ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
207 / 26-02-2026

சீதையின் அறிவுரை...

★தாயே! அரக்கன்  ராவணனின் கட்டளையாக இருந்தாலும் இவர்கள் செய்தது தவறு தானே.
அதற்காக அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டாமா? என வாதிட்டார். அதற்கு சீதை
அனுமனே நீ சொல்வது போல் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றால் முதலில்
ராமரையும், பிறகு என்னையும் உன்னையும் கூட தண்டிக்க வேண்டும் என்றாள் சீதை.

★திடுக்கிட்ட அனுமன், ராமர் என்ன தவறு செய்தார்? என கேட்டார். ராவணன் என்னும்
கொடிய ராட்சசனிடம் , தன் பதிவிரதையான மனைவி சிக்கியிருக்கிறாள், அவளுக்கு
ஆபத்து இருக்கிறது என்று தெரிந்ததும் சிறிதும் காலம் தாழ்த்தாமல் ஓடிவந்து
என்னை காப்பாற்றாமல், ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடைய ஆட்களை எல்லா
திசைகளிலும் அனுப்பி தேடிக் கொண்டு காலம் கடத்திக் கொண்டிருக்கிறாரே, இது அவர்
செய்த குற்றமல்லவா? என சீதை பதிலளித்தாள்.

★அனுமன் திகைத்து சீதையின் பதிலை ஆமோதித்துக் கொண்டு, சரி, பதிவிரதையான
தாங்கள் என்ன தவறு செய்தீர்கள்? என்று கேட்டார். எந்த பெண்ணும் தன் கணவரைப்
பற்றி அடுத்தவரிடம் குறை கூறக் கூடாது. ஆனால் தற்போது உனக்கு புரிய வைக்க
வேண்டும் என்ற ஒரேஒரு காரணத்தினாற்காக ராமரைப் பற்றி உன்னிடம் நான் குறை
சொல்கிறேன். இது நான் செய்த தவறு தானே என்றாள்.

★மேலும் திகைத்த அனுமன், நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டார். அரசன் இட்ட
பணியைச் செய்வது இந்த ராட்சசிகளின் கடமை. அதனை நன்கு செய்து கொண்டிருக் கும்
ராட்சசிகளை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று நீ நினைத்தது குற்றம். தவறு
செய்யாத வர்களே இவ்வுலகில் இல்லை. தவறு செய்வது மனித இயல்பு. அதை உணர்ந்து
மனம் வருந்தி அதை திருத்திக் கொள்வதே சிறந்த மனிதனின் அடையாளம் என்றாள் சீதை.
இதைக் கேட்ட அனுமன் தனது கோபத்தை விட்டு ராட்சசிகளை துன்புறுத்தாமல்
இருக்கிறேன் ஆனால் இந்த இலங்கையை சிறிதளவாவது சேதப்படுத்திச் செல்கிறேன் என்று
கூறி சீதையை வணங்கி அவளிடம் அனுமதி பெற்று அங்கிருந்து விடைபெற்றான்.

★நான் உயிரோடு இருக்கிறேன் என்ற செய்தியை ராமர் லட்சுமணனி டம் சொல்லி விரைவாக
அவர்களை இங்கே அழைத்துவா! உனக்கு ஜெயம் உண்டாகட்டும் என்று வாழ்த்தி
அனுமனுக்கு அனுமதி கொடுத்தாள் சீதை. அங்கிருந்து கிளம்பினான் அனுமன். பின்னர்
அசோகவனத்தின் மதில் மேல் அமர்ந்து சிறிது நேரம் யோசித்தான். ராமனிடம் சென்று
சீதை இருப்பிடம் பற்றிய செய்தியைச் சொல்லி அனைத்து வானர படைகளுடன் இந்த
இலங்கைக்கு வரும் வரை சீதை சுகமாக இருக்க வேண்டும். சீதையை யாரும்
துன்புறுத்தக் கூடாது. இதற்காக  என்ன செய்ய லாம் என்று சிந்தனை செய்தான்.

