவு சிறிய உருவத்தைக்  கொண்ட நீ எவ்வாறு
இக்கடலை கடந்து வந்தாய்? எனக் கேட்டார். சீதை இவ்வாறு கேட்டதால் அனுமன் தன்
முழுமையான விஸ்வரூப  உருவத்தையும் காட்ட நினைத்தான். பிறகு அனுமன் வானை
முட்டும் அளவிற்கு தன் உருவத்தை வளர்த்து நின்றான். அனுமனின் உருவத்தைக் கண்ட
சீதை, பிரமித்து நின்றாள். தனக்கு நல்ல செய்தி கூறி ஆறுதல் அளிக்க வந்த
ரட்சகன் என நினைத் தாள். மாருதி! போதும், உன்னுடைய உருவத்தை ஒடுக்கிக் கொள்
என்று கூறினாள். அனுமன், தங்கள் வார்த்தையே எனக்கு கட்டளையாகும் எனக் கூறிக்
கொண்டு தன்னுடைய உருவத்தை மீண்டும் சிறிதாக்கி நின்றான்.

★அனுமன், சீதையிடம் விரைவில் ராமர்  இங்கு வந்து ராவணனை அழித்து தங்களை
மீட்பார், கவலை வேண்டாம் என்று கூறினான். ஶ்ரீ ராமரும் தன்னைப் பிரிந்து
மிகவும் துக்கத்தில் இருக்கிறாரே என்று சீதை வருந்தினாள். நீங்கள் ராமரிடம்
இருந்து கொண்டு வந்த செய்தி எனக்கு அமிர்தம் கலந்த விஷம் போல் உள்ளது. ராமர்
விரைவில் இங்கு வந்து என்னை சந்திப்பார், நான் அவரை நிச்சயம் பார்க்கப்
போகின்றேன் என்று மகிழ்வதா இல்லை, ஶ்ரீ ராமர் என்னை தன் மனதில் நினைத்து
துக்கத்துடன் இருக்கிறார் என்று வருத்தம் கொள்வதா என்று எனக்கு தெரியவில்லை
என்று கூறினாள்..

★மேலும் ராமர் என்னை சிறிதும் மறக்காமல் நினைத்துக் கொண்டிருக் கிறார், என்னை
தேடிக் கொண்டும் இருக்கிறார், என்ற செய்தி எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது. எனது
செய்தியாக நான் சொல்வதை அப்படியே ஶ்ரீராமரிடம் சென்று சொல்லுங்கள் என்று சீதை
சொல்ல ஆரம்பித்தாள். இந்த இலங்கையில் ராவணனின் தம்பி விபிஷணன் என்பவன் சீதையை
ராமரிடம் சென்று சேர்த்துவிடு இல்லை என்றால் ராட்சச குலம் அனைத்தும் ராமரால்
அழியும் என்று அரக்கன் ராவணனிடம் எவ்வளவோ அறிவுறை கூறினான்.

★ஆனால் ராவணன் அந்த ஒரு அறிவுரையைக்கூட கேட்கவில்லை. எனக்கு பன்னிரண்டு மாத
காலம் அவகாசம் அளித்திருக்கிறான். அதில் பத்து மாத காலம் முடிந்து விட்டது.
இன்னும் இரண்டு மாத காலம் மட்டுமே உள்ளது. அதற்குள் வந்து ராமர் என்னை
மீட்டுச் செல்ல வேண்டும் இல்லை என்றால் ராவணன் என்னை சமைத்து சாப்பிட்டு
விடுவதாக சொல்லிச் சென்று  இருக்கிறான் என்று சீதை பேசி முடித்தாள்.

★அனுமன், சீதையிடம் பேச ஆரம்பித்தான். இந்த கடலை சில கணத்தில் நான் தாண்டிச்
சென்று தங்களின் செய்தியை ராமரிடம் சொல்லி விடுவேன். ராமர் விரைவில் பெரும்
சேனையுடன் இலங்கைக்கு வந்து விடுவார். ஆகவே தாங்கள் சிறிதும்
கவலைப்படாதீர்கள். அரக்கன் ராவணனோடு சேர்த்து இந்த இலங்கை நகரத்தையே மொத்தமாக
தூக்கிக் கொண்டு போய் ராமரிடம் சேர்க்கும் வல்லமை என்னிடம் இருக்கிறது.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய முதுகில் ஏறி அமர்ந்து கொள்ளுங் கள்.
நான் இப்போதே இந்த கடலைத் தாண்டிப் போய் ஶ்ரீ ராமரிடம் உங்களைச் சேர்த்து
விடுவேன்.

★அதற்கான போதிய பலம் என்னிடம் இருக்கிறது. சிறிதும் தங்களுக்கு சந்தேகம்
வேண்டாம். எனக்கு  உத்தர விடுங்கள் தாயே! இப்பொழுதே இதனை செய்து முடிக்கிறேன்.
கடலை தாண்டும் போது என்னை தடுக்கும் பலம் இங்கு யாருக்கும் இல்லை. இன்றே
தாங்கள் ராமரை சந்தித்து விடலாம் என்று அனுமன் சொன்னதை கேட்ட சீதை, ஆற்றல்
மிகுந்த மாருதியே! உன் ஆற்றலுக்கு இச்செயல் ஏற்றது. ஆனால் ஒரு பெண்ணாகிய நான்
இந்தச்செயலை செய்யக்கூடாது என எண்ணுகிறேன். நீ என்னை தோளில் சுமந்து போகும்
வழியில் அரக்கர்கள் யாரேனும் தடுக்கும்போது நான் கீழே விழவும் வாய்ப்பு
உள்ளது.

★இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. நான் உன்னுடன் வந்தால் ராமனின் வில்லுக்கும்,
வீரத்திற்கும் வீண் பழி உண்டாகும். ராவணன் என்னை பிறர் அறியா வண்ணம் கவர்ந்து
வந்தது போல் நீயும் என்னை பிறர் அறியா வண்ணம் அழைத்து செல்கிறேன் என்கிறாய்.
இதை மற்றவர்கள் நியாயம் என்று சொல்வார்களா? நான் என் ராமனை தவிர வேறு எந்த
ஆண்மகனையும் தீண்ட மாட்டேன். வானரமானாலும் நீயும் ஓர் ஆண்மகன். நான் எவ்வாறு
உன் தோளில் அமர்ந்து வருவேன்? ராமன் இங்கே வந்து கொடிய அரக்கர்களை அழித்து,
ராவணனை வென்று என்னை அழைத்துச் செல்வது தான் சிறப்பு என்றாள்.

★ராவணனாலும் என்னை தீண்ட முடியாது. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவன்
தீண்டினால் அவனுடைய பத்து தலைகளும் வெடித்து விடும். இது பிரம்மன் அவனுக்கு
கொடுத்த சாபமாகும். ராவணன் பெற்ற சாபத்தால் தான் நான் இன்னும் உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன் என்றாள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை..................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtVhfWABNTbxnE1o%3DhSZWWOwro6p7dSA-CKy80-qDBEMQ%40mail.gmail.com.

Reply via email to