ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~~~~~~
209 / 28-02-2026

ஜம்புமாலி வதம்...

★இஷ்வாகு குலத்தின் ராஜ குமாரன் ராமரின் பகையை அரசன் ராவணன் சம்பாதித்துக்
கொண்டான். அதன் விளைவாக என்னைக் காட்டிலும் மிகவும் வலிமையான வானரர்கள்
சுக்ரீவன் தலைமையில் வரப் போகின்றார்கள். உங்களையும் உங்கள் நகரத்தையும்
அழிக்கப் போகின்றார்கள் என்று அனுமன் கர்ஜனை செய்தார். அனுமனின் சத்தத்தில் பல
ராட்சதர்கள் ஓடி ஒளிந்தனர்.

★இதனைக் கேட்ட ராவணனின் முகம் கோபத்தால் சிவந்தது. ராட்சதர்களின் நிகரற்ற
வீரனான பிரகஸ்தனுடைய மகனான ஜம்புமாலி என்ற அரக்கனை அழைத்து, அந்த வானரத்தின்
கொட்டத்தை அடக்கிவிட்டு வா என்று உத்தரவிட்டான் ராவணன்.
நீ குதிரைப்படையுடன் சென்று அக்குரங்கை கயிற்றால் கட்டி இங்கு அழைத்து வா!
அப்போது தான் என்னுடைய கோபம் தணியும் என்றான். ராட்சசன் ஜம்புமாலி கவசம்
அணிந்து கொண்டு தனது கொடூரமான ஆயுதங்களுடன் அசோகவனம் கிளம்பினான். தன் படையை
அழைத்துக் கொண்டு அனுமன் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் ஜம்புமாலி.

★அனுமன் இருக்கும் இடத்திற்கு ஜம்புமாலி தனது படைகளோடு வந்து சேர்ந்தான்.
பெரிய கோவேறு கழுதைகள் பூட்டிய தேரில் ஆயுதங்களுடன் வந்து இருக்கும் ராட்சசனை
பார்த்த அனுமன் தாக்குதலுக்கு தயாரானான். அனுமன் தன் பக்கத்தில் இருந்த
இரும்புத் தடியை கையில் எடுத்துக் கொண்டான். தன்னிடம் போர் புரிய வந்த கொடிய
அரக்கர்கள் எல்லோரையும் இரும்புத் தடியால் ஓங்கி அடித்துக் கொன்றான்.
கடைசியில் ஜம்புமாலி மட்டும் இருந்தான்.அனுமன் அவனிடம், உயிர் மேல் ஆசை
இருந்தால் இங்கிருந்து தப்பி ஓடிச்செல் என்றான். ஆனால் ஜம்புமாலி அங்கிருந்து
கோழை போல் ஓடாமல் அனுமன் மீது வேகமாக அம்புகளை ஏவினான்.

★ஒரு அம்பு அனுமனின் உடம்பை தாக்கி லேசாக ரத்தம் வந்தது. இதனால் மிகவும்
கோபமடைந்த அனுமன் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து ஜம்புமாலி மீது
எறிந்தார். ஒரு அம்பால் அந்த பெரிய கல்லை தூளாக்கினான் ஜம்புமாலி.  தன்னை
நோக்கி வந்த அம்புகளை அனுமன் தன் இரும்புத் தடியால் தடுத்தான். ஜம்புமாலி தன்
அம்பால் அனுமனிடம் இருந்த இரும்புத் தடியையும் ஒடித்து விட்டான்.

★இதனால் சற்று சளைத்து நின்ற அனுமன், ஓடிச்சென்று  ஒரு பெரிய ஆச்சா மரத்தை
வேரோடு பிடுங்கி தேரின் மீது வீசினார். தேர் இருந்த இடம் தெரியாமல் பொடிப்
பொடியாய் போனது.  ஜம்புமாலியின் பெரிய ராட்சத உடம்பு நசுங்கி, கை கால் தலை என
அடையாளம் சிறிதும் தெரியாமல் அனைத்தும் தரையோடு தரையாக அழுந்தி பிண்டமானது.
உடன் வந்த  வீரர்கள் அனைவரையும் அழித்தான் அனுமன். யுத்தத்தின் முடிவில்
ஜம்புமாலி இறந்த செய்தியை அரக்கர்கள் ஓடிச் சென்று  ராவணனுக்கு தெரிவித்தனர்.

★வலிமையான வீரன் ஜம்புமாலி இறந்த செய்தியை கேட்ட ராவணன் திகைத்தான். ஒரு
குரங்கு தன் அரக்கர்களையும் மற்றும் ஜம்புமாலியையும் கொன்றதை அறிந்து ராவணன்
மிகவும் கோபங்கொண்டான். உடனே ராவணன் தானே சென்று அந்த குரங்கைப் பிடித்து
வருவதாக கூறினான். இதைக் கேட்ட விரூபாட்சன், யூபாசன், துர்த்தரன், பிரகசன்,
பாசகர்ணன் என்னும் ஐந்து சேனைத் தலைவர்களும், அரசே! தாங்கள் போய் ஒரு
குரங்கிடம் போர் புரிவதா! தாங்கள் இங்கேயே இருங்கள் நாங்கள் சென்று அந்த
குரங்கைப் பிடித்து வருகிறோம் எனக் கேட்டுக் கொண்டனர்.

★சேனைத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதிற்கு இணங்கி ராவணன் அவர்கள் போருக்கு
செல்வதற்கு சம்மதித்தான். வந்திருக்கும் வானரம் ஒரு மிருகம் போல் தெரியவில்லை.
ஏதோ புதிதாக தெரிகின்றது. என்னுடைய பழைய பகைவர்கள் ஆன தேவர்களின் சதியாக
இருக்க வேண்டும்.  ஒரு புது வகையான பிராணியை உருவாக்கி இங்கு அனுப்பி
இருக்கிறார்கள். இந்த கொடிய வானரத்தை கட்டாயம் பிடித்து, என் முன் கொண்டு வநது
நிறுத்த  வேண்டும் என்று தனது மிகுந்த வலிமையான ராட்சத வீரர்களையும்,
அவர்களுக்கு துணையாக மிகப் பெரும் சேனையையும் அனுப்பினான் ராவணன்.

★பிறகு ஐந்து சேனைத் தலைவர்கள் தங்களின் அரக்க படைகளையும் சேர்த்து  திரட்டிக்
கொண்டு அனுமன் இருக்கும் இடத்திற்கு புறப்பட்டனர். மிகப் பெரிய ராட்சதர்களின்
கூட்டம் பெரும் படைகளாக அசோக வனம் நோக்கி சென்றார்கள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை..................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduiWb1RZq-k11_918tO7eds4zGpg95xft0QW8U-pz30mQ%40mail.gmail.com.

Reply via email to