★செல்வத்திலும்,  போகத்திலும், சுகத்திலும்  இருக்கும் கொடிய ராட்சசர்களிடம்
சமாதான வழியில் பேசிக் கொண்டிருக்க முடியாது. அரக்க ராவணன் எப்பொழுதும் போல்
கர்வம் கொண்டவனாக தினந்தோறும் வந்து மாதா சீதையை துன்பப் படுத்துவான்.
ராவணனுக் கும், அவனுடைய ராட்சதர்களுக்கும்  மிக்க பயத்தை உண்டாக்கி விட
வேண்டும். அப்படி செய்தால் ராவணனும், ராட்சசிகளும் சீதையை எந்த விதத்திலும்
துன்புறுத்த மாட்டார்கள். மாதா சீதையை கண்டு மிக்க பயம்  கொள்வார்கள். நான்
இப்போது இங்கு வந்தது கூட ராவணனுக்கு தெரியாது. நாம் வந்து சென்ற அடையாளத்தை
ஏற்படுத்தி விட்டு, பயத்தை உண்டாக்கி விடலாம் என்று எண்ணினான்.

★இந்த காரியத்தை சிறிது நேரத்தில் முடித்து விட்டு, விரைவில் ஶ்ரீராமர்
இருக்கும் இடம் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தான் அனுமன். நான் மாதா
சீதையைத் தேடி கண்டு பிடித்து விட்டேன். இப்பொழுது ராவணன் பற்றியும் அவனின்
பலத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் ராமர் போர் புரிய
எவ்வளவு பலம் தேவைப் படும் என்பது தெரியும். அதற்கு நான் ஏதாவது செய்ய
வேண்டும். அரக்கர் களை தொல்லை செய்யலாம் என எண்ணினான். பிறகு வேண்டாம் என
நினைத்து விட்டு இவ்வளவு அழகு மிகுந்த இந்த அசோக வனத்தை அழித்தால் போதும்
ராவணன் நிச்சயம் வர வாய்ப்பு உள்ளது என நினைத்தான்.

★உடனே அனுமன் அசோக வனத்தை முற்றிலும் நாசம் செய்தான். இப்படி அனுமன் அசோக
வனத்தை நாசம் செய்து கொண்டிருக்கும்போது தூங்கி கொண்டிருந்த அரக்கிகள்
விழித்துக் கொண்டனர். அப்போது மேரு மலையை போல் இருந்த அனுமனை கண்டு அந்த
அரக்கிகள் பயந்தனர்.உடனே அவர்கள் சீதை யிடம் சென்று, பெண்ணே! இவன் யார் என்று
உனக்கு தெரியுமா? இவன் எப்படி இங்கே வந்தான்? என கேட்டனர். இதற்கு சீதை, மாய
உருவம் எடுக்கும் அரக்கர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் வந்தார்கள்?
என்ன செய்தார்கள்? என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி விட்டாள்.

★உடனே அரக்கிகள் மன்னன் ராவணனிடம் ஓடிச்சென்று, மன்னரே! ஓர் வானரம் நம்
அசோகவனத்தில் சீதையின் இருப்பிடத்தை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லா
இடத்தையும்  நாசம் செய்து விட்டது எனக் கூறினார்கள். இதைக்கேட்ட இராவணன்
எவரும் செல்ல முடியாத அசோக வனத்தை ஓர் வானரம் நாசம் செய்து விட்டது என
என்னிடம் வந்து வெட்கம் இல்லாமல் மூடத்தனமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்
என்றான். அப்போது அனுமன் உலகம் அதிரும்படியான ஒரு கூக்குரலை எழுப்பினான்.
இக்குரல் இராவணனின் காதிலும் விழுந்தது.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை......................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtfT8CJAOvduyn7UnrX3Td43%2Bja1Zs6beWsXsSa5Aqt1A%40mail.gmail.com.

Reply via email to