ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~~~~ 212 / 03-03-2026
இநதிரஜித்... ★அரசே! அந்த குரங்கின் மிகுந்த வலிமையை அறிந்த பின்பும் தாங்கள் அரக்கர்களை அந்த கொடிய குரங்கிடம் அனுப்பி, எமலோகத்திற்கு அவர்களை அனுப்புகிறீர்கள். அப்படித்தான் கிங்கர அரக்கர்கள், ஐந்து சேனைத்தலைவர்கள், என் தம்பி அட்சய குமாரன் என ஒருவர் பின் ஒருவராக இறந்து போயினர். இவ்வளவு பேரையும் கொன்ற பிறகு அக்குரங்கை சும்மா விடுவது சரியல்ல. நான் சென்று அக்குரங்கை கணப்பொழுதில் பிடித்து வருகிறேன். தாங்கள் வருந்த வேண்டாம் என்றான் இந்திரஜித். ராவணன் அவனை கட்டித் தழுவிக் கொண்டு பேச ஆரம்பித்தான். ★இந்திரனுக்கு சமமான வீரன் நீ ஆவாய். அனைத்து விதமான அஸ்திரங்களையும் நன்றாக பயின்று அதனை அடைந்து இருக்கிறாய். நம்மை எதிர்த்த தேவர்களையும் அசுரர்களையும் யுத்தத்தில் வென்றிருக்கிறாய். பிரம்மாவை, கடின தவம் செய்து பூஜித்து அவரிடமிருந்து உயர்ந்த பிரம்மாஸ்திரம் பெற்று வந்து இருக்கின்றாய். உன்னை எதிர்த்து யுத்தம் செய்யக் கூடிய வீரர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அறிவில் சிறந்த நீ காரியங்களை மிகச் சரியாக யோசனை செய்வதில் உனக்கு நிகர் யாருமில்லை. ★அசோக வனத்தில் ஒரு துஷ்ட வானரம் நம்மை எதிர்த்துக் கொண்டு இருக்கிறது. இது அந்த தேவர்களின் சூழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் அனுப்பிய கிங்கரர்கள், ஜம்புமாலி, நம்முடைய , வீரமான சேனாதிபதிகள் 5 பேர், உனது அருமை தம்பி அட்சயகுமாரன் ஆகிய அத்தனை பேரும் அந்த வானரத்தால் கொல்லப்பட்டனர். நீ தான் அந்த துஷ்ட வானரத்தை வெல்லும் வல்லமை அதிகமாக கொண்டவன். அந்த வானரத்தை நமது சேனைகளின் பலத்தால் வெல்ல முடியாது. அந்த கொடிய வானரத்தின் அறிவாற்றலையும், வல்லமையையும் அத்துடன் அதன் பராக்கிரமத்தையும், சிந்தித்து பார்த்து உன்னுடைய தவ பலத்தை உபயோகித்து, சிறந்த அஸ்திரத்தை பயன் படுத்தி, கைது செய்து இங்கே வெற்றியுடன் திரும்பி வா என்று சொல்லி இந்திரஜித்தை அனுப்பி வைத்தான் ராவணன். ★இந்திரஜித், தந்தையை வலம் வந்து ஆசி பெற்றுக்கொண்டு நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில் நின்று, வில்லின் நானை இழுத்து சப்தம் செய்து, அசோக வனத்தை நோக்கிச் சென்றான். அவன் பின்னே பெரும் ராட்சத சேனைகள் பெரும் கூட்டமாக வந்தார்கள். அனுமனுக்கு வெகு தூரத்தில் ஒரு கூட்டம் வருவது தெரிந்தது. மீண்டும் யுத்தம் செய்வதற்கு தயாரானான். இந்திரஜித்தின் அரக்கர் படைகள் அனுமனை சூழ்ந்துக் கொண்டன. ★அனுமன் தன் விஸ்வரூபத்தை எடுத்தான்.அனுமன் தன் அருகில் இருந்த ஆச்சா மரத்தை பிடுங்கி அரக்கர்களிடம் போரிட்டான். அரக்கர் படை அனைத்தையும் கொன்றான். பிறகு அனுமன் தன் தோள்களைத் தட்டி என்னிடம் போருக்கு வாருங்கள் என முழக்கமிட்டான். அரக்கர்களுக்கு அழிவு வந்துவிட்டது என்றான். இதைக்கேட்ட இந்திரஜித், உன் எண்ணத்திற்கு நான் முடிவு கட்டுகிறேன் எனக்கூறி அனுமன் மீது அம்புகளை ஏவினான். இந்திரஜித் தன்னுடைய வில்லை எடுத்து அம்புமழை பொழிந்தான். அனைத்து அம்புகளில் இருந்தும் அனுமன் லாவகமாக தப்பினான். ★சில அம்புகள் அனுமன் மீது பட்டாலும் அந்த அம்புகளால் அனுமனின் வஜ்ரம் போன்ற உடம்பை துளைக்க சிறிதும் முடியவில்லை. இந்திரஜித் விட்ட அம்புகள் அனைத்தும் பயன் அற்றுப் போனது. ராட்சதர்கள் ஏற்படுத்திய பேரிகை, முரசு மற்றும் நாணோசை ஆகிய பெரும் சத்தங்களுக்கு எதிராக அனுமனின் கர்ஜனை சத்தம் பெரிதாக இருந்தது. வீரர்கள் இருவருக்கிடையிலும் நடந்த யுத்தம் இருவரின் அபரிமிதமான சாமர்த்தியத்தையும், அற்புதமான வலிமையையும் காட்டியது. யுத்தம் நீண்டு கொண்டே சென்றது. ★அனுமன் தன் உடலை மிகவும் பெரிதாக்கிக் கொண்டே சென்றான். இந்திரஜித்தால் அனுமனை பாதிக்குமேல் காண முடியவில்லை. பிறகு அனுமன், ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இந்திரஜித் மீது எறிந்தான். இதனால் இந்திரஜித்தின் மணிமுடிகள் உடைந்து கீழே விழுந்தன. இதனால் மிகுந்த கோபங்கொண்ட இந்திரஜித் அனுமன் மீது ஆயிரக்கணக்கான பாணங்களை ஏவினான். அனுமன், இந்திரஜித்தை அவன் நின்றிருந்த தேரோடு தூக்கி எறிந்தான். தரையில் விழுந்த இந்திரஜித் எழுந்து வானில் சென்றான். ★என்ன செய்வதென தெரியாத நிலையில் இந்திரஜித், மனதில் சிந்திக்கத் தொடங்கினான். எத்தனை அம்புகள் விட்டாலும் இந்த வானரத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. தந்தை சொன்னது முற்றிலும் சரியே. நமது தவத்தினால் பெற்ற அஸ்திரத்தை உபயோகித்து இந்த வானரத்தை அடக்க வேண்டும் என்று ஓர் முடிவு செயதான். அனுமன் மீது திவ்ய பிரம்மாஸ்திரத்தை ஏவ மனதில் நினைத்தான். அதனால் அந்த பிரம்மாஸ்திரத்திற்கு விஷேச அர்ச்சனைகளும், பூஜைகளும், வழிபாடுகளும், செய்து வணங்கி அந்த பிரம்மாஸ்திரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டான் ராவணன் மைந்தன் இந்திரஜித். வணக்கத்துடன் நாக சுபராஜராவ் 9944110869. நாளை...................... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvgpMRjM8x3fYC_CD7_8peb9N0gOpY1-Vyaaak2Ravrqg%40mail.gmail.com.
