ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~
210 / 01-03-2026

அட்சயகுமாரன்...

★அனுமன் ஒரு பெரும் அரக்கர் படை வருவதை கண்டு, அவர்கள் அனைவரையும் நான்
அழிப்பேன் என மனதில் நினைத்துக் கொண்டான். அந்த அரக்கர் படை அனுமனை எதிர்க்
கொண்டது. இச்சிறிய குரங்கா அரக்கர்களை அழித்தது என ஆச்சர்யப்பட்டனர். அனுமன்
தன் உருவத்தை மிகப்பெரிய உருவமாக மாற்றிக் கொண்டான். இதைப் பார்த்த அரக்கர்கள்
மிகவும் கோபம் கொண்டு அனுமன் மீது கூரிய அம்புகளையும், ஏராளமான ஆயுதங்களையும்
எய்தினர்.

★ஆனால் அந்த அம்புகளும், ஆயுதங்களும் வலிமைமிக்க அனுமனை ஒன்றும் செய்ய
இயலவில்லை. அனுமனை பல வகையான கொடிய ஆயுதங்கள் கொண்டு தாக்கினார்கள். அந்த
ராட்சதர்களின் எந்த விதமான ஆயுதத்தாலும் வஜ்ராயுதம் போல் இருந்த அனுமனை
கட்டுப்படுத்த முடியவில்லை. அனுமன் வழக்கம் போல் மரங்களை வேரோடு பிடுங்கி
அவர்கள் மீது எறிந்தும், பெரிய பாறைகளை தூக்கி வீசியும், சிலரை தனது கால்களால்
பலமாக மிதித்தும் கொன்றான். மீண்டும் அனுமனைத் தாக்க அரக்கர்கள் அலை போல்
வந்தனர். உடனே தன் பக்கத்தில் இருந்த தூணை கையில் எடுத்துக் கொண்டு அரக்கர்களை
வீழ்த்தினான்.

★அரக்கர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, சேனைத் தலைவர்கள் ஐவரும் அனுமனை
சூழ்ந்து அவன்மீது அம்புகளை எய்தினர். அனுமன் தன்னை நோக்கி வந்த அம்புகளை தன்
கையால் தடுத்தான். அந்த அசோக வனத்திற்குள் மிகக்  கடுமையான போர் நடந்தது.
அனுமன் தன்னைத் தாக்கிய ஐந்து சேனைத் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தன் இரு
கைகளால் அடித்துக் கொன்று வீழ்த்தினான். அவர்களுடன் வந்து, மீதி இருந்த
அரக்கர்களில் உயிர் பிழைத்தவர்கள் பயந்து ஓடி விட்டார்கள். அனுமன் மீண்டும்
அசோகவனத்தின் மதில் சுவற்றின் மீது அமர்ந்து கொண்டார்.

★தாங்கள் குரங்கை பிடித்து கொண்டு வருவதாக சென்ற ஐந்து சேனைத் தலைவர்களும்
மாண்ட செய்தியை அறிந்த ராவணன் மிகவும் கோபம் கொண்டான். அச்செய்தி,  அவன்
மனதில்  சஞ்சலத்துடன் கூடிய  சிறிது பயத்தை கொடுத்தது. ஒரு தனி வானரம் எப்படி
இவ்வளவு பலமுடனும் பராக்கிரமத்துடனும் இருக்கின்றது?. தலை சிறந்த
சேனாதிபதிகளையும், அரக்க  வீரர்களையும் கொன்றது சாரணமான நிகழ்வு அல்ல.
தேவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கின்றார்கள் என்று ராவணன் கவலையுடன்
இருந்தாலும் தன் கவலையை முகத்தில் காட்டாமல் சிரித்த முகத்துடன் அனுமனை ஏளனம்
செய்து சிரித்தான்.

★தன் சபையில் இருப்பவர்களை சுற்றிப் பார்த்தான்.  பிறகு ராவணன் தானே சென்று
அந்த அனுமனை தாக்கி இழுத்து  கொண்டு வருவதாக மீண்டும் கூறினான். அப்போது
அவையில் ராவணனின் இளைய மகன் அட்சயகுமாரன் மிக உற்சாக மாக எழுந்து நின்றான்.
தந்தையே! இந்த வாய்ப்பை எனக்கு அளிக்க கோருகிறேன். அக்குரங்கை அழித்து பேரும்,
புகழும் நான் பெறுவேன். அந்த வானரத்தை நான் தனியாக சென்று பிடித்து
வருகின்றேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று ராவணனிடம் கேட்டான்.
யுத்தத்திற்கு சிறிதும் பயப்படாமல் தைரியமாக முன் நின்ற தன் வீர மகனைப்
பார்த்து பெருமை கொண்ட அரக்க ராவணன்,தன் மகனை கட்டித் தழுவி விடை கொடுத்தான்.

★தேவர்களுக்கு சமமான வாலிப வீரனான அட்சயகுமாரன் தான் தவம் செய்து பெற்ற
தன்னுடைய எட்டு குதிரைகள் பூட்டிய தங்க ரதத்தில் ஏறி அசோக வனத்தை நோக்கிச்
சென்றான். மிகச்சிறிய ஒரு சாதாரண  வானரத்துடனே போர் புரியப் போகின்றோம், சில
கணத்தில் அந்த வானரத்தை பிடித்து விடலாம் என்ற அலட்சிய எண்ணத் தில் இருந்தான்
அட்சய குமாரன். அவனுடன் மிகப்பெரிய ராட்சதப் படைகள் பின்னே அணி வகுத்துச்
சென்றது. இலங்கேசன் ராவண குமாரனான இளவரசன் அட்சய குமாரன் தேரில் ஏறும் போது
அவனுடன் ஏராளமான இளைஞர்க ளும், சேனைத் தலைவர்களின் மைந்தர்களும், நான்கு
இலட்சம் வீரர்களும் உடன் சென்றனர்.

★அனுமன் தன்னை நோக்கி வரும் பெரும்படையைக் கண்டு, வருவது ராவணன் அல்லது
இந்திரஜித் ஆக இருக்கக் கூடும் என நினைத்தான். இவர்களிடம் போர் புரிவதை
நினைத்து அனுமன் மகிழ்ந்தான். அவர்கள் சிறிது பக்கத்தில் வந்தவுடன் தான்
தெரிந்தது அது ராவணன் இல்லை, இந்திரஜித்தும் இல்லை என்று. அனுமன் வருபவன்
யார்? என உற்று நோக்கினான். அனுமனை பார்த்த அட்சய குமாரன், இச்சிறிய குரங்கு
தான் அரக்கர்களை கொன்றதா? என ஏளனமாக கேட்டான்.

★உடனே அனுமன் அவனிடம், ஐயனே! தங்கள் அரசனான ராவணனை வென்ற வாலியும் குரங்கு
தான் என்பதை உனக்கு சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஆதலால் இதை மனதில்
வைத்துக்கொண்டு  போர் புரியுங்கள் என்றான்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை..................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtbhFJfg7GAwTgFk-oszbJ0ccH5PGuR2HYB0-S-Dvbjxw%40mail.gmail.com.

Reply via email